ஞாயிறு, 8 ஜனவரி, 2012

கனவில் வந்த கடவுள்: மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது

குண்டூர்: ஆந்திராவில் கடவுள் வந்து அழைப்பதாக கூறிய பெண்ணை சிலுவையில் அறைந்த கணவன், சகோதரனை போலீசார் கைது செய்தனர். சிலுவையில் அறையப்பட்ட பெண்ணை உடனடியாக மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் குஞ்சான்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்காயம்மா (35). அவரது கணவர் பிரான்சிஸ். சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்கள். அதன்பிறகு வெங்காயம்மா தனது பெயரை தேவகுமாரி என்று மாற்றிக்கொண்டார். கடந்த சில மாதங்களாகவே தனது கனவில் அடிக்கடி ஏசு கிறிஸ்து வருவதாக தேவகுமாரி தனது உறவினர்களிடம் கூறி வந்தார். இதையறிந்த அப்பகுதி மக்கள் அவரிடம் திரண்டு சென்று ஜெபம் செய்து ஆசி பெற்று வந்தனர்.
சிலுவையில் அறைய வேண்டும்இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தேவகுமாரி கணவர் மற்றும் சகோதரர்கள் சந்திரசேகர், ரமேஷ் ஆகியோரிடம், 'ஏசு கிறிஸ்து தனது கனவில் தோன்றி மகளே நீ என்னிடம் வர விரும்பினால், உன்னை உயிருடன் சிலுவையில் அறைய ஒப்புக்கொடுக்க வேண்டும்' என்று கூறினார் என்று தெரிவித்தார். இதை கேட்டதும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தேவகுமாரியின் உறவினர்கள் வேண்டாம் இந்த விபரீதம் என்று கூறி தடுத்தனர். ஆனாலும் தேவகுமாரி சிலுவையில் அறைய வேண்டும் என்று தொடர்ந்து பிடிவாதம் பிடித்ததால் கணவர்- சகோதரர்கள் ஒன்றாகச் சேர்ந்து தேவகுமாரியை வெள்ளிக்கிழமை அன்று ஏசு கிறிஸ்து போல் சிலுவையில் அறைய திட்டமிட்டனர்.

தேவகுமாரி சிலுவையில் அறையப்படும் சம்பவம் சுற்றுப் பகுதி கிராமங்களுக்கு காட்டுத் தீ போல் பரவியது. ஆயிரக்கணக்கானோர் குஞ்சான பள்ளி கிராமத்தில் திரண்டனர். தேவகுமாரி ஏசு கிறிஸ்து போல் வெள்ளை உடை, சிகப்பு சால்வை சகிதம் வந்தார். சிறிது நேரம் சிலுவை முன்பு நின்று பைபிள் வசனங்களை வாசித்து அங்கு திரண்டிருந்த மக்களிடம் போதனை செய்தார்.

ரத்தம் கொட்டியது

இதனையடுத்து தேவகுமாரியை கணவரும் சகோதரர்கள் சிலுவையின் மீது படுக்க வைத்து இடது கையில் ஆணி அறைந்தனர். அப்போது ரத்தம் மளமளவென கொட்டியது. அப்போதும் அவர் அசரவில்லை. வேதனையால் துடிக்கவில்லை. அமைதியாக இருந்தார். பின்னர் அவரது இரு கைகளையும் கயிற்றால் கட்டி சிலுவையை தூக்கி நிறுத்தினர். ஏசு கிறிஸ்துவுக்கு அணிவிக்கப்பட்டது போல் தேவகுமாரிக்கும் முள் கிரீடம் தலையில் சூட்டப்பட்டது. சிலர் தங்களது செல்போன்களில் இதை ஆர்வமாக படம் பிடித்தனர்.

கணவன், சகோதரர்கள் கைது

தகவல் அறிந்ததும் தாடே பள்ளி சப்- இன்ஸ்பெக்டர் கோடீஸ்வரராவ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் சிலுவையில் ஆணி அடிக்கப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்த தேவகுமாரியை கீழே இறக்கி அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிலுவையில் அறைந்த பிரான்சிஸ், சந்திரசேகர், ரமேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக