செவ்வாய், 24 ஜனவரி, 2012

கொலையாளிகள் போலீஸ் வேடத்தில் வந்தார்களா?இளம் பெண் கொலை! கணவரிடம் விசாரணை!


சென்னை போரூரை அடுத்த கெருகம்பாக்கம் ஆகாஷ் நகரைச் சேர்ந்தவர் ரவி (40). இவர் பாரிமுனை சரவணபவன் ஓட்டலில் மானேஜராக உள்ளார். இவரது மனைவி அம்பிகா (38). இவர்களுக்கு பாக்கியன் (16), அரவிந்தன் (14) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். ரவி முதலில் போரூரில் குடியிருந்து வந்தார்.
பின்னர் கெருகம்பாக்கத்தில் புதிய வீடு கட்டி கடந்த 8 ஆண்டுகளாக வசித்து வருகிறார். போரூரில் குடியிருக்கும் போது மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக அம்பிகா இருந்தார். மகளிர் குழு மூலம் அந்த பகுதி பெண்களுக்கு கடன் உதவிகளை பெற்று கொடுத்தார்.

அதேபோல் கெருகம்பாக்கத்திலும் புதிய மகளிர் குழு தொடங்க முடிவு செய்தார். அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு 12.30 மணி அளவில் ரவி வேலை முடித்து வீட்டுக்கு வந்தார். கணவன் மனைவி இருவரும் சாப்பாட்டை முடித்து விட்டு படுத்து தூங்கினர். நள்ளிரவு 2 மணி அளவில் வீட்டு கதவை தட்டும் சத்தம் கேட்டு ரவி கண் விழித்தார்.

கதவை திறந்து பார்த்தார். வெளியே 2 பேர் நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் போலீஸ் உடை அணிந்திருந்தனர். நாங்கள் போலீஸ் என்று கூறிய அவர்கள் மகளிர் குழுவில் மோசடி நடந்து இருப்பதாக எங்களுக்கு புகார் வந்துள்ளது. உங்கள் மனைவியிடம் விசாரிக்க வேண்டும் என்றனர். ரவி மனைவியை அழைத்தார்.

இந்த நேரத்தில் 2 மர்ம ஆசாமிகளும் வீட்டுக்குள் நுழைந்தனர். அவர்களில் ஒருவன் காபி கொடுங்கள் என்றான். அதற்கு ரவி வீட்டில் பால் இல்லை என்றார். உடனே அவர்கள் குடிக்க தண்ணீர் கொடுங்கள் என்றனர். ரவி சமையல் அறைக்கு சென்று தண்ணீர் எடுத்து வந்தபோது வீட்டில் இருந்த மனைவியை காணவில்லை. போலீஸ் உடையில் இருந்தவர்களையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ரவி, தனது மனைவியை வீட்டுக்கு வந்தவர்கள் கடத்திச் சென்று இருக்கலாம் என வெளியே வந்து தெருவின் இடது புறம் வழியாக சென்று தேடினார்.

தெருவில் விளக்குகள் எதுவும் எரியாததால் அந்த பகுதி இருட்டாக இருந்தது. நீண்ட தூரம் சென்று பார்த்தும் யாரும் இல்லை. மீண்டும் தெருமுனைக்கு வந்தார். அங்கே தனியார் கம்பெனிக்கு சொந்தமான பஸ் நிறுத்தப்பட்டிருந்தது. அம்பிகா கழுத்து அறுபட்டு அந்த பஸ் அருகே பிணமாக கிடந்தார்.

உடனே மாங்காடு போலீசுக்கு தகவல் தெரிவித்ததாக கணவர் ரவி கூறியுள்ளார். போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அம்பிகாவின் கழுத்திலும், கையிலும் கத்திக்குத்து காயம் உள்ளது. கொலையை தடுக்க முயன்ற போது அம்பிகா கையில் கத்திக்குத்து விழுந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

கொலையாளிகள் யார்? எதற்காக அவர்கள் அம்பிகாவை கடத்திச் சென்று கொலை செய்தார்கள்? என தெரியவில்லை. இதுபற்றி துப்பு துலக்க மோப்ப நாய் வர வழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து அருகே உள்ள காலிமனை வரை ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. எந்த தடயமும் சிக்கவில்லை. ரவி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக