வெள்ளி, 13 ஜனவரி, 2012

துக்ளக் விழாவில் அத்வானி- மோடி: நாளை ஜெ.- ரஜினியைச் சந்திக்கிறார்கள்!


Jaya, Modi, Advani and Rajini
சென்னை: நாளை சென்னைக்கு வருகை தரும் பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானி மற்றும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்திக்கிறார்கள்.
சிங்கப்பூரில் சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் பெற்று வந்திருக்கும் ரஜினியிடம் உடல் நலம் விசாரிக்கவே இந்த சந்திப்பு என கூறப்படுகிறது.
சோ நடத்தும் துக்ளக் பத்திரிகையின் 43 வது ஆண்டு விழா நாளை ஜனவரி 14-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாலை 6 மணிக்கு நடக்கிறது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பாரதீய ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்கிறார்கள். இதற்காக நரேந்திர மோடி தனி விமானம் மூலம் மதியம் 12.45 மணிக்கு சென்னை வருகிறார். அத்வானி 1.30 மணிக்கு வருகிறார். சிறிது நேரம் இருவரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் ஓட்டலில் தங்கி ஓய்வெடுக்கிறார்கள்.
பின்னர் சமீபத்தில் மரணம் அடைந்த பாஜக நிர்வாகி சுகுமாறன் நம்பியார் வீட்டுக்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்கிறார்கள்.
அடுத்து அவர்கள் இருவரும் ரஜினியைச் சந்தித்து நலம் விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
ரஜினிகாந்த் உடல் நல மில்லாமல் ராமச்சந்திரா மருத்துவமனையில் தங்கயிருந்தபோது, அவரைச் சந்தித்து நலம் விசாரித்ததோடு, ரஜினியின் உடல் நிலை குறித்து ரசிகர்களிடம் கூறி, அவர்களை அமைதிப்படுத்தியவர் நரேந்திர மோடிதான்.
சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று திரும்பிய பிறகு இதுவரை ரஜினியை அத்வானியோ மோடியோ சந்திக்கவில்லை. எனவே நாளை மாலையில் ரஜினியை சந்தித்து பேசுகிறார்கள். போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
பின்னர் அத்வானி, நரேந்திர மோடி இருவரும் போயஸ் தோட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசுவார்கள் என்று கூறப்படுகிறது. சசிகலா நீக்கத்திற்குப் பிறகு முதல் முறையாக ஜெயலலிதாவை நேரில் சந்திக்கவுள்ளார் மோடி. இந்த சந்திப்பின்போது மதுரை அருகே தான் செல்லவிருந்த பாதையில் வெடிகுண்டு இருந்ததைக் கண்டுபிடித்து உரிய பாதுகாப்பு அளித்ததற்காக அத்வானி ஜெயலலிதாவுக்கு நேரில் நன்றி சொல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாலையில் துக்ளக் விழாவில் பங்கேற்ற பின், இரவு 9.30 மணிக்கு தனி விமானத்தில் நரேந்திர மோடி ஆமதாபாத் புறப்பட்டு செல்கிறார். இரவு 11 மணிக்கு அத்வானி டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக