செவ்வாய், 24 ஜனவரி, 2012

கனிமொழிக்கும் தயாநிதிக்கும் முன் சீறிப் பாய்ந்த உதயநிதி.!


Viruvirupu,
உதயநிதியை எப்படி அழைப்பது? ‘இளைய தளபதி’, ‘சின்னத் தளபதி’ என்றெல்லாம் நடிகர்கள் இருக்கிறார்கள். வேறு பெயர் தேட வேண்டும் என்பதே உதயநிதிக்கு உள்ள ஒரேயொரு சிக்கல்.
‘மினி தளபதி’ அல்லது ‘மைக்ரோ தளபதி’ என்று பட்டம் கொடுக்க முடியாதபடி, தாத்தாவின் தமிழ் உணர்வு உள்ளது. ‘பேராண்டி தளபதி’ என்று கிராமிய டச்சுடன் பட்டம் கொடுக்கலாமா?
தி.மு.க. பொதுக்குழு கூட்டம் மற்றொரு சுவாரசியமான வாரிசுப் போட்டியைக் காணப் போகின்றது. கட்சிக்காக பலரும் கடுமையாக உழைத்தாலும், பதவி என்று வரும்போது தலைவர் குடும்பத்துக்கு கொடுத்துவிட்டு, விரலைச் சப்பிக்கொண்டு வீடுதிரும்பும் வழக்கம் உடையவர்கள் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள்.

ஏற்கனவே தலைவர் குடும்பத்தில் 4 போட்டியாளர்களுக்கு (ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, தயாநிதி மாறன்) கைதூக்கி அனுபவசாலிகளான தி.மு.க. உறுப்பினர்கள், 5-வதாக இளம் சிங்கம் (அப்படித்தான் போஸ்டர் அடிப்பார்கள்.. இருந்து பாருங்கள்) ஒன்றுக்கு ஆதரவாகவும் கைதூக்கும் பாக்கியத்தைப் பெறப் போகிறார்கள்.
சீறிவரப் போகும் இளம் சிங்கம், ஸ்டாலின் மகன் உதயநிதி.
ஒரு வகையில் உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும், ஸ்டாலின் தனது கடமையை சரியாகத்தான் செய்து வருகிறார். அவருடைய தந்தை (கருணாநிதி) அவருக்கு கட்சியில் எப்படி பாதை போட்டுக் கொடுத்தாரோ, அதேபோல தனது மகனுக்கும் பாதை போட்டுக் கொடுப்பதில் தனது கடமையில் இருந்து தவறவில்லை ஸ்டாலின். தற்போது மாவட்டம் தோறும் சென்று மகனுக்கு பாதை போடுவதில் பிஸியாக உள்ளார்.
கடந்த சில நாட்களாக தி.மு.க. இளைஞர் அணிக்கு மாவட்டம் மாவட்டமாக ஆட்சேர்ப்பு செய்வதும், பொறுப்புக்கு புதியவர்களை நியமிப்பதுமாக ஸ்டாலின் காலில் சக்கரம் போட்டு சுற்றிக்கொண்டு இருக்கிறார். இளைஞர் அணி பெறுப்புகளில் புதிதாக நியமிக்கப்படும் ஆட்கள், என்ன அடிப்படையில் நியமிக்கப் படுகிறார்கள்? கடுமையான நிபந்தனைகள் ஏதும் கிடையாது! இளவரசருக்கு ஒத்து ஊதக்கூடிய ஆளா என்பதே ஒரே நிபந்தன!
கட்சியின் மிகப் பிரபல இளைஞரான (!) ஸ்டாலினுக்கு 60 வயதாகிறது. தி.மு.க.-வின் நல்ல காலம், இந்த இளைஞருக்கு, மற்றொரு இளைஞராக ஒரு மகன் உள்ளார். இல்லாவிடின், தி.மு.க.-வின் ‘இளைஞர் ஏஜ்-லிமிட்’ 60-க்கும் மேலே சென்றிருக்கும். இளவரசர் பட்டத்துக்கு ரெடி என்ற சமிக்கைகள் வந்துவிட்ட காரணத்தால், “அடாடா.. இப்போது நான் இளைஞன் இல்லையே” என்று ஒப்புக் கொண்டிருக்கிறார் தளபதி.
உதயநிதி இப்போது ஏன் அரசியலுக்கு வர வேண்டும்? சில காரணங்கள் உள்ளன. முதலாவது, தி.மு.க. ஆட்சிக் காலத்தில் உதயநிதி சினிமாவில் தயாரிப்பு, ஆக்டிங் என்று பிஸி. இப்போது அந்த பிஸினஸில் அவ்வளவாக அலுவல் கிடையாது. குடும்ப பிஸினஸான கட்சி இருக்கவே இருக்கிறது. அதில் ஆளை அமர்த்தி விடலாம்.
இரண்டாவது, இவரை இதற்குள் கொண்டுவராவிட்டால், கனிமொழியும் இதே பதவியில் கண் வைக்கலாம். அழகிரி மகன் துரை தயாநிதியும் இதே பதவியில் கண் வைக்கலாம். கொஞ்ச நாள் விட்டுவிட்டால், தற்போது ஸ்கூல் செல்லும் கனிமொழியின் மகனும் பதவிக்கு ரெடியாகி விடலாம். இவர்கள் எல்லோரும் இளைஞர்கள் என்று தலைவர் ஒப்புக் கொண்டால், பொதுக்குழு, செயற்குழு, கிச்சன் குழு, என்று சகல குழுவுமே ஒப்புக்கொண்டு விடும்.
போட்டி அதிகமாகுமுன், நாற்காலியைப் பிடிப்பதே மியூசிகல் சேரில் வெற்றி பெறுவதற்கான பாலபாடம்.
“சரி, கட்சிப் பதவிக்கு வருவதற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதி இருக்கிறதா?”
என்னங்க இப்படி கேக்கிறீக? உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க. முக்கியஸ்தராக தகுதி உள்ளது என்று ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசே ஒப்புக் கொண்டிருக்கிறதே! இது எப்போது நடந்தது? வேறு ஒன்றுமில்லை, தமிழக அரசால் உதயநிதி ஸ்டாலின்மீதும் நில அபகரிப்பு வழக்கு தொடரப்பட்டு, அவர் முன்ஜாமீன் பெற்று நடமாடிக் கொண்டிருக்கிறார். தி.மு.க. வி.ஐ.பி.-களின் அடையாளமே நில அபகரிப்பும், ஜாமீனும்தானே!
அந்த விதத்தில் உதயநிதி தி.மு.க.-வின் தலைவர்களில் ஒருவராக எலிஜிபிள்!
“தமிழக அரசால் எலிஜிபிள் ஆக்கப்பட்ட உதயநிதியை தி.மு.க. பொதுக்குழுவில் உள்ள வாய் திறக்காத வெஜிடபிள்கள் எதிர்க்கவா போகிறார்கள்? ஜோரா கையை தூக்கி ஆதரவு தெரிவித்து விடுவார்கள்” என்று ஸ்டாலின் நினைக்கிறார்.
இதில் ஒரேயொரு சிக்கல்தான் உள்ளது. அதைத்தான் எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அது என்ன சிக்கல்?
தி.மு.க.-வில் ஸ்டாலினை தளபதி என்று அழைக்கிறார்கள். உதயநிதியை எப்படி அழைப்பது? ‘இளைய தளபதி’, ‘சின்னத் தளபதி’ என்றெல்லாம் நடிகர்கள் இருக்கிறார்கள். வேறு பெயர் தேட வேண்டும் என்பதே உதயநிதிக்கு உள்ள ஒரேயொரு சிக்கல்.
‘மினி தளபதி’ அல்லது ‘மைக்ரோ தளபதி’ என்று பட்டம் கொடுக்க முடியாதபடி, தாத்தாவின் தமிழ் உணர்வு உள்ளது. ‘பேராண்டி தளபதி’ என்று கிராமிய டச்சுடன் பட்டம் கொடுக்கலாமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக