செவ்வாய், 3 ஜனவரி, 2012

தமிழ்த் திரையுலகம் நெடுஞ்சாலையோர உணவு விடுதிபோல்

மூன்று புத்தகங்களுக்கான முன்னுரை




தலைகீழ் ரசவாதி, இங்கே திரைக்கதைகள் பழுது நீக்கித் தரப்படும், பாரதிராஜா போலி மீட்பர் – ஆகிய மூன்று புத்தகங்களை நிழல் வெளியீடு வெளியிட்டிருக்கிறது. இந்த மூன்று புத்தகங்களையும் எழுதியவர் B.R. மகாதேவன். அந்தப் புத்தகத்தின் முன்னுரை இங்கே.
-oOo-
திரைப்படம் என்பது ஒளிப்பதிவு, இசை, எழுத்து, நடிப்பு, ஆர்ட் டைரக்ஷன், ஒப்பனை எனப் பல கலைகளின் கூட்டு முயற்சியில் உருவாகும் ஒரு நவீனக் கலை வடிவம். இவற்றில் பாரம்பரியக் கலைகளான இசை, எழுத்து, ஒப்பனை, நடிப்பு எனப் பலவற்றில் தமிழ்ச் சமுதாயம் எட்டியிருக்கும் சாதனைகள் அளப்பரியவை. அந்தவகையில் இந்த நவீனக் கலையில் வெற்றிக்கோட்டுக்கு வெகு அருகில் இருந்து ஓடும் மிகப் பெரிய வாய்ப்பு தமிழர்களாகிய நமக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால், நாமோ எதிர்த்திசையில் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறோம்.
www.tamilpaper.net
தமிழ்ப் பார்வையாளர்களுக்கு மட்டுமே பிடித்ததாக இருக்கும் தமிழ்த் திரைப்படங்களைத் தரமான ரசிகர்களும் பாராட்டும்படிச் செய்யவேண்டும் என்பதையே இந்தப் புத்தகத்தில் வெவ்வேறு வார்த்தைகளில் முன்வைத்திருக்கிறேன்.
திரைப்படம் என்பது பல்வேறு கலைகளின் கூட்டு முயற்சி என்பது உண்மைதான். என்றாலும் அதன் ஆதார அம்சமாக இருப்பது எழுத்துக்கலைதான். அதாவது கதை, திரைக்கதை, வசனம்தான். என்ன ஆனாலும், திரையில் காட்டப்படுவது கதைதானே. சுவாரசியமான சம்பவங்களால் அதை நகர்த்துவதில்தான் சவாலே இருக்கிறது. சோதனை முயற்சிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், பெரும்பாலான படங்கள் ஒரு கதையை, கூடுமானவரை நேர்கோட்டுப் பாணியில் சொல்வதையே இலக்காகக் கொண்டிருக்கின்றன. காட்சிக் கோணத்தையும், கலர் டோனையும் தீர்மானிப்பதுகூட, எதை நீங்கள் காட்சிப்படுத்துகிறீர்கள் என்பதுதான். அந்த வகையில் பிற கலைகள் எல்லாம் அலங்காரங்கள் என்றால், கதைதிரைக்கதைவசனமே திரைப்படத்தின் உடலும் உயிருமாக இருக்கின்றன. ஒரு நல்ல திரைக்கதையை வைத்துக்கொண்டும் மோசமான படத்தை எடுக்கமுடியும். ஆனால், மோசமான திரைக்கதையை வைத்துக்கொண்டு ஒருபோதும் நல்ல படத்தை எடுத்துவிட முடியாது. அந்தவகையில் ஒரு நல்ல திரைப்படத்தின் ஆதார அம்சமாக திரைக்கதையே இருக்கிறது.
ஓர் உதாரணம் சொல்கிறேன். ஜுராஸிக் பார்க் படத்தில் டைனஸர் மிகவும் பயங்கரமான, பிரமாண்டமான மிருகம் என்பதை இரண்டே காட்சிகளில் ஸ்பீல்பர்க் காட்சிப்படுத்தியிருப்பார். முதலாவதாக, ஆடு ஒன்று டைனஸருக்கு உணவாகும் காட்சி. முதல் மின்னல் வெளிச்சத்தில் பலிபீடத்தின்மீது கட்டப்பட்ட ஆடு ஒன்று காட்டப்படும். அடுத்த மின்னல் வெட்டில் அந்த பலிபீடத்தில் ஆட்டைக் கட்டிய கயிறும் முளைக்கம்பும் மட்டுமே காட்டப்படும். டைனஸர் ஆட்டை முழுங்கிவிட்டிருக்கும்.
அடுத்தது, கார் டேஷ்போர்டில் வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி கிளாஸின் தண்ணீர்ப் படலம் அதிரும் காட்சி. ஜுராஸிக் பார்க்கைச் சுற்றிப்பார்க்கப் போன குழு நடுக்காட்டில் மாட்டிக்கொண்டுவிடும். மின்சார வேலி வேறு செயலிழந்துவிடும். இரண்டு சிறுவர்கள் காருக்குள் பயந்து ஒளிந்துகொண்டிருப்பார்கள். டேஷ்போர்டில் வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி கிளாஸில் இருக்கும் நீரின் மேற்புறப்படலம், தூரத்தில் எங்கோ நடந்துவரும் டைனஸரின் ஒவ்வொரு காலடிக்கும் மெள்ள அதிரும். அதைப் பார்க்கும் ஒவ்வொரு பார்வையாளரின் மனமும் அதுபோலவே நடுங்கும். டைனஸரைப் பார்க்காமலேயே அந்தப் பயம் நம் மனத்தில் உருவாகிவிட்டிருக்கும்.
இந்தக் காட்சிகளின் முழுக் கலை அம்சம் என்பது அதை எழுதிய திரைக்கதை ஆசிரியரையே சாரும். ஒளிப்பதிவாளர், இயக்குநர், இசையமைப்பாளர், நடிகர்கள் எனப் பலருடைய கூட்டு முயற்சிதான் இந்தக் காட்சியை உச்சிக்குக்கொண்டு சென்றிருக்கிறது என்றாலும், திரைக்கதையே ஆதாரமான துள்ளல் பலகை.
ஒருவகையில் தமிழ்த் திரைப்படங்கள் இசை, நடனம், ஒளிப்பதிவு போன்ற அலங்கார விஷயங்களில் ஓரளவுக்கு நல்ல நிலையிலேயே இருக்கின்றன. அடிப்படை விஷயத்தில் மட்டும்தான் படு பலவீனமாக இருக்கின்றன. அதிலும் திரைக்கதை என்பதில் மிக மிக மோசமான நிலையில் இருக்கின்றன. மிகவும் வெற்றிகரமான, கலை நயம் மிகுந்தவையாகச் சொல்லப்படும் சில தமிழ்ப் படங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றின் திரைக்கதையின் பலவீனங்களைப் பட்டியலிட்டிருக்கிறேன். தவறுகளைச் சுட்டிக்காட்டியதோடு நிறுத்தாமல், எது சரி என்பதைக் கோடிட்டும் காட்டியிருக்கிறேன்.
நான் இலக்கிய உலகில் கடைசிப்படியில் இருக்கும் ஓர் எளிய படைப்பாளி. இந்தப் படத்தில் மாற்றுத் திரைக்கதையாக நான் முன்வைத்திருக்கும் காட்சிகளைப்போல் நூறு மடங்கு அபாரமான காட்சிகளையும் கதைகளையும் நம் இலக்கிய முன்னோர்கள் எழுதிச் சென்றிருக்கிறார்கள். சமகால இலக்கியவாதிகள் அதைவிடச் சிறப்பாக எழுதியும் வருகிறார்கள். அந்தத் தங்கச் சுரங்கமானது வெட்டி எடுக்கப்படாமல் வீணே முடங்கிக்கிடக்கிறது.
இந்தப் புத்தகம் இரண்டு வகையான வாசகர்களை இலக்காகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. முதல் வகை: தமிழ்த் திரையுலகம் பிரமாதமாக ஒளிவீசிக் கொண்டிருப்பதாக நம்பும் அல்லது நம்புவதுபோல் காட்டிக்கொள்ளும் அதிமேதாவிகள். அது உண்மையில்லை என்ற எளிய விஷயத்தை அவர்களுக்கு எடுத்துச் சொல்லவே இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. இரண்டாவது வகை: தமிழ்ப் பாரம்பரியக் கலைகள் குறித்த அல்லது சமகாலத்தில் பிற நாட்டில் திரைப்படத்துறையில் நடந்துவரும் சாதனைகள் குறித்த போதிய அறிவு இல்லாத அப்பாவி வாசகர்கள். இப்போது எடுக்கப்படுபவற்றைவிட மேலான படங்கள் சாத்தியமே என்பதை அவர்களுக்கு எடுத்துச்சொல்ல இந்தப் புத்தகம் முயற்சி செய்கிறது.
எதிரெதிர்த் துருவத்தில் இருக்கும் இந்த இரண்டு தரப்பினருக்கும் நன்கு புரிய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இயன்ற அளவு எளிமையாக எழுத முயன்றிருக்கிறேன். அதாவது, உலக சினிமாக்களுடன் வெகு சொற்பமாகவே ஒப்பிட்டுக் காட்டியிருக்கிறேன். என்ன இலக்குகளுடன் தமிழ்ப் படங்கள் எடுக்கப்படுகின்றனவோ அதைக்கூட அடைய முடியாமல் அவை தோற்றுப் போவதையே விரிவாக விவரித்திருக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரையில், தமிழ்த் திரையுலகம் நெடுஞ்சாலையோர உணவு விடுதிபோல் செயல்பட்டுவருகிறது. மட்டமான தரத்தில் இருந்த பிறகும் அந்த விடுதியில் எப்போதும் கூட்டம் முண்டியடிக்கவே செய்யும். ஏனென்றால், தொலைதூரப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அதைவிட்டால் வேறு வழி கிடையாது. அதனாலேயே அந்த விடுதியின் உணவே சிறப்பானது என்றாகிவிடாது. என் புத்தகத்தில் உண்மையில் ஒரு நல்ல விருந்து எப்படி இருக்கும் என்பதைச் சொல்லவே முயன்றிருக்கிறேன்.
இந்தப் புத்தகத்தில் திரைக்கதைக்கான குறிப்புகளை மட்டுமே கொடுத்திருக்கிறேன். நேரடித் திரைக்கதையாக எதையும் எழுதவில்லை. இதைத் திட்டமிட்டே தவிர்த்திருக்கிறேன். ஏனென்றால், காட்சி எண், இடம், நேரம், வசனம் என்ற திரைக்கதை வடிவம் படிப்பதற்கு நெருடலான ஒன்று. அதிலும் ஃபேட் இன், பேட் அவுட், லாங் ஷாட், க்ரேன் ஷாட் என்ற குறிப்புகளைக் கொண்ட ஷூட்டிங் ஸ்கிரிப்ட் என்பது, லகுவான வாசிப்புக்குத் துளியும் ஒத்துவராத வடிவம். எனவே, இந்தப் புத்தகத்தில் வாசிப்பு அனுபவத்தை மனதில் கொண்டு திரைக்கதைக் குறிப்புகளாகவே தந்திருக்கிறேன்.
இந்தப் புத்தகத்தைப் படித்துப் பார்க்கும் வாசகர்களில் யாராவது ஒருவர் தமிழ்ப் படங்களிலிருந்து கூடுதல் விஷயத்தை எதிர்பார்க்க ஆரம்பித்தாலோ, யாராவது ஒரு திரையுலகப் படைப்பாளி தன் படத்தின் திரைக்கதையை மேம்படுத்த சிறு முயற்சி எடுத்துக்கொண்டாலோ என் லட்சியம் நிறைவேறியதாக சந்தோஷப்படுவேன் என்றெல்லாம் சொல்லமாட்டேன். ஏனென்றால், நான் மிகவும் பேராசை பிடித்தவன். இது ஓர் ஆரம்பம் மட்டுமே.
இந்தப் புத்தகத்தைப் படித்துப் பார்த்த நண்பர்கள் சிலர், திரையுலகின் பிரமாண்டக் கதவுகள் இனி என்றென்றைக்குமாக உனக்கு மூடிக்கொண்டுவிடுமே என்று  கவலையுடன் கேட்டார்கள். இப்போது எடுக்கப்பட்டுவரும் பாணியிலான படங்களில் பங்களிக்க எனக்கும் விருப்பம் இல்லை. அந்தக் கதவுகளை நானே மூடிக்கொள்ளவே விரும்புகிறேன். இப்போது எடுக்கப்படுவதைவிட மேலான படங்களை எடுக்கவிரும்புபவர்களுக்கு என் வாசல் கதவை அகலத் திறந்து வைத்துக் காத்திருக்கிறேன் என்று சொன்னேன். இந்தப் புத்தகம் ஒருவகையில் தமிழ் படங்களை மேலான நிலைக்குக் கொண்டு செல்ல விரும்பும் அத்தகைய சக கலைஞர்களைக் கண்டடையும் முயற்சியில்தான் எழுதவும்பட்டிருக்கிறது.
B.R. மகாதேவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக