சனி, 28 ஜனவரி, 2012

ராவணன் ‘நெசமாலுமே’ கைது!ஜெயாவின் கூட்டுக்கொள்ளையர்கள் குத்து வெட்டு

விறுவிறுப்பு
அப்பாடா! ஒரு வழியாக ஒப்புக்கொண்டு, அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது கோவை போலிஸ் – “ராவணன் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன், அவரது உதவியாளர் மோகனையும் கைது செய்துள்ளோம்”
இன்று காலையில் இருந்து இந்தச் செய்தி ஊர்ஜிதமாகாத தகவலாக அடிபட்டுக் கொண்டிருந்தது. இன்று காலை 10 மணிக்கு கோவை போலீஸ் கமிஷனர் சுந்தரமூர்த்தியை தொடர்பு கொண்டு, “ராவணன் கோவையில் கைது செய்யப்பட்டாரா?” என்று கேட்டபோது, “அப்படியா கேள்விப்பட்டீர்கள்? அப்படியொரு பைல் எனக்கு இன்னமும் வரவில்லை. விசாரித்துவிட்டு சொல்கிறேன்” என்றார்.

ஆனால், எமக்கு கிடைத்த தகவலின்படி அந்த நேரத்தில் ராணவன் போலீஸ் கஸ்டடியில்தான் இருந்தார்.
போலீஸ் அவர் கைது செய்யப்பட்ட விஷயத்தை எதற்காக உடனே அறிவிக்க விரும்பவில்லை என்பதன் பின்னணியில் சில காரணங்கள் இருப்பதாக தெரிகிறது. அந்தக் காரணங்கள் ஊகத்திலான காரணங்கள்தான். உறுதியானதும் எழுதலாம்.
ராவணன் கைது நடவடிக்கையில் உள்ள மற்றொரு உறுத்தலான விஷயம், அவர் கைது செய்யப்பட்டதற்கு காட்டப்பட்டுள்ள காரணம்.
பணத்துக்காக கடத்துதல், சட்டவிரோதமாகத் தடுத்து வைத்தல், பணம் பறித்தல், கிரிமினல் சதித்திட்டம் ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டப் பிரிவுகளில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய கோவை போலீஸ் உபயோகித்துள்ள புகார், கோவை மாவட்டம் சிறுமுகையை அடுத்த கிச்சகத்தியூரைச் சேர்ந்த ரவிகுமார் என்பவரால் கொடுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (வியாழக்கிழமை) தேதியிடப்பட்டு இந்தப் புகார் பெறப்பட்டுள்ளது.
இன்று காலை நாம் வெளியிட்ட நியூஸ் ஸ்டோரியில், ராவணனுக்கு எதிராக போலீஸ் கையில் வைத்திருக்கும் புகார்கள் தொடர்பாக நாம் எழுதியிருந்ததை பாருங்கள்-
ராவணன் தொடர்பாக விசாரிப்பதற்கு பல விவகாரங்கள் போலீஸின் கைகளில் இருந்தாலும், பதிவு செய்யப்பட்ட புகார்கள் என்று பார்த்தால், மொத்தம் 3 புகார்களே அவர்களிடம் உள்ளது. இவற்றில் ஒன்று நில அபகரிப்பு தொடர்பானது. மற்றையது கான்ட்ராக்ட் பெற்றுத் தருவதாக பணம் வாங்கி மோசடி செய்த புகார். மூன்றாவது நபர் கொடுத்த புகார், மிரட்டல் சம்மந்தப்பட்டது. நில அபகரிப்பு புகார், வேறு கட்சியைச் சேர்ந்த ஒருவரால் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. கான்ட்ராக்ட் புகார் கிரானைட் குவாரியுடன் தொடர்புடையது. இரண்டுமே சென்னை புகார்கள் அல்ல, கோவை மற்றும், கோவையைச் சுற்றியுள்ள பகுதிகளின் புகார்கள்.
இதில் நாம் குறிப்பிட்ட 3-வது நபர் கொடுத்த புகாரையே பிரைமரி கம்பிளைன்டாக எடுத்து போலீஸ் வழக்கு பதிவு செய்திருக்கிறது.
“ஃபிரெஷ் கேஸ் போடுவதென்றால், மிரட்டல் புகார் அவ்வளவாக அட்வைசபிள் அல்ல. எனவே, போலீஸ் கையில் இரு புகார்கள் இருப்பதாக வைத்துக் கொள்ளலாம்” என்றும் எழுதியிருந்தோம். ஆனால், கோவை போலீஸ் மிரட்டல் புகாரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறது. என்ன காரணம் என்று சரியாகத் தெரியவில்லை.
இந்த புகார் அவ்வளவு அட்வைசபிள் இல்லை என நாம் எழுதியதன் காரணம், இதில் சுலபமாக ஜாமீன் பெற முடியும் என்பது ஒன்று. இரண்டாவது, இதை நிரூபித்து, தண்டனை பெற்றுக் கொடுப்பது அவ்வளவு சுலபமல்ல. கிட்டத்தட்ட, நடக்காத காரியம் என்றே வைத்துக் கொள்ளுங்களேன்.
ராவணனுக்கு முன் திவாகரன் கைதாவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. எப்படியோ, இந்த விஷயத்தில் ராவணன் முந்திக்கொண்டிருக்கிறார். திவாகரன் இன்னமும் தலைமறைவாக உள்ளார் என்று போலீஸ் சொல்கிறது. அதையும், “அப்படியா?” என்று கேட்டு வைத்துக் கொள்ள வேண்டியதுதான்!
ராவணனை கைது செய்திருப்பதை இப்போதுதான் அறிவித்திருக்கிறார்கள். கேஸை டைட்டின் பண்ணுகிறார்களா, மற்றைய புகார்களையும் இணைத்துக் கொள்ளப் போகிறார்களா என்பதையெல்லாம் அடுத்த சில தினங்களில் பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக