திங்கள், 30 ஜனவரி, 2012

ஏழுமலை வாசா! உன்னைத் தேடி வந்தா எய்ட்ஸா!!

ஸ்ரீமுகம் பெறுதல்:
ஸ்ரீ ஜகத்குரு, சங்கரமடம், காஞ்சிபுரம்.
ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பாதாரவிந்தங்களுக்கு மயிலாப்பூர் சுப்புணி நமஸ்காரம்.
கொஞ்சகாலமாவே இந்து மததுக்கும், இந்து தர்மத்துக்கும் சோதனையாவே வந்துண்டிருக்கு.
வெறுப்போட நியூஸ் பேப்பர எடுத்துப படிச்சா ஒரு சேதிய படிச்சிட்டு திகைச்சுப் போயிட்டேன். மத்தவா பேப்பரா இருந்தா தேமேன்னு போயிருப்பேன், நம்ப தினமணியிலேயே போட்டிருக்கா, ”திருப்பதியில கத்தியால மொட்டை அடிச்சா எய்ட்ஸ் வந்துருமோன்னு பிளேடு வாங்க உலக சுகாதார நிறுவனத்திடம் தேவஸ்தானம் உதவி கேட்கிறது”ன்னு.
என்ன கிரகச்சாரமோ கலி முத்திடுத்து. காமாசோமான்னு இத டீல் பண்ணாம, தெய்வீக காணிக்கை விஷயத்தை இப்படி பப்ளிக்கா போட்டா மத்தவா என்ன நெனைப்பாள்.

அதுவும் இந்த கம்யூனிஸ்டு படவாள், கம்யூனிஸ்டுன்னா இந்த சி.பி.எம். நம்பூதிரிபாடு வகையறா இல்லே, அவா நம்ப தேவஸ்தான அம்பிகள வச்சே தொழிற்சங்கம் கட்ற அளவுக்கு ஒத்து வந்துட்டாள்.
புதுசா சில கம்யூனிஸ்டு படவாள்லாம் சேர்ந்துண்டு ”நாட்டையே மொட்டை அடிக்கிறவங்கிட்ட போயி நம்பள மொட்டை அடிக்கிறதுக்கும் பிளேடு கேக்குற அளவுக்கு நாடு போகுது எல்லாம் வெங்கடாஜலபதிக்கே வெளிச்சம்னு” கேலி பேசறாள். அப்படியே அறஞ்சுடலாம்னு ஆத்திரம் வர்றது.
ஏற்கனவே சொவரெல்லாம் ”எய்ட்ஸ் தடுக்க ஆணுறையை பயன்படுத்துங்’கோன்னு எழுதித் தள்ளிருக்காள். திருப்பதி பூரா ”எய்ட்ஸைத் தடுக்க பிளேடைப் பயன்படுத்துங்கள்”னு எழுதத் தொடங்கிட்டா என்ன பண்றது.? யாருக்கு அவமானம்? எல்லாரும் பகவான நம்பி வர்ற எடத்துல பிளேட நம்பச் சொன்னா பரிகசிக்கமாட்டாளா? இந்த விஷயத்துலயும் பெரியவா தலையிட்டே ஆகணும். எவ்வளவோ சிரத்தை எடுத்துண்டு தூர்தர்ஷன் வரைக்கும் போய் காரியம் பண்ணி எழுமலையான் மகிமையைப் பத்தி ‘பாலாஜின்னு’ சீரியல் காட்டிண்டு இருக்கறச்சே, ஜனமான ஜனம் ஏழுமலையான வேண்டிண்டு இருக்கரச்சே, ஏழுமலையான் தேவஸ்தானம், கேவலம் பிளேடுக்கு பாவாடைப் பாதிரிமார் நாட்டுண்ட்ட போயி கையேந்தறது கெடுதலா படறது.
மேலும் பாரம்பரியமா யூஸ் பண்ண கத்திய விட்டுட்டு பிளேடு யூஸ் பண்ண ஆகம விதியில எடமிருக்கான்னு குழப்பமும் மிஞ்சறது, இதுவும் பெரியவா தெளிவுபடுத்தணும்.
அப்படி பிளேடுதான் தோதுன்னா, நம்ப மீயூசிக் அகடாமி டி.டி. வாசுகிட்ட சொன்னா நிரோத் உறை புராடக்ட் பண்றத விட பிளேடையும் பண்ணுடான்னு பெரியவா சொன்னா கேப்பன்.
எதுக்கும் பொள்ளாச்சி மகாலிங்கத்துகிட்ட கூட இது சம்பந்தமா பேசினா இந்து மதத்த விட்டுக் கொடுக்காம தலையாட்டுவாம், பெரியவாளுக்கு தெரியாதது இல்ல, இருந்தாலும் நேக்கு ஆதங்கம் தாங்கல.
எதுவும் தோதுபடலேன்னா, நம்ம சுதேசிமஞ்ச், ஆர்.எஸ்.எஸ். போல தேசபக்தி அமைப்புல உள்ள சூத்ராள வச்சி திருப்பதியில ஷிப்ட்டு போட்டு மொட்டை அடிக்கலாம்.
பெரியவா சொன்னா கேக்க சூத்ராள்ள ஆளா இல்ல, எதுக்கு பொறத்தியார்கிட்ட கையேந்தி அவமானப்படணும்?
வருஷத்துக்கு 70 லட்சம் மொட்டை போடறாள்; புதுசா கட்டடம் கட்ட 20 கோடி ரூபா ஒதுக்கறாள். ஏழுமலையான் பூஜை, புனஸ்காரத்த இண்டர் நெட்ல வேற காட்டறாள், மொட்டை அடிக்க பிளேடு வாங்க மட்டும் காசில்லையான்னு காதுபடவே பேசிக்கறது சகிக்கல்ல.
எதுக்கும் மேலிடத்துல சொல்லி வைங்கோ இண்டர்நெட்ல இங்கிலீஷ்ல போட்டா பரவால்ல, வேதத்த சூத்திர பாஷைல சொல்லி நீசத்தனம் பண்ணிடப்போறா.
கடைசியா ஒரு விஷயம் பெரியவா கவனமா இருங்கோ;  வழக்கம் போல பெரியவாளுக்கு நம்பளவா சகலச் சேவையும் பண்ணாலும், பெரியவாள்க்கு மொட்டை அடிக்கற பரியாரி மேலே ஒரு கண்ணா இருங்கோ, கண்ட கத்தியும் போட்டு ஏதாவது ஏடாகூடமா ஆச்சுன்னா அப்புறம் ‘சங்கராச்சாரிக்கு எய்ட்ஸ்னு’ இந்த சண்டாளப் பசங்க மானத்த வாங்கிடுவான், பெரியவாளுக்குத் தெரியாதது இல்ல, இருந்தாலும் மனசு கெடந்து பதர்றது. எதுக்கும் பிளேடு பாக்கெட்ட மொத்தமா வாங்கி வச்சுண்டா நல்லது.
இதிலெல்லாம் பெரியவாதான் நேரா தலையிடணம்னு இல்ல, நம்ப இராமகோபலானை உசிப்பி விட்டாலே உசிதம்னு தோண்றது. சகல க்ஷேமத்துக்கும் பெரியவா பொற்பாதம் பணியும்,
சுப்புணி அய்யர்,
மயிலாப்பூர், மெட்ராஸ் – 4

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக