திங்கள், 30 ஜனவரி, 2012

புறக்கணித்தார் மோடி: பா.ஜ., தலைவர்களுடன் மோதல் வெளிச்சம்

ஆமதாபாத்: பா.ஜ.,வின் நட்சத்திர பிரசாரகராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டு இருந்தாலும், பஞ்சாப், உத்தரகண்ட் மாநில சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தை அவர் புறக்கணித்தது, அக்கட்சி வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப், உத்தரகண்ட் மாநிலங்களில் இன்று சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. பஞ்சாபில் சிரோன்மணி அகாலி தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சியும், உத்தரகண்டில் பா.ஜ., ஆட்சியும் நடந்து வருகிறது. இந்த இரு மாநிலங்களிலும், பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி பிரசாரம் செய்வார் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.

பிரதமர் வேட்பாளர்: பா.ஜ., சார்பில் இந்த மாநிலங்களில் பிரசாரம் செய்யும் தலைவர்களின் பட்டியல், தேர்தல் கமிஷனிடம் கொடுக்கப்பட்டபோது, அதில் நரேந்திர மோடியின் பெயரும் இடம் பெற்றிருந்தது.
பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தான் என, கடந்த சில மாதங்களுக்கு முன், கட்சிக்குள் ஒரு பேச்சு இருந்தது. எனவே, நாடு முழுவதும் தன் செல்வாக்கை பலப்படுத்துவதற்கு, பஞ்சாப், உத்தரகண்ட் மாநில சட்டசபைத் தேர்தலை அவர் பயன்படுத்திக் கொள்வார் எனக் கூறப்பட்டது.

புறக்கணிப்பு: இந்நிலையில், இந்த இரண்டு மாநிலங்களிலுமே பிரசாரம் ஓய்ந்து, இன்று தேர்தல் நடக்கிறது. ஆனாலும், இந்த மாநிலங்களில் ஒரு தொகுதியில் கூட, நரேந்திர மோடி பிரசாரம் செய்யவில்லை. இது, பா.ஜ., மூத்த தலைவர்களுக்கு மட்டுமல்லாமல், பஞ்சாப், உத்தரகண்ட் மாநிலங்களைச் சேர்ந்த பா.ஜ., தொண்டர்களுக்கும் பெரும் ஆச்சர்யத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உ.பி.,யில் பிரசாரம் செய்வாரா? உ.பி.,யில் நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலிலாவது, கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அவர் பிரசாரம் செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. உ.பி., மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பது என்பது, அனைத்து அரசியல் கட்சிகளின் கனவு. "லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, உ.பி., மாநில வெற்றி, ஒரு முன்னோட்டமாக இருக்கும்' என, தேசிய கட்சிகள் நம்பி வருகின்றன. எனவே, உத்தரகண்ட், பஞ்சாப் சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தை புறக்கணித்தது போல், உ.பி., பிரசாரத்தையும் நரேந்திர மோடி புறக்கணித்து விடக்கூடாது என்ற எதிர்பார்ப்பு, பா.ஜ., தொண்டர்களிடையே எழுந்துள்ளது.

புறக்கணிப்பு ஏன்?

* பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி எடுத்த சில முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கடந்தாண்டு டில்லியில் நடந்த பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டத்தில், நரேந்திர மோடி பங்கேற்கவில்லை.

* பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, குஜராத்துக்கு பதிலாக பீகாரில் இருந்து, ஊழல் எதிர்ப்பு ரத யாத்திரையை துவக்கியதால், அத்வானியுடனும், மோடிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

* பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தான் என, கட்சிக்குள் ஒரு சிலர் கருத்து தெரிவித்ததற்கு, மூத்த தலைவர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது.

* தன் மீது கருத்து வேறுபாடு கொண்டுள்ள, கட்சியின் பொதுச் செயலர் சஞ்சய் சிங் ஜோஷியை, உ.பி., பிரசாரத்தில் ஈடுபடுத்தியதும், நரேந்திர மோடிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக