வெள்ளி, 13 ஜனவரி, 2012

முல்லைப் பெரி​யாறு அணை.. கண்டுபிடித்த முத்து இருளப்பனும்... களம் அமைத்துக் கொடுத்த ராபர்ட்டும்


காவல் கோட்டம்’ நாவலுக்கான தேடுதலில் இருந்தபோது என்னை மலைக்கவைத்த தரவுகளில் முக்கியமானது முல்லைப் பெரி​யாறு அணையின் கட்டுமானப் பணிகளின் தொடக்க காலம்.
இன்று அரசியலுக்காக சிலர் அதை இடிக்கக் கிளம்பி இருக்கிறார்கள். ஆனால், அது எத்தகைய இடையூறுகளுக்கு மத்தியில் கட்டப்பட்டது என்பதை பிரிட்டிஷ் ஆவணங்கள் ரத்தமும் வியர்வையுமாகச் சொல்கின்றன.
முதல் நன்றி முத்து இருளப்ப பிள்ளைக்கு!
அனாதி காலம்தொட்டு மனித நடமாட்டமே இல்லாத அந்த மலையுச்சிக் காட்டுப் பகுதியில், நதியின் குறுக்கே தடுப்பு அணை கட்டு​வதற்கான ஆரம்பப் பணிகள் துவங்கி இருந்தன. காற்று கூட உள்நுழைய முடியாதபடி பசுமையால் மூடி அது தனது வளத்தைக் காத்துக் கிடந்தது. அதற்குள் மனிதர்கள் ஊடுருவிப் போனார்கள். உயர்ந்த மரங்​களையும் செடி கொடிகளையும் வெட்டி அழித்தபடி அவர்கள் உள்ளே நுழைந்தனர். பொறியாளர்களால் குறியிடப்பட்ட அந்த இடத்தில் நதியின் இரண்டு பக்கமும் இருந்த மலைப்பாறைகளை உடைத்து எடுக்கும் பணி துவங்கி இருந்தது. தடுப்பு அணை கட்டப்படுவதற்கு வலதுபுறம் இருந்த ஒரு சிறிய சமவெளிப் பகுதியில் மரங்கள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டன. அங்குதான் கூடாரங்​கள் போடப்பட்டன. கூரைகள் வேயப்பட்ட சிறு குடில்கள் கட்டப்பட்டன.
விலங்குகளுக்கான பட்டியுடன் ஒரு சிறு கிராமம் போல இருந்தது அந்த இடம். சுற்றிலும் அடர்ந்த காடு. தேன் கூட்டுக்குள் குச்சியைச் சொருகி உள்ளே தேன் இருப்பதைக் கண்டறிவதைப் போல அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் நதியின் ரகசியம் ஒன்றைக் கண்டறிந்து சொன்னவர்கள் அங்கு இருந்த வன மைந்தர்களான பளியர்களே. அவர்கள்தான் 200 ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரம் முத்து இருளப்பப் பிள்ளைக்கு இந்த இடத்தைக் காட்டினார்கள். 'வைகையின் ஊற்று வறண்டுகிடந்த ஒரு கோடைக் காலத்தில் இந்த மலையில் இருந்து தண்ணீர் பெற எதுவும் செய்ய முடியாதா?’ என்று அவர் இறைஞ்சிக் கேட்டபொழுது, வருசநாட்டுப் பளியர்கள்தான் உச்சிமலையில் தண்ணீர் ஓடும் அந்த இடத்தைக் காட்டினார்கள். தெற்குச் சீமையின் தாகம் தணிக்க அவர் பல யோசனைகள் செய்து திட்டம் போட்டார். காலம் நதியில் உருளும் கூழாங்கல்லாய் உருண்டு ஓடியது!

சசிதரன் நாயர் நம்முடைய நன்றிக்குரியவர்!

வெட்டிய மரங்களை அப்புறப்படுத்த யானைகள் உதவின. குதிரைகள்தான் வெள்ளை அதிகாரிகளின் வாகனங்கள். ஏழு யானைகள் இருந்தன. அதன் தலைமைப் பொறுப்பாளராக சசிதரன் நாயர் இருந்தார். காடுகளைப் பற்றியும், யானைகளைப் பற்றியும் தேர்ந்த ஞானம் உள்ளவர். திருவிதாங்கூர் வனப்பகுதிகளின் ஜாதகங்களைக் கணித்த பூர்வீகக் குடும்பங்களில் ஒன்று இவருடையது. யானைகள் பலவற்றை வைத்துப் பராமரித்த அனுபவம் பல தலைமுறையாக அவர்களுக்கு வாய்த்திருந்தது. கணுக்கால் கனமாகவும், பாதம் நல்ல வடிவத்துடனும் இருக்கும் யானைகளே சேற்றிலும் நன்றாக வேலை செய்யும் என்பதைக் கணித்து, அப்படியான யானைகளாகக் கொண்டுவந்து முகாமில் நிறுத்தியிருந்தார். யானைகளையும் பாகன்களையும் தனது உடலைப் போல் அவர் காத்து வந்தார். யானைகளுக்கு சேணங்கள் வரியாக உட்காராமல் உராய்வதால் ஏற்படும் புண்களையும் மூங்கில் கணுக்களால் ஏற்படும் காயங்களையும் பாகன்கள் கண்டறியும் முன், சசிதரன் கண்டு சொல்வார். வேலையிடங்களில் பாறைகளுக்கு இடையில் குறுகிய வழியில்கூட பெரும் மரக்கட்டைகளை அது லாகவமாகத் தூக்கிவரும்.

இரும்புச் சாமான்கள், கயிறுகள், வெடிமருந்து டப்பாக்கள், கூடாரப் பொருட்கள், சாராயப் பீப்பாய்​கள் என எல்லாவற்றையும் கோவேறுக் கழுதைகளும் எருதுகளும் சுமந்து வந்தபடியே இருந்தன. ஒரு நாளைக்கு ஒரு நடை கொண்டுவந்து சேர்ப்பதே கடினமாக இருந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அங்கேயே தங்கியிருந்தனர். தடுப்பு அணை கட்ட வேண்டிய இடத்தில் பாறைகளை உடைத்து எடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வந்தது. இரண்டு பக்க மலைச்சரிவிலும் பெரும் பாறைகளை வெட்டியெடுக்க வேண்டிருந்தது. பகலில் பாறைகளைப் பெயர்க்க வைக்கப்படும் வெடிச்சத்தம் காடெங்கும் எதிரொலித்தபடி இருந்தது. வெள்ளை அதிகாரிகள் காலையில் புறப்பட்டு வருவதும் மாலையில் போவதுமாக இருந்தனர். கீழேயிருந்து உணவுப் பொருட்கள் குறைந்த அளவே கொண்டுவந்து சேமிக்கப்பட்டிருந்தன. காட்டுக் கிழங்குகள்தான் முக்கிய உணவு, பளியர் பெண்கள் தேன் உள்ளிட்ட மலைபடு பொருட்களைத் தினமும் கொண்டுவந்து பண்ட மாற்று செய்துகொண்டனர்.

வல்லாங்கனுக்கு வந்தனம்!

வல்லாங்கன், ஃபாதர் ஜேம்ஸை வந்து பார்த்து, அவர் மூலம் அதிகாரிகளிடம் அறிமுகமாகி வேலை நடக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தான். அதற்கு முன்னால் பல முறை விசுங்கனுடனும் நரியனுடனும் வேட்டைக்கு வரும்பொழுது, இடிந்த குறும்பா பகவதி கோவில் தாண்டி மலை ஏறி அவன் வந்திருக்கிறான். ஆனால், இந்த இடத்துக்கு அவன் வந்தது இல்லை. இவ்வளவு உயரமான மலையின் மீது காட்டின் இறுகிய பிடிக்குள் தங்கியிருந்து வேலை செய்கிறவர்களை இன்று வந்து பார்த்தவுடன் அவனுக்கு வியப்பாக இருந்தது. 'இத்தன பேரு வந்திருக்காங்களாடா...’ என்று நினைத்துச் சிரித்தபடி வேலை நடக்கும் இடத்துக்குள் இறங்கினான்.

அங்கேயே வேலை பார்த்து அவர்களுடனேயே தங்கினான். வெள்ளைக்காரன் பீப்பா பீப்பாவாகக் கொண்டுவந்து இனாமாகக் கொடுக்கும் சாராயம்தான் அனைவரையும் போல அவனையும் துடிப்புடன் வைத்திருந்தது. காடு பற்றிய அவனது அசட்டை மேற்பார்வையாளர் ராபர்ட்டுக்கு மிகவும் பிடித்துப்​​போனது. அவர், வல்லாங்கனைத் தனது அருகிலேயே வைத்துக்கொண்டார். காட்டுக்குள் போகும்பொழுது துப்பாக்கி இல்லாமல் இருப்பதை அவன் பலவீனமாகவோ, பயமாகவோ உணராமல் இருப்பதை அவர் வியந்தார்.

பாறைகளைத் தகர்க்கும் வெடி ஓசை கேட்டபடி இருந்தது. வேலைகள் மும்முரமாக நடைபெற்றன. வெள்ளைக்கார இன்ஜினியர்கள் தொப்பிகளுடனும் பூட்ஸ்களுடனும் ஆங்காங்கே பாறைகளின் மீது ஏறி அளவெடுத்துக் குறித்தபடி இருந்தனர்.

ராபர்ட்டுக்கு சல்யூட்!

யாரோ ஒரு முதிய பளியனை ஒரு யானை தும்பிக்கையால் சுருட்டித் தேக்கு மரம் ஒன்றில் மாறி மாறி அடித்தது. தலை சிதறி எலும்புகள் நொறுங்கிச் சக்கையாகத் தொங்கும் வரை அது விடவில்லை. இரவு முழுவதும் அது அடித்துக்கொண்டே இருந்தது. 'நீ ஏண்டா அவனுக்கு இந்த எடத்தக் காட்டுன...?’ என்று புலம்பியபடி இருந்த அவன் மனைவியின் உயிர் அதிகாலையில் பிரிந்தது. பளியனின் மனைவி இறந்தது பலரையும் நடுக்கமுறவைத்தது. பகலிலும் இரவிலும் இதையே பேசிக்கொண்டு இருந்தனர். காடு பலி வாங்கத் துவங்கி விட்டதாக அனைவரும் கருதினர்.

மற்றவர்கள் வழக்கம் போல் வேலைகளைப் பார்த்தனர். ஆனால், யானை முகாமில் இருந்த சசிதரன் இந்தச் செய்தி கேள்விப்பட்ட பின் இரண்டு நாட்களாக முகாமைவிட்டு வெளியே வரவில்லை. யாருடனும் சகஜமாகப் பேசவில்லை. ஒரு வாரத்துக்குப் பின், காட்டுக்குள் போய்த் திரும்பிய பளியர்கள், யானைகள் கொல்லப்பட்டுக் கிடப்பதைப் பார்த்து வந்து சொன்னார்கள். உடனே ராபர்ட் உள்ளிட்ட ஆங்கில அதிகாரிகள் யானை ஒன்றின் மீது ஏறி பளியர்களை அழைத்துக்கொண்டு அந்த இடத்துக்குப் போனார்கள். அங்கே இரண்டு பெண் யானைகள் செத்துக்கிடந்தன. மதம்கொண்ட ஒரு யானைதான் இவற்றைத் தந்தங்களால் குத்திக் கிழித்துப் போட்டிருக்கிறது.

அதன்பிறகு, பணியிடத்தில் துப்பாக்கிக் காவல் உஷார்படுத்தப்பட்டது. வேலையாட்கள் பயத்துடன் இருந்தனர். எல்லா மரங்களுக்குப் பின்பும் காதுகளை ஆட்டியபடி தந்தங்களில் சுருள் கொண்ட அந்த யானை நிற்பது போல் இருந்தது. நாளுக்கு நாள் வேலைத்தளத்தில் நிலைமை மோசமானபடி இருந்தது. அந்த யானையைச் சுட்டு வீழ்த்துவது என்பது எல்லோருடைய பாதுகாப்புக்கும் மிகஅவசியம் என்றானது. அதைச் சுடுகின்ற காவலாளிக்கு அதிகாரிகள் பரிசுத்தொகை அறிவித்த செய்தியும் யாருக்கும் ஆவலைத் தூண்டவில்லை. பாறைகளில் வேட்டு வைக்கும்போது எங்கிருந்தாவது மிரண்டு இந்தப் பக்கம் ஓடி வந்துவிடுமோ என அஞ்சியபடி அவர்கள் வெடி வைத்தனர். இதனால், பாறையை உடைத்து எடுக்கும் பணி உற்சாகமின்றி நடந்துகொண்டு இருந்தது. ராபர்ட் மட்டுமே வேலையாட்களைத் தைரியமாக இருக்கும்படி சொன்னார்.

குடிசைகள் இருந்த இடத்துக்கு ராபர்ட்டும் வல்லாங்கனும் மற்றொரு காவலாளியும் வந்துகொண்டு இருந்தனர். திடீரென தூரத்தில் இருந்த யானை முகாமில் முரசு ஒலிக்கும் சத்தம் கேட்டது. ராபர்ட்டும் மற்ற இருவரும் நிலைமையை ஊகித்து துப்பாக்கியைத் தூக்கிப் பிடித்தபடி வேகமாக ஓடினர். முகாமுக்கும் குடிசைகளுக்கும் மத்தியில் மலையின் மேலே இருந்து செடி கொடிகளைப் பிடுங்கி எறிந்தபடி அது சரசரவென வந்துகொண்டு இருந்தது. முகாமில் இருந்தவர்கள் மத யானைதான் வருகிறது என்பதை உணர்ந்து அதை விரட்டப் பயங்கரமான சத்தத்துடன் தப்படித்து ஒலி எழுப்பினர். அது உள்ளே நுழைந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம். ஆனால் அது தன் போக்குக்கு வந்துகொண்டே இருந்தது. ராபர்ட்டும் மற்றவர்களும் குடியிருப்பைத் தாண்டி ஓடி வந்தனர். சற்றும் எதிர்பாராமல் பாறையின் வெடியோசை அவர்களுக்குப் பின்புறம் இருந்து கேட்டு காடு முழுவதும் எதிரொலித்தது. காட்டுக்குள் இருந்து வெளிவந்த வேகத்தில் யானை, வெடியோசை கேட்ட பக்கம் திரும்பியது. தூரத்தில் மூன்று பேர் ஓடி வருவதைப் பார்த்தவுடன் வெறிகொண்டு அவர்களைத் தாக்க ஓடி வந்தது. தும்பிக்கையைச் சுருட்டி வாயில் வைத்தபடி வந்த அதன் ஓட்டம் அந்த இடத்தையே அதிரச்செய்தது. தன்னை நோக்கி ஓடிவருவதைக் கண்ட ராபர்ட் கொஞ்சம் நிதானித்து, ஒரு சிறிய பாறைத் தடுப்புக்கு பின்னால் நின்றவாறு துப்பாக்கியால் குறிபார்த்தபடி இருந்தார். உக்கிரமாக அது ஓடி வருவது கண்டு குலை நடுங்க நின்று கொண்டு இருந்தான் காவலாளி. இரண்டாவது துப்பாக்கியை ராபர்ட்டுக்குக் கொடுக்கத் தயார் நிலையில் நின்றுகொண்டு உற்றுப் பார்த்தபடி இருந்தான் வல்லாங்கன். புழுதியைக் கிளப்பியபடி அது அவர்களை நோக்கி ஓடி வந்தது. குழாயைத் தூக்கிப் பிடித்துக் குறி பார்த்தபடி இருந்த ராபர்ட் குறிப்பிட்ட இடைவெளிக்குள் அது வந்துவிட்டதைக் கணித்து அதன் மத்தகத்தை நோக்கி சுட்டார். ஐந்து கெஜ தூரம்... அது முன்னால் வந்து விழுந்தது. வலது தந்தம் முக்கால் அடிக்கு மேல் மண்ணுக்குள் சொருகியது. சற்று நேரம் அதன் தலை மண்ணில் சாய்ந்தபடி உயிர்விட்டது.

சில நொடிகளுக்குப் பிறகுதான் ராபர்ட்டுக்கு உயிர் வந்தது. குறி தப்பியிருந்தாலோ, சரியான இடத்தில் குண்டு பாயாமல் போயிருந்தாலோ, நிச்சயம் அடுத்த துப்பாக்கியை வாங்கிச் சுடுவதற்கான அவ​காசம் இருந்திருக்காது. ஆக்ரோஷத்துடன் அது ஓடி வந்தவிதம், வேட்டையில் நீண்ட அனுபவம் உள்ள தன்னையே இதுவரை இல்லாத அளவுக்கு கை நடுங்கச் செய்துவிட்டது என்பதை உணர்ந்தபடி அப்படியே நின்றார். வீழ்ந்த பின்பும் அதன் வேகம் அவர் கண்ணுக்குள்ளே இருந்தது. சத்தம் கேட்டு பணியிடத்தில் இருந்து ஆட்கள் தலைதெறிக்க ஓடி வந்தனர். குடிசைகளில் இருந்தும், யானை முகாமில் இருந்தும் சில நிமிடங்களில் எல்லோரும் வந்து குவிந்தனர். மொத்தக் கூட்டமும் அங்கு வந்து சேர்ந்தது. எல்லோரும் அந்தக் கரிய பெரிய உருவத்தை அதிர்ச்சியுடன் உற்றுப் பார்த்தனர். ஒரு பெரும் பயம் வீழ்த்தப்பட்ட சந்தோஷம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்தது. தந்தத்தில் இருந்த சுருள் சுருளான வளையங்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. எங்கள் வாழ்நாளில் இது போன்ற ஒன்றை நாங்கள் பார்த்ததே இல்லை என்று பாகன்கள் கூறினர். ஆங்கில அதிகாரிகள் ராபர்ட்டுக்குக் கை கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தபடி இருந்தனர். சத்தமும் கூச்சலும் அந்த இடத்தை நிரப்பியது. சிறிது நேரத்துக்குப் பின், ராபர்ட் தந்தங்களை வெட்டி எடுக்கச் சொன்னார். நாட்டுக்குத் திரும்பும்போது நான் கொண்டுசெல்லும் மிகச்சிறந்த நினைவுப் பொருள் இதுவாகத்தான் இருக்கும் என்று சக அதிகாரிகளிடையே தெரிவித்தார்.

அவர்கள் எடுத்துச் சென்றது யானைத் தந்தமாக இருக்கலாம். ஆனால் அவர்கள் நமக்கு விட்டுச்சென்றது உயிர் தளிர்க்க வைக்கும் மருந்து அல்லவா?
thanks vikatan +sithamparam chettiar boston

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக