சனி, 28 ஜனவரி, 2012

கலைஞர் டி.வி&’யை ஸ்டாலின் கைப்பற்றிவிட்டதாகவும், டி.வி. நிர்வாகத்தில் கனிமொழி தரப்புக்கு எந்த பங்கும் இல்லை


ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் சிக்கி ஒருவழியாக ஓய்ந்திருக்கும் நிலையில் ‘கலைஞர் டி.வியை ஸ்டாலின் கைப்பற்றிவிட்டதாகவும், டி.வி. நிர்வாகத்தில் கனிமொழி தரப்புக்கு எந்த பங்கும் இல்லை என வரும் தகவல்கள் கட்சிக்குள்ளும் வெளியேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது!
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் விஸ்வரூபமெடுக்க, அதன் விளைவாக ஆ.ராசா கைது செய்யப்பட்டார். அதன் பிறகு, சி.பி.ஐ.யின் பார்வை கருணாநிதி குடும்பத்தின் மீது வி ழுந்தது. ‘‘200 கோடி ரூபாயை ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு ஷாஹித் பல்வா கொடுத்திருக்கிறார். அந்தப் பணம் 2ஜி விவகாரத்துக்காக கலைஞர் டி.வி.க்குக் கொடுக்கப்பட்ட லஞ்சப் பணமே’’ என சி.பி.ஐ. குற்றம் சாட்டியது. இந்த வழக்கில் கனிமொழி, கலைஞர் டி.வி.யின் இயக்குநர் சரத்குமார் இருவரும் கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டனர்.
ஆறுமாத சட்டப் போராட்டத்திற்குப் பிறகு தற்போது அவர்கள் ஜாமீனில் வந்து டெல்லியிலேயே தங்கி விசாரணையைச் சந்தித்து வருகின்றனர்.

சிறையில் இருந்து வெளியே வந்ததும் கனிமொழிக்கு கட்சிப் பதவி கொடுக்கப்படும் எனச் சொல்லப்பட்டது. கனிமொழிக்கு கட்சிப்பதவி கிடைக்காத நிலையில், அவர் கலைஞர் டி.வி.யில் வகித்துவந்த இயக்குநர் பதவியும் பறிபோயிருக்கிறது. கனிமொழியின் பதவியை கல்யாணசுந்தரம் என்பவர் பெற்றிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக விசாரித்தோம்.

‘‘கனிமொழி சிறையில் இருக்கும்போதே, அவருக்குத் தெரியாமல் அந்த நிறுவனத்தின் இயக்குநராக தி.மு.க.வின் அமைப்புச் செயலாளரான கல்யாணசுந்தரத்தை நியமித்து உள்ளனர். 2011-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதியன்று சென்னையில் நடந்த கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களின் நான்காவது வருடாந்திரக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த முடிவு எடுக்கப்படும்போது, கலைஞர் டி.வி.யில் தலா 20% பங்குகளை வைத்துள்ள கனிமொழி, சரத்குமார் இருவரும் சிறையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரிடமும் தகவல்கூட தெரிவிக்காமல் அவசரஅவசரமாக கல்யாண சுந்தரத்தை நியமித்திருக்கிறார்கள்.

ஸ்டாலின் ஆதரவாளரான கல்யாணசுந்தரம், ரத்தன் டாடாவின் ‘டாடா கம்யூனிகேஷன்ஸ்’ நிறு வனத்தில், மத்திய அரசின் சார்பில் போர்டு மெம்பராக 2005-ம் ஆண்டு நியமிக்கப்பட்டவர். தொலைத் தொடர்புத் துறையை தங்கள் வசம் வைத்திருந்த தி.மு.க., அக்கட்சியின் அமைப்புச் செயலாளரை தொலைத் தொடர்புத் துறை சம்பந்தப்பட்ட நிறுவனத்திலேயே போர்டு மெம்பராக நியமித்தது ஏன் என்று அப்போதே சர்ச்சை எழுந்தது. அதையெல்லாம் மீறி, கல்யாணசுந்தரம் டாடா நிறுவனத்தில் போர்டு மெம்பராக தொடர்ந் தார். கனிமொழி கைது செய்யப்பட்ட மே 20-ம் தேதி அன்று கல்யாணசுந்தரம் தன் போர்டு மெம்பர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது அவரை கலைஞர் டி.வி.யில் அவசர அவசரமாக இயக்குநராக நியமித்திருக்கிறார்கள். கனிமொழியும், சரத்குமாரும் சிறையில் இருந்ததால், அவர்கள் மீட்டிங்குக்கு வரமுடியாமல் போய்விட்டது என்று காரணம் சொல்கிறார்கள். ஆனால், வருடாந்திர பங்குதாரர் கூட்டங்களில் பங்கேற்க முடியாதவர்கள், தங்கள் சார்பாக ஒரு நபரை கூட்டத்தில் பங்குகொள்ள பரிந்துரை செய்யலாம் என்று கலைஞர் டி.வி. கம்பெனி விதிகளில் உள்ளது. அதைக்கூட ஏன் அவர்களால் செய்ய முடியாமல் போய்விட்டது என்பதுதான் தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல், கலைஞர் டி.வி.யில், முதலில் தலைமை நிதி அதிகாரியாகவும், பின்னர் இயக்குநராகவும் இருந்த அமிர்தத்திற்கு, ஒரு பங்கு ரூ.950 என்ற மதிப்பில் 30 பங்குகள் 22 செப்டம்பர் 2011 அன்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இயக்குநராக இருக்கும் ஒருவருக்கு பங்குகள் ஒதுக்கீடு செய்வதுகூட கனிமொழிக்கும், சரத்குமாருக்கும் தெரியாமல் நடந்தது ஏன்?’’ என்கிறார்கள் கனிமொழியின் தரப்பில் உள்ள புள்ளிகள்.

வேறு சிலர், ‘‘அடுத்தகட்டமாக கனிமொழியின் 20 சதவிகிதப் பங்குகளை ரத்து செய்து, கனிமொழிக்கு கலைஞர் டி.வி.யில் எவ்வித சம்பந்தமும் இல்லாமல் செய்துவிட ஸ்டாலின் தரப்பு முனைப்பாக இருக்கிறது’’ என்கிறார்கள்.

கனிமொழியிடம் கேட்டபோது கருத்துச் சொல்ல மறுத்துவிட்டார். அவருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது, “தொடக்கம் முதலே நாங்கள் சொல்லி வந்ததுதான் நடந்து கொண்டிருக்கிறது. திரைமறைவில் இருந்து பேரம் நடத்தியவர்கள் தற்போது வெளிப்படையாக அந்த நிறுவனத்தைக் கைப்பற்றி, அதிலிருந்து கனிமொழியை வெளியேற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். கலைஞர் டி.வி. காரணமாக கனிமொழி ஆறு மாதங்கள் தன் மகனைப் பிரிந்து சிறையிலிருந்து தற்போது வழக்கு விசாரணையைச் சந்தித்து வருகிறார். ஆனால், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள், எவ்விதப் பிரச்னைக்கும் ஆளாகாமல், தற்போது கலைஞர் டி.வி.யைக் கைப்பற்றும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்கள்’’ என்று ஆதங்கப்பட்டனர் அவர்கள்.

இந்த விவகாரம் குடும்பத்திற்குள் பெரிய மோதலை ஏற்படுத்தியிருப்பதால், சமாளிக்க முடியாமல் திணறுகிறாராம் கருணாநிதி!

அருணாச்சலம்
thanks kumudam +chandran NH

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக