செவ்வாய், 3 ஜனவரி, 2012

மாநில சுயாட்சித் தீர்மானத்தை அதிமுக கடுமையாக எதிர்த்தது


மாநில சுயாட்சி. தங்களுடைய உயிர்நாடிக் கொள்கையான திராவிட நாடு கோரிக்கையை ஒத்திவைத்ததற்குப் பிறகு திமுக முன்வைத்த கோரிக்கை. மாநிங்களுக்குப் போதுமான அதிகாரங்களைக் கொடுத்துவிட்டு, நாட்டின் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் பாதுகாப்பதற்கு எவ்வளவு அதிகாரங்கள் தேவையோ அவற்றை மட்டும் மத்திய அரசு வைத்துக் கொண்டால் போதும் என்பதுதான் அண்ணா சொன்ன கருத்து. அதை அடிப்படையாக வைத்து மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற கோஷத்தைத் தொடர்ச்சியாக வலியுறுத்தத் தொடங்கினார் கருணாநிதி.
1972 ஆகஸ்டு மாதத்தில் மதுரையில் திமுக மாநாடு ஒன்றை நடத்தினார் கருணாநிதி. மாநில சுயாட்சி மாநாடாக அடையாளப்படுத்தப்பட்ட அந்த மாநாட்டில் மாநில சுயாட்சிக் கோரிக்கை அழுத்தம்திருத்தமாக வலியுறுத்தப்பட்டது. தற்போது அந்தக் கோரிக்கையை தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றும் முடிவுக்கு வந்திருந்தார் கருணாநிதி. திமுக இன்னமும் பிரிவினை எண்ணங்களில் இருந்து விடுபடவில்லை; மாநில சுயாட்சி என்ற பெயரில் மீண்டும் மீண்டும் பிரிவினைக் கருத்துகளைத்தான் பரப்பிவருகிறது என்பது இந்திரா காங்கிரஸ் தலைவர்களின் குற்றச்சாட்டு.
16 ஏப்ரல் 1974 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை முதலமைச்சர் கருணாநிதி முன்மொழிந்தார். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி கொண்ட உண்மையான கூட்டாட்சி முறையை உருவாக்கும் அடிப்படையில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உடனடியாகத் திருத்தப்படவேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானத்தின் சுருக்கம்.
மாநில சுயாட்சி என்பது திமுகவினரின் சிந்தனையில் உருவான கோட்பாடு அல்ல; மாறாக, இந்திய தேசிய காங்கிரஸ் ஆரம்ப காலத்தில் வலியுறுத்திய கோரிக்கைதான்; ஆனால் அது நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருப்பதால் அதைப்பற்றிப் பேசுவதை காங்கிரஸ் தவிர்த்துவிட்டது என்று ஒரு சாரார் கூறினர். தமிழரசுக் கழகத்தின் தலைவரான ம. பொ. சிவஞானம் பல ஆண்டுகளாக வலியுறுத்திவரும் கொள்கைதான் மாநில சுயாட்சி. அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவர் அவர். அவருடைய கோஷத்தைத்தான் திமுகவும் கருணாநிதியும் கைப்பற்றிக் கொண்டனர் என்ற கருத்தும் இருந்தது. அந்த விமரிசனங்களுக்கு சட்டமன்ற மேலவையில் விளக்கம் கொடுத்தார் ம. பொ. சிவஞானம்.
‘யாரோ சொன்னார்களாம், ‘ம. பொ. சியின் கொள்கையைக் கருணாநிதி எடுத்துக்கொண்டார் என்று!’ ஆணவம் இல்லாமல் மட்டுமல்ல; அடக்கத்தால் மட்டுமல்ல, சத்தியமாகவும் சொல்கிறேன். இந்தத் தத்துவம் எனக்குச் சொந்தமல்ல. இது, அகில உலகின் அரசியல் சாத்திரம் – சரித்திரம். அதற்காக ஒரு இயக்கத்தைத் தொடங்கியவன் என்ற சிறப்பு எனக்கு இருக்கலாமே ஒழிய, சுயாட்சித் தத்துவமே எனக்கு ஏகபோகமல்ல. ’
கருணாநிதி கொண்டுவந்த மாநில சுயாட்சித் தீர்மானத்தை அதிமுக கடுமையாக எதிர்த்தது. இத்தனைக்கும் அதிமுகவின் நிறுவனர் எம்.ஜி.ஆர், திமுகவின் பொருளாராக இருந்தபோது நடந்த மதுரை மாவட்ட திமுக மாநாட்டில் மாநில சுயாட்சி பற்றி மேடையில் ஆவேசமாகப் பேசியிருந்தார். மாநாட்டுக்கு வந்திருந்தவர்களை நோக்கி “மாநில சுயாட்சியை’ என்று உரத்த குரலில் கூறினார் எம்.ஜி.ஆர். அதற்கு பொதுமக்கள், “அடைந்தே தீருவோம்’ என்று பதில் குரல் எழுப்பினர். ஆனால் தற்போது கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் எதிரெதிர் முகாமுக்கு வந்திருந்தனர். ஆகவே, மாநில சுயாட்சிக்குத் தீர்மானத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்தது அதிமுக.
‘நீங்கள் மாநில சுயாட்சி கேட்பதற்கான தகுதியை இழந்து விட்டீர்கள். உங்களுக்கு அந்தச் சாவியைக் கொடுத்தால் தீமைகள் இன்னும் அதிகமாக வரும்’ என்றார் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஹெச். வி. ஹண்டே.
எனில், இரண்டு ஆண்டுகள் கழித்து மாநில சுயாட்சி கேட்கலாமா? அப்போது கொடுக்கவேண்டும் என்று கேட்பீர்களா? என்று எதிர்க்கேள்வி எழுப்பினார் முதலமைச்சர் கருணாநிதி.
‘நல்ல ஆட்சியாக இருந்தால் கேட்பதற்கு உரிமை இருக்கிறது. நாங்கள் வந்தால் நிச்சயமாகக் கேட்போம். அப்போது கொடுக்கவேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் கிடையாது. ’- இது ஹண்டே கொடுத்த பதில்.
‘அப்படி நீங்கள் கேட்கும்பட்சத்தில் ஒருவேளை நாங்கள் எதிர்க்கட்சியிலே இருந்தால் நிச்சயமாக ஆதரிப்போம், பரந்த மனப்பான்மையோடு’ என்றார் கருணாநிதி.
மாநில சுயாட்சித் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பலரும் பேசினர். பிறகு முதலமைச்சர் கருணாநிதி விவாதங்களுக்குப் பதிலளிக்கும்போது மாநில சுயாட்சியின் அவசியம் பற்றிப் பேசினார்.
‘1973 – 74 நிதி நிலை அறிக்கையில் மால்கோ தேசிய மயமாக்கப்படவேண்டும் என்று அறிவித்தோம். அதற்கான சட்ட நகலை மத்திய அரசுக்கு அனுப்பினோம். ஆனால், இதுவரையில் அந்தப் பிரச்னை என்னவாயிற்று? முடியுமா? முடியாதா? என்கின்ற எந்தத் திட்டவட்டமான பதிலும் மத்திய அரசிடம் இருந்து வரவில்லை.
‘தொழிலாளிகளுக்கு நிர்வாகத்திலே பொறுப்பு – முதலீட்டில் பங்கு’ என்ற திட்டத்தை அறிவித்து, விதிமுறைகள் வகுத்து, மசோதா கொண்டுவந்து – இன்றைக்கு அந்தச் சட்டம் மத்திய சர்க்காருடைய தயவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்குச் செல்லக் கூடாது என்று தடை இருந்தது. அந்தத் தடையை மத்திய சர்க்கார் நீக்கிவிட்டார்கள். யாரைக் கேட்டுக் கொண்டு நீக்கினார்கள்? நம் மாநிலத்தைக் கலந்துகொண்டு செய்யப்பட்டதா? இல்லை.
எண்ணெய் விலையை ஒரளவுக்காவது கட்டுப்படுத்தலாம் என்றுதான் வேர்க்கடலைக்கு லெவி வேண்டும் என்றும் வியாபாரத்துக்கு லைசென்ஸ் தரப்படவேண்டும் என்றும் அதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு வேண்டும் என்றும் அனுமதி கேட்டோம். இதுவரை அந்த அனுமதி தரப்படவில்லை.
மத்திய அரசின் அனுமதி இல்லாமலேயே இதுவரை எண்ணெய் டிப்போக்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகம் செய்ய உத்தரவிடுகிற அதிகாரம் இதுவரை மாநிலத்துக்கு இருந்தது. ஆனால் திடீரென்று 1972ல் இந்த அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக்கொண்டது.
எனவே, அதிகாரம் கேட்பது இங்கே அமர்ந்திருக்கிற அமைச்சர் பெருமக்கள் அந்த அதிகாரத்தை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவா? அதிகாரம் எங்களுக்காக அல்ல; மாநிலத்துக்காகக் கேட்கிறோம். அது புரிய வேண்டும் என்பதற்காகத்தான் மாநில சுயாட்சி என்று சொல்கிறோம். மத்தியில் கூட்டாட்சி – மாநிலத்தின் சுயாட்சி என்று கூறுகிற நேரத்திலேயே அங்கு பிரிவினைக்கு எள்ளளவும் இடமில்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.. மாநில சுயாட்சி என்பது தேவையின் அடிப்படையில் எழுந்த அரசியல் கோரிக்கையே தவிர, அரசியல் கட்சியின் கோரிக்கை அல்ல என்று 21 ஜூலை 1968ல் நடைபெற்ற மாநாட்டில் அண்ணா பேசினார்’
மொத்தம் ஐந்து நாள்களுக்கு விவாதம் நடந்தது. வாக்கெடுப்பு நடத்தவேண்டியதுதான் பாக்கி. தீர்மானத்துக்கு ஆதரவாக திமுக தவிர முஸ்லிம் லீக், ஃபார்வர்ட் ப்ளாக், தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மணலி கந்தசாமி), தமிழரசு கழகம் (ம. பொ. சி) உள்ளிட்ட கட்சிகள் தீர்மானத்துக்கு ஆதரவு கொடுத்தன. ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் தீர்மானத்தை எதிர்த்தன.
வாக்கெடுப்பு முடிந்தபோது 161 பேரும் எதிராக 23 பேரும் வாக்களித்தனர். வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் அவையில் இருந்து வெளியேறியது அதிமுக. அதற்காக அதிமுக தரப்பில் சொல்லப்பட்ட காரணம், தீர்மானம் பற்றி, விவாதித்து, முடிவெடுக்க கால அவகாசம் போதவில்லை என்பதுதான். கருணாநிதியின் கனவுத் தீர்மானங்களுள் ஒன்றான மாநில சுயாட்சித் தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேறியது. அதில் கருணாநிதிக்கு மிகுந்த மகிழ்ச்சி.
மாநில சுயாட்சி என்ற பதத்தை வைத்துக்கொண்டு இயங்கிய கருணாநிதிக்கும் திமுகவுக்கும் பின்னாளில் மிகப்பெரிய நெருக்கடிகள் அந்த பதத்தை வைத்தே உருவாக்கப்பட்டன. அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டன; ஒவ்வொரு வார்த்தையும் கவனமாகக் குறிப்பெடுக்கப்பட்டன. உபயம்: மத்திய அரசின் உளவுத்துறை அதிகாரிகள். நிற்க.
சுதந்தரா கட்சித் தலைவர் ராஜாஜிக்கு நினைவாலயம் ஒன்றை எழுப்பியிருந்தது தமிழக அரசு. அதை யாரைக் கொண்டு திறந்துவைப்பது என்ற கேள்வி எழுந்தபோது கருணாநிதியின் நினைவுக்கு வந்த பெயர், ஜெயப்ரகாஷ் நாராயணன். அழைப்பு ஏற்றுக்கொண்டார் ஜெ. பி. ஆனால் அவர் வருவதில் இந்திரா காங்கிரஸ் தலைவர்களுக்கு விருப்பம் இல்லை.
காரணம், பீகாரில் உள்ள காங்கிரஸ் அரசுக்கு எதிராக மிகப்பெரிய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்கியிருந்தார் ஜெ. பி. உண்மையில் அவர் இந்திரா காந்திக்கு எதிராக நாடு தழுவிய அளவில் அணி திரட்டுவதாகவே இந்திரா காங்கிரஸார் சந்தேகப்பட்டனர். அதில் ஓரளவுக்கு உண்மையும் இருந்தது. அப்படிப்பட்ட ஒருவர் தமிழகம் வரும்போது அவரை எதிர்த்துக் கறுப்புக்கொடி காட்டுவது என்று இந்திரா காங்கிரஸார் முடிவுசெய்தனர். போதாக்குறைக்கு, தமிழகத்துக்கு வந்து ஊழலை ஒழிக்கப் போராடவேண்டும் என்று ஜெ. பிக்குக் கடிதம்
ஒன்றை எழுதியிருந்தார் எம்.ஜி.ஆர்.
புதிய நெருக்கடி உருவாகியிருந்தது கருணாநிதிக்கு!
-ஆர். முத்துக்குமார் 
www.tamilpaper.net

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக