வெள்ளி, 27 ஜனவரி, 2012

அமலா பால்... அதிர்ந்து நிற்கும் தயாரிப்பாளர்கள்!

தமிழ் சினிமா எத்தனையோ சாதனையாளர்களை தடவிக் கொடுத்து மகிழ்ந்திருக்கிறது... தீராத தலைவலியாய் திகழ்ந்தவர்களை சுளுக்கெடுத்தும் அனுப்பியுள்ளது.
தமிழ் சினிமாவின் இப்போதைய பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளவர் அமலா பால். அம்மணி அலட்டும் அலட்டல் இருக்கிறதே.... இவரை நம்பி ஒப்பந்தம் செய்து படமெடுத்து வரும் தயாரிப்பாளர்களை அதிர வைத்திருக்கிறது.
வீரசேகரன் என்ற படத்தின் மூலம் நடிக்க வந்தவர் அமலா பால். இப்போது கேட்டால் 'ஆங்... அப்டி ஒரு படம் வந்ததா' என்பார். இந்தப் படத்துக்குப் பிறகு அம்மணி நடித்த படம் மாமனாரின் இன்பவெறி..சாரி.. சிந்து சமவெளி!அதன் பிறகு சீந்துவாரின்றி கிடந்த அமலா பாலுக்கு வாழ்க்கை கொடுத்த படம் மைனா. போகிற இடமெல்லாம் மைனாதான் எனது முதல் படமாக்கும் என்று சொல்ல அமலா தயங்குவதே இல்லை. சரி அது அவர் விருப்பம். இப்போது விஷயம் ரொம்ப சீரியஸானது. அமலா பாலின் கேரியரையே காலி பண்ணும் அளவுக்கு!

சின்னதோ பெரியதோ.. ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால், அந்தப் படம் வெளியாகும்போது செய்யப்பட்டம் இசைவெளியீடு போன்ற புரமோஷனல் நிகழ்ச்சிகள், பிரஸ் மீட், சேனல் பேட்டி என அனைத்துக்கும் நடிகைகள் வரவேண்டும் என்பது தயாரிப்பாளர்கள் முன்கூட்டியே போடும் நிபந்தனை. இதற்கு ஒப்புக்கொண்டுதான் நடிக்க வருகிறார்கள் நடிகைகள்.

பெரும்பாலானோர் ஒப்புக் கொண்டபடி நடந்துகொள்கின்றனர். ஆனால் அமலா பால் போன்றோர் டிமிக்கி கொடுத்து தயாரிப்பாளரை அசிங்கப்படுத்துகின்றனர் (அமலா போன்றவர்களை தலையில் தூக்கி வைத்து ஆடும் இவர்களுக்கு இதுவும் வேணும்).

மைனா ஹிட்டானதிலிருந்தே தலைகால் புரியாமல் நடந்து கொள்ளும் அமலா பால், பத்திரிகையாளர் சந்திப்புகள் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாக்களுக்கு வர ரொம்பவே பிகு பண்ணுவது வழக்கம்.

இப்படித்தான் தெய்வத் திருமகள் பிரஸ்மீட்டுக்கு வந்த அமலா பாலை புகைப்படக்காரர்கள் படமெடுக்க முயன்றபோது, 'எனக்கு மூட் இல்ல... போங்க போங்க' என்று விரட்டினார். அடுத்த நாள் இயக்குநர் விஜய்யுடன் ஒரு விருது வழங்கும் விழாவுக்கு வந்தார். அங்கும் படமெடுக்க முயன்றவர்களை கோபமாகத் திட்டிவிட்டு ஓடினார்.

ஒரு முறை இருமுறை அல்ல... மைனாவுக்குப் பின் அமலா பால் நடித்த தெய்வத் திருமகள், வேட்டை, இப்போது நடித்துக் கொண்டிருக்கும் முப்பொழுதும் உன் கற்பனைகள் மற்றும் காதலில் சொதப்புவது எப்படி ஆகிய படங்களின் பிரஸ் மீட்களில் இதுவே அமலா பாலின் வாடிக்கையாகிவிட்டது.

குறிப்பாக முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்துக்கான சேனல் இன்டர்வியூவுக்கு தயாரிப்பாளரின் பணத்தில் கேரளாவிலிருந்து விமானத்தில் வந்த அமலா, இரண்டு டிவி சேனலுக்குதான் பேட்டி தருவேன் என்று கூறிவிட்டாராம். அதுவும் எப்படி... 9 மணிக்கு வரவேண்டியவர்... 11 மணிக்கு வந்துவிட்டு, இப்படி ஜம்பமாய் சொல்ல, வந்திருந்த மற்ற டிவி சேனல்காரர்கள் கடுப்பாகி, பேட்டியெடுக்க முயன்றபோது, "உங்க சேனலை யார் பாக்குறாங்க... நான் பெரிய சேனல்களுக்குத்தான் தருவேன். உங்களுக்கு பேட்டி தரமுடியாது" என்று கூறிவிட்டார். இத்தனைக்கும் தமிழில் பிரபலமான சேனல்கள் அவை.

அமலா பாலின் இந்த நடவடிக்கையால் கடுப்பான சேனல்காரர்கள் கேமராவை ஏறக்கட்ட தயாரிப்பாளரும் இயக்குநருமான எல்ரெட் குமார் பதறியபடி சமாதானம் செய்ய முயன்றார். அதற்கு மீண்டும் ஒரு குண்டை தூக்கிப் போட்டார் அமலா. "சார் எனக்கு பர்சனல் வொர்க் இருக்கு. நான் போறேன்," என்று கூறிவிட்டு போயே போய்விட்டார். டிக்கெட் செலவு தயாரிப்பாளர் காசு... பார்ப்பது சொந்த வேலை... சேனல் மீட்டும் கெட்டது. இதெப்டி இருக்கு!

அடுத்த நாளே இன்னொரு நிகழ்ச்சி... இது நடந்தது காதலில் சொதப்புவது எப்படி பட இசை வெளியீட்டு விழாவில். படத்தின் நாயகியான இவர் விழாவுக்கே வராததால் நிகழ்ச்சி சொதப்பலாகிவிட்டது. விஷயத்தைக் கேட்டபோது, இன்று மாலை தனக்கு அரியர்ஸ் எக்ஸாம் இருப்பதால் வர முடியாது என அமலா கூறிவிட்டார் என்றார்கள்.

"குருவாயூரப்பன் ஊரில் பிறந்தால் லாஜிக்கே இல்லாமல் பொய் புளுகுவது சகஜம் போலிருக்கிறது. கேரளாவில் இப்போது எந்த தேர்வும் நடக்காது. இன்னொன்று, மாலை நேரத்தில் எந்த கல்லூரி அல்லது நிறுவனத்தில் தேர்வு நடக்கிறதென்று புரியவில்லையே," என்று கமெண்ட் அடித்தார் படக்குழுவைச் சேர்ந்தவர்.

இப்படி அடுக்கடுக்காக வரும் புகார்களால், அடுத்து அமலா பாலை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் தயங்க ஆரம்பித்துள்ளனர். அமலா இப்போது இரண்டு தெலுங்குப் படங்கள் பண்ணுகிறார். அவரது கால்ஷீட்டுக்கு காத்திருந்த இரண்டு தமிழ் தயாரிப்பாளர்கள், 'பரவாயில்லை, அமலா ஹைதராபாதிலேயே இருக்கட்டும்' என்று முடிவு செய்து வேறு நடிகைகளை ஒப்பந்தம் செய்துவிட்டது லேட்டஸ்ட் சங்கதி!

அமலாவின் அலம்பல்களை பத்திரிகையாளர்களும் புகைப்படக்காரர்களும் வெளியில் சொல்லி அது செய்தியாக வந்ததும், உடனடியாக தனக்கு வேண்டப்பட்ட சில மலையாள நிருபர்களைக் கொண்டு அமலா அப்படியாக்கும் இப்படியாக்கும் என செய்தி வெளியிட ஆரம்பித்துள்ளது இன்னொரு பெரிய கதை!

1 கருத்து:

  1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு