திங்கள், 30 ஜனவரி, 2012

சமச்சீர் கல்வினு சொன்னப்போ, இது ஏதோ புதுசா வருதேன்னு பயமா இருந்துச்சு

தேர்வு முறையை தித்திப்பாக்கிய சமச்சீர் கல்வி!

படங்கள்: என்.ஜி.மணிகண்டன், பா.காளிமுத்து, ச.இரா.ஸ்ரீதர்

''டெலிபோன் மணியடிச்சா ரிங்கு
எங்க நட்பை பிரிக்க நினைச்சா சங்கு
நண்பா...
நாம் இருவரும் சேர்ந்து செய்த சேட்டை
நம் நட்புக்கு நாம் கட்டிய கோட்டை''

 இது பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், தமிழ் இரண்டாம் தாளில் எழுதிய புதுக்கவிதை! மாணவர்களின் படைப்பாற்றல் திறமைக்கு மேடை கொடுத்து இருக்கிறது சமச்சீர் கல்வி என்கிற சந்தோஷம் ஒருபுறம். ஆனால், கல்வியாண்டு தொடங்கி கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் கழிந்த பிறகுதான் சமச்சீர் கல்வி பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டது. புதிய கல்வித் திட்டம், மிக தாமதமாக ஆரம்பிக்கப்பட்ட பாடங்கள் என்ற தடைகள் கடந்து... பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் மாணவர்கள்..? சில ஆசிரியர்களையும், மாணவர்களையும் சந்தித்தோம். அவர்களின் சந்தோஷங்களும் சங்கடங்களும் இதோ.... தனியார் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் லூர்து, ''சமச்சீர் கல்வி சென்ற ஆண்டு ஜூன் - ஜூலை மாதங்களில் நீதிமன்றங்களில் பிரச்னையாக இருந்தபோதே, மாணவர்களுக்கு பேஸிக் இங்கிலீஷ் கிராமர், மேத்ஸ் போன்ற பாடங்களை ஆரம்பித்துவிட்டோம். சமச்சீர் கல்வி அமலானபோதும், பாடப் புத்தகங்கள் கிடைப்பதற்கு லேட் ஆனது. அப்போதும் காத்திருக்காமல் இன்டெர்நெட்டில் பாடங்களை 'டவுன்லோட்’ செய்து மாணவர்களுக்குக் கொடுத்துப் படிக்க வைத்தோம். சனிக்கிழமைகளிலும் கிளாஸ் வைத்து... தாமதத்தை பேலன்ஸ் செய்து, பாடங்களை முழுமையாக நடத்தி விட்டோம்.
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கடந்த மூன்று மாதங்கள் மிகவும் சிரமமானதாகவும், வொர்க் லோட் அதிகமாகவும் இருந்தது உண்மை. தமிழ், இங்கிலீஷ் உள்ளிட்ட ஐந்து பாடங்களையும் முழுமையாக முடிப்பதற்கு சிரமமாக இருந்ததால்... ஆசிரியர் - பெற்றோர் மீட்டிங் வைத்து அதில் நிலைமையைப் பெற்றோர்களுக்குப் புரிய வைத்தோம். மொத்தத்தில் தாமதம் என்கிற பிரச்னையை சமாளித்துவிட்டோம். பெரும்பாலான தனியார் பள்ளிகளும் இப்படித்தான் சமாளித்து இருக்கிறார்கள். எல்லா பாடங்களையும் நடத்தி... இப்போது மாணவர்கள் ரிவிஷன் டெஸ்ட்டுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்'' என்று பாஸிட்டிவ்வான பதில் தந்தார் லூர்து.

'புதிய முறை சமச்சீர் பாடத் திட்டத்தை ஆசிரியர்கள், மாணவர்கள் எப்படி உணர்கிறார்கள்..?’ என்று மற்றொரு தனியார் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெயந்திமாலாவிடம் கேட்டபோது, ''சமச்சீர் கல்வி சிலபஸ், இதுவரை நாங்கள் பின்பற்றிய மெட்ரிக் ஸ்கூல் சிலபஸ் மாதிரி இல்லாததால், எங்களுக்கு முழு திருப்தி இல்லை. பழகிய பாடத்திட்ட முறை கைவிட்டுப் போனதால் இப்படித் தோணலாம். ஆனால், சமச்சீர் கல்வியில் கேள்வித்தாள்களும் பரீட்சை முறையும் சுலபமாக இருப்பதாக மாணவர்கள் சந்தோஷப்படுகிறார்கள். உதாரணமாக, வரலாறு, புவியியல் பாடங்கள் முன்பு தனித்தனியாக இருந்தன. இப்போது இந்தக் கல்வி முறையில் இரண்டையும் ஒன்று சேர்த்துக் கொடுப்பதால் மாணவர்களுக்கு எல்லா வகையிலும் அது சுலபமாக இருக்கிறது.



பாடங்கள் அனைத்தையும் முழுமையாகப் படித்தால்தான் வெற்றி பெறமுடியும் என்கிற சவாலும் இதில் இருக்கிறது. உதாரணமாக, '1910-லிருந்து 1947-வரை நடந்த வரலாற்று முக்கியத்துவமான நிகழ்வுகளை எழுது’ என்கிற கேள்விக்குப் பதில் அளிக்க, அந்த முழுப்பாடத்தையும் படித்திருக்க வேண்டும் என்கிற கட்டாயமும் இதில் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்களில் 'வேலைக்குச் சேர்வதற்கு விண்ணப்பிக்கும் உன் சுயவிவரக் குறிப்புகளை எழுது’ என்பது போன்ற நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களை இந்த சமச்சீர் கல்வி கற்றுக் கொடுக்கிறது.

மாணவனின் மொழியறிவு, இலக்கண அறிவை திறன் அறிய, மேம்படுத்த கவிதை எழுதும்படியும் கேள்வி இருக்கிறது (அப்படி ஒரு மாணவன் எழுதிய 'நட்புக் கவிதை’தான் இந்தக் கட்டுரையை ஆரம்பித்து வைத்துள்ளது!). கணக்கு, அறிவியல் என எல்லாப் பாடங்களிலும் மாணவனின் மனப்பாடத் திறனைவிட, அவனது அறிவை செயல்படுத்தும் முறையிலான கல்வியாக இது இருப்பதால், மாணவர்கள் உற்சாகமாகவே இருக்கிறார்கள்'' என்றார்.

தனியார் பள்ளிகள் சரி... அரசுப் பள்ளிகள்?

ஆசிரியர்கள் தரப்பில் இன்னமும்கூட வெளிப்படையாக பேசுவதற்கு தயங்குகின்றனர். ''நிச்சயமாக, இது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வரப்பிரசாதமான விஷயம்தான். சமச்சீர் கல்வி நிச்சயமாக அவர்களை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை'' என்பதே பெரும்பாலான ஆசிரியர்களின் கருத்தாக இருக்கிறது.

சரி, அரசுப்பள்ளி மாணவர்கள் தரப்பு..?

மண்ணச்சநல்லூர் அரசுப் பள்ளி மாணவி ராஜகுமாரி, ''பாடம் லேட்டா ஆரம்பிச்சதால முதல்ல கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. ஆனா, படிக்கப் படிக்க ஈஸியா இருக்கு. பாடங்கள் எளிமையா இருக்குங்கிறதைவிட, எங்க அறிவை முழுமையா செயல்படுத்தற மாதிரி இருக்கு. முன்ன சி.பி.எஸ்.இ ஸ்டூடன்ட்ஸுக்கு மட்டும்தான் அப்ளிக்கேஷன் நாலெட்ஜ் இருக்கும்னு சொல்வாங்க. இப்ப எங்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைச்சுருக்கு. காரணம், மனப்பாடம் பண்ணி பரீட்சைப் பேப்பரில் அதை அப்படியே கொட்டுறதைவிட, படிச்ச பாடத்தை அப்ளை பண்ணுற மாதிரியான கேள்விகள்தான் இதில் கேட்கறாங்க.

இதுவரை 40 மார்க் வாங்கிட்டு இருந்தவங்ககூட, இப்போ ஈஸியா 60 மார்க் வாங்க முடியுது. உதாரணத்துக்கு... முன்னஎல்லாம், வரலாறு பாட பொலிட்டிக்கல் மேப்புல 'பஞ்சாப் தலைநகரைக் குறி’ங்குற கேள்விக்கு, அதைக் குறிச்சு வெச்சா ஒரு மார்க் கிடைக்கும். இப்ப அந்த இடத்தைக் குறிச்சு, அதைப்பத்தி சின்னக் குறிப்பு எழுதினா இன்னும் ஒரு மார்க் கூடுதலா கிடைக்கும். அதனால எல்லாருமே ஈஸியா நிறைய மார்க் வாங்கலாம்''

- அத்தனை உற்சாகம் ராஜகுமாரிக்கு.

''முழுக்க முழுக்க மனப்பாடம் செய்து 80, 90 மார்க் வாங்கினவங்களால... அதேமாதிரி இனி மார்க் வாங்க முடியுமா என்பது கேள்விக்குறி!'' என்கிறார் அதே பள்ளியைச் சேர்ந்த மாணவர் சரண்.

''அதாவது, இதுவரை மனப்பாடம் செய்து மார்க் வாங்கினவங்களுக்கு, இப்போ ஒரு பாடத்தை புரிஞ்சுகிட்டு, அதை அப்ளை பண்ணுற இந்த முறை கஷ்டமாத்தான் இருக்கும். அதனால மனப்பாட கில்லிகளுக்கு இந்தப் பரீட்சை ஒரு சவால்தான். ஆனா, முதல் வகுப்பிலிருந்து தொடர்ந்து சமச்சீர் கல்வியில் படிச்சுட்டு வர்றவங்க, கொடுத்து வெச்சவங்க. அவங்களுக்குப் புரிதல், அறிதல், பயன்படுத்துதல்னு மூன்று திறமையும் இருக்கும். சமச்சீர் கல்வியைக் கொண்டு வர்றதுக்குக் கஷ்டப்பட்ட எல்லா பெரியவங்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி!'' என்று சந்தோஷம் பகிர்ந்தார் சரண்.

அம்மாக்கள் என்ன நினைக்கிறார்கள்..?

அவர்களின் பிரதிநிதியாக பேசினார் சென்னை யைச் சேர்ந்த விஜயலட்சுமி. ''சமச்சீர் கல்வினு சொன்னப்போ, இது ஏதோ புதுசா வருதேன்னு பயமா இருந்துச்சு. சாயந்திரம் ஆறு மணி வரைக்கும்கூட கிளாஸ் நடத்தினாங்க. பாவம்... எல்லா சனிக்கிழமையும்கூட பசங்க பள்ளிக் கூடம் போனாங்க. அந்தக் கஷ்டத்துக்கு எல்லாம் பலன் இருக்கற மாதிரிதான் தோணுது... இப்ப அவங்க மார்க் வாங்கிட்டு வர்றதைப் பார்த்தா. என் பொண்ணு ஆவரேஜ் ஸ்டூடன்ட். ஆனா இப்போவெல்லாம் அவ 60 மார்க்குக்கு மேல வாங்கிட்டு வரும்போது சந்தோஷமா இருக்கு. என்னோட ஃப்ரெண்ட்ஸும், இது அதிகமா டென்ஷன் தராம இருக்கறதாத்தான் சொல்றங்க. பப்ளிக் எக்ஸாம் ரிசல்ட் வந்த பிறகுதான், என்ன ஏதுனு முழுமையா தெரியும்'' என்றவர்,

''எது எப்படி இருந்தாலும், ஒரு அம்மாவா எப்போதும் போலவே புள்ளைங்க படிக்கறதுக்காக கூடவே இருந்து சந்தோஷமா கஷ்டப்படறது மட்டும் எப்பவுமே மாறாது'' என்று சிரிப்புடனேயே சொன்னார் விஜயலட்சுமி.

சமச்சீர்... மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறையின் சீர் போலத்தான்!
thanks vikatan +sankari alaska

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக