வியாழன், 26 ஜனவரி, 2012

தமிழக காங். விஜூ:கேரளா தான் முக்கியம்

""தமிழக காங்கிரஸ் நடத்தும், முல்லைப் பெரியாறு அணை போராட்டத்தில் என்னால் கலந்துகொள்ள முடியாது. கலந்து கொண்டால், கேரள அரசியலில் எனக்கு சிக்கல் ஏற்படும். அதனால், என்னை விட்டு விடுங்கள்,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில், மேலிடப் பொறுப்பாளர் விஜூ பேசினார்.
தமிழக இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம், சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று நடந்தது. மேலிட பொறுப்பாளர் விஜூ, மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா உட்பட, 22 பேர் கலந்து கொண்டனர்.


என் கேள்விக்கு என்ன பதில்: கூட்டம் ஆரம்பித்ததும், மாவட்ட தலைவர் ஒருவர் பேசும் போது, "உள்ளாட்சித் தேர்தலில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கவுன்சிலர் சீட் வழங்கிவிட்டு, பின் அதை மாற்றிக் கொடுத்தது ஏன்? சத்தியமூர்த்திபவனை தாக்கும்படி உத்தரவிட்டது யார்? முதலில் இந்த கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு, கூட்டத்தை நடத்த வேண்டும்' என, சத்தமாக பேசினார். இதனால், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூச்சல் எழுப்பினர்.

அய்யோ குய்யோ வேணாம்: அப்போது, கூட்டம் நடந்த அறைக்குள் நுழைந்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், "சண்டை போடும் இடம் சத்தியமூர்த்திபவன் இல்லை. அய்யோ... குய்யோ... என, யாரும் கத்தி பேசக் கூடாது. அப்படி உங்கள் பிரச்னை பற்றி பேச வேண்டும் என்றால், வெளியே பேசுங்கள். நான் ராகுலிடம் சொல்லி விடுவேன்' என கண்டித்து விட்டு, அவரது அறைக்கு சென்றார். சிறிது நேர அமைதிக்குப் பின், மீண்டும் கூட்டம் துவங்கியது.

"சீட்'டு தான் முக்கியம்: மாவட்டத் தலைவர்களில் சீனியர் ஒருவர் பேசும் போது, "கடந்த சட்டசபை தேர்தலில் யுவராஜா, விஜய், வரதராஜன் உட்பட ஐந்து புதியவர்களுக்கு சீட் வழங்கப்பட்டது. சீனியர்கள் பலருக்கு சீட் வழங்கவில்லை. வரும் பார்லிமென்ட் தேர்தலில், அப்படியொரு நிலை ஏற்பட்டுவிடக் கூடாது. கட்சிக்கு நீண்ட காலமாக உழைத்த சீனியர்களுக்கு சீட் வழங்க வேண்டும். கூட்டணி யில் ஒதுக்கப்படும் சீட்டுகளில், 25 சதவீதத்தை இளைஞர் காங்கிரசுக்கு பெற்றுத்தர வேண்டும்' என்றார்.

மற்றொரு மாவட்டத் தலைவர் பேசும் போது, "இளைஞர் காங்கிரசாருக்கு என, டில்லி தலைவர்கள் எதுவும் செய்யவில்லை. திராவிட கட்சிகளில் உள்ள இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு இருக்கும் மரியாதை, எங்களுக்கு கிடைக்கவில்லை. மக்களுக்கும் நாங்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை. கட்சியில் எங்களுக்கு அங்கீகாரம் தர வேண்டும்' என்றார்.

"சர்டிபிகேட்' எங்கப்பா? பெண் நிர்வாகி ஒருவர் பேசும் போது, "இளைஞர் காங்கிரசார் நடத்திய 55 நாள் பாத யாத்திரையில், 155 பேர் பங்கேற்றனர். நானும் நடந்து வந்தேன். பாத யாத்திரை முடிவில், டில்லி தலைவர்கள் யாரும் வரவில்லை. சர்டிபிகேட்டும் தரவில்லை' என குற்றம் சாட்டினார்.

எனக்கு கேரளா தான் முக்கியம்: "கூடங்குளம் பிரச்னையில், காலதாமதமான முடிவுகளை எடுக்கிறோம். முல்லைப் பெரியாறு பிரச்னையில், கேரள அரசுக்கு எதிராக நாம் போராட்டம் நடத்த வேண்டும்' என, மாநில நிர்வாகி ஒருவர் கூறியதும், மேலிட பொறுப்பாளர் விஜூ எழுந்து, "முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், உங்கள் நிலைப்பாடு போராட்டமாக இருந்தால், அதை நடத்துங்கள்' என்றார். உடனே ஒரு நிர்வாகி, "போராட்டத்திற்கு நீங்கள் தலைமை வகிக்க வேண்டும்' என்றார். அதற்கு,"போராட்டத்திற்கு நான் தலைமை வகிக்க முடியாது. அது, கேரள மாநில அரசியலில் எனக்கு சிக்கலை ஏற்படுத்திவிடும்' என, விஜூ கூறினார்.

கூட்டம் நடந்துகொண்டிருந்த போது, திருவள்ளூர் பார்லிமென்ட் இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவரும், சென்னை மாநகராட்சி கவுன்சிலருமான தமிழ்செல்வன் உள்ளே வந்தார். அவரை பேச, மேலிட பொறுப்பாளர் விஜூ அனுமதிக்கவில்லை. இதனால், அவரும் தனது அதிருப்தியை தெரிவித்து விட்டு வெளியேறினார். மொத்தத்தில், உருப்படியாக எந்த ஒரு தீர்மானமும், கூட்டத்தில் நிறைவேற்றப்படவில்லை. "மீண்டும் ஒரு வாரத்தில் உங்களை சந்திக்கிறேன்' என கூறிவிட்டு, மேலிட தலைவர் விஜூ, "எஸ்கேப்' ஆனார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக