திங்கள், 2 ஜனவரி, 2012

நுங்கம்பாக்கத்தில் சு.சாமி உறவுக்காரப் பெண் கொலை

சென்னை: நுங்கம்பாக்கத்தில் இந்தியன் வங்கியின் துணை மேலாளர் சீதாலட்சுமி என்பவர் மர்ம மனிதனால் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார். கொள்ளையன் அவர் அணிந்திருந்த நகைகளுடன் தப்பியோடிவிட்டான்.
சென்னை நுங்கம்பாக்கம் காந்தார் நகர் ஸ்கீம் ரோட்டைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி (52). வள்ளுவர்கோட்டம் அருகே உள்ள இந்தியன் வங்கியில் துணை மேலாளராக பணிபுரிந்தார். அவரது கணவர் ராம் மோகன். அவர் ஏற்கனவே இறந்துவிட்டார். அதன் பிறகு சீதாலட்சுமி காந்தார் நகரில் உள்ள தனது சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார். வீட்டின் முன்பக்கத்தில் உறவினர் ஒருவர் குடியிருக்கிறார். பின்பக்கத்தில் சீதாலட்சுமி தங்கியிருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சீதாலட்சிமியன் அக்கா பிரபாவதி தனது தங்கை வீட்டுக்கு வந்தார். அவர் புதுவையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணி புரிகிறார். அவர் இன்று புதுவைக்கு செல்லத் திட்டமிருந்தார்.

வீட்டின் முன்பக்கம் குடியிருந்த உறவினர்கள் நேற்றிரவு வெளியூர் சென்றுவிட்டனர். சீதாலட்சுமியும், அவரது அக்காவும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அந்த வீட்டில் இருந்த ஏசி பழுதானதால் அதை அகற்றிவிட்டு அந்த துவாரத்தை பிளைவுட்டை வைத்து அடைத்திருந்தனர். நள்ளிரவு 3 மணிக்கு மர்ம ஆசாமி ஒருவன் அந்த பிளைவுட்டை உடைத்து அந்த துவாரம் வழியாக வீட்டிற்குள் நுழைந்தான்.

ஏதோ சத்தம் கேட்டு சீதாலட்சுமியும், அவரது அக்காவும் விழித்துப் பார்த்தபோது அந்த கொள்ளையன் அவர்களை கத்தியைக் காட்டி மிரட்னான். சத்தம் போட்டால் கொன்றுவிடுவதாக மிரட்டி அவர்கள் அணிந்திருந்த நகைகளைக் கழற்றித் தருமாறு கேட்டுள்ளான்.

அவன் மிரட்டலுக்கு பயந்துபோய் சீதாலட்சுமி தான் அணிந்திருந்த வளையல், சங்கிலி உள்ளிட்டவற்றை கழற்றிக் கொடுத்தார். அது 25 சவரன் இருக்கும் என்று கூறப்படுகின்றது. இதையடுத்து பிரபாவதியையும் நகைகளைக் கழற்றுமாறு மிரட்டியுள்ளான. உடனே சீதாலட்சுமி சத்தம் போட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையன் சீதாலட்சுமியின் கழுத்தை நெரித்தான். இதில் அவர் மூச்சுத் திணறி உயிர் இழந்தார். இதையடுத்து அந்த கொள்ளையன் அங்கிருந்து ஓடிவிட்டான். பிரபாவதி போட்ட கூச்சலில் அக்கம் பக்கத்தினர் வந்தனர். அவர்களிடம் அவர் நடந்த விவரத்தைக் கூறினார்.

இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் இணை கமிஷனர் சேஷசாயி, துணை கமிஷனர் பாஸ்கரன், உதவி கமிஷனர் சரவணன், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.

சீதாலட்சுமி தனியாக வசிப்பது தெரிந்த யாரோ தான் இந்த கொடூரத்தை செய்திருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இது குறித்து பிரபாவதி கூறியதாவது,

சத்தம் போட்டால் கொன்றுவிடுவேன் என்று கொள்ளையன் மிரட்டினான். 4 பேர் வந்துள்ளதாகவும், அதில் தான் மட்டும் வீட்டுக்குள் நுழைந்ததாகவும் தெரிவித்தான். எனது தங்கை சத்தம் போட்டதால் அவளை கழுத்தை நெரி்ததுக் கொன்றுவிட்டான் என்றார்.

கொலை செய்யப்பட்டவர் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக