திங்கள், 2 ஜனவரி, 2012

சீனாவில் இந்திய தூதரக அதிகாரி மீது பயங்கர தாக்குதல்

சீனாவின் இவூ நகரில் இந்திய தூதரக அதிகாரியை சீன வர்த்தகர்கள் கும்பலாக சேர்ந்து தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கிழக்கு சீனாவில் உள்ள இவூ நகரில் Euro Global Trading என்ற நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் அந் நாட்டு வர்த்தகர்கள் சிலருக்கு பாக்கி வைத்துள்ளது. பணத்தை தராத அந்த நிறுவனத்தின் அதிபர் சீனாவிலிருந்து தப்பிவிட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து அந்த நிறுவனத்தில் பணியாற்றும் இரு இந்திய ஊழியர்களான தீபக் ரகேஜா, ஷியாம்சுந்தர் அகர்வால் ஆகியோரை சீன வர்த்தகர்கள் கடத்திச் சென்று சிறை வைத்தனர்.

இதையடுத்து அவர்களை மீட்க இந்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுத்தது. ஷாங்காயில் உள்ள இந்திய தூதரக அதிகாரியான பாலச்சந்திரன் அவர்களை விடுவிக்க நீதிமன்றத்தை நாடினார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்தியர்கள் இருவரையும் விடுவிக்க வர்த்தகர்களுக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இருவரும் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர். தங்களை பாதுகாத்துக் கொள்ள, இருவரும் பாலசந்திரனை நெருங்கி நின்றனர்.
இந் நிலையில் நீதிமன்றத்துக்குள் நுழைந்த ஏராளமான சீன வர்த்தகர்கள், அந்த இருவரையும் தாக்க முயல, அவர்களை பாலச்சந்திரன் காக்க முயன்றார். இதையடுத்து அவரை சீனர்கள் கடுமையாகத் தாக்கினர்.
பலத்த காயமடைந்த அவர் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீதிபதி மற்றும் போலீசார் கண் எதிரிலேயே இந்தத் தாக்குதல் நடந்தது. பாலசந்திரன் மட்டுமின்றி தீபக் ரகேஜா, ஷியாம்சுந்தர் அகர்வால் ஆகியோரும் தாக்கப்பட்டனர்.

சீன துணை தூதருக்கு இந்தியா சம்மன்:

இந் நிலையில் இந்தத் தாக்குதல் தொடர்பாக இந்தியாவில் உள்ள சீன துணை தூதருக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது. காயமடைந்துள்ள தூதரக அதிகாரிக்கு உரிய சிகிச்சை அளிக்கக் கூறவும், பிடித்துவைக்கப்பட்டுள்ள இந்தியர்களை விடுவிக்க வலியுறுத்தவும் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக