வியாழன், 5 ஜனவரி, 2012

பொக்கிஷங்களை தேச நலனுக்கு செலவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு

புதுடில்லி: பத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகளில் பாதுகாக்கப்பட்டு வரும் பொக்கிஷங்களை, தேச நலனுக்குப் பயன்படுத்த உத்தரவிடவேண்டும் எனக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவிலை அரசு ஏற்று நடத்த, கேரள ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகளில் பல நூற்றாண்டுகளாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இப்பொக்கிஷங்களை தேச நலனுக்குப் பயன்படுத்தவேண்டும் என கொச்சியைச் சேர்ந்த ஜேக்கப் மாப்பிளசேரி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், "கோவிலில் பொக்கிஷங்களை பாதுகாத்து வரும் அதே நேரத்தில், அவற்றை லாபகரமான வகையில், தேச நலனுக்கு பயன்படுத்த மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உத்தரவிடவேண்டும்.
மதவழிபாட்டு தலங்களின் சொத்துக்களை நிர்வகிக்க ஒளிவுமறைவற்ற தெளிவான செயல்பாடுகள் இருக்கவேண்டும். இது குறித்து மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கவேண்டும்' என குறிப்பிட்டுள்ளார். கோவில் நிர்வாகத்தை கேரள மாநில அரசு ஏற்று நடத்தவேண்டும் என ஏற்கனவே ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (5ம் தேதி)சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஆர்.எம்.லோதா மற்றும் ஏ.கே.பட்நாயக் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சு முன், விசாரணைக்கு வர உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக