வெள்ளி, 13 ஜனவரி, 2012

ஜெயேந்திரர் நேரில் ஆஜராக உத்தரவு

சென்னை மந்தவெளியைச் சேர்ந்தவர் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன். இவரை கடந்த 2002-ம் ஆண்டு சிலர் சேர்ந்து தாக்கினர். இதில், ராதாகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக 2005-ம் ஆண்டு பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜெயேந்திரர் முதலாவது நபராக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

அவரைத் தொடர்ந்து இந்த வழக்கில் சுந்தரேச அய்யர், ரகு, அப்பு, கதிரவன், சுந்தர், ஆனந்த், கண்ணன், லட்சுமணன், பூமி என்ற பூமிநாதன், குமரன் என்ற சின்ன குமரன், ரவிசுப்பிரமணியன் ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டனர். ரவிசுப்பிரமணியன் இந்த வழக்கில் அப்ரூவராக மாறினர்.

இவர்கள் மீது கொலை முயற்சி உட்பட பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்கில் 5 ஆண்டுகளுக்கு முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கின் சாட்சி விசாரணை சென்னை 1-வது கூடுதல் செசன்சு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதி கலாவதி விசாரணை நடத்தினார். அரசுத் தரப்பில் சிறப்பு வக்கீல் விஜயராஜ் ஆஜரானார்.வழக்கு விசாரணையின்போது ஜெயேந்திரர் ஆஜராகவில்லை.

அரசு சிறப்பு வக்கீல் கேட்டுக்கொண்டதை அடுத்து, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரும் 12-ந் தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி கலாவதி உத்தரவிட்டார்.அதைத் தொடர்ந்து நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி விடுமுறையில் சென்றுவிட்டதால், 6-வது கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி கலியமூர்த்தி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஆஜராக வேண்டும் என்று குறிப்பிட்டு நீதிபதி உத்தரவிட்டிருந்தும் ஏன் ஜெயேந்திரர் ஆஜராகவில்லை என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை 30-ந் தேதிக்கு தள்ளி வைத்து, குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் அன்று கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக