வியாழன், 19 ஜனவரி, 2012

மீண்டும் தடை அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்ற தமிழக அரசுக்கு

சென்னை : அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்ய சென்னை ஐகோர்ட் மீண்டும் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக 4 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் கடந்த திமுக ஆட்சியின்போது அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்கு பிறகு, இந்த நூலகத்தை டிபிஐ வளாகத்துக்கு மாற்றுவதாகவும், நூலகம் இருந்த இடம் அதிநவீன குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அரசின் முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. வழக்கை விசாரித்த ஐகோர்ட், நூலகத்தை இடம் மாற்ற தடை விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பாக அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி, ÔÔசென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் அறிவுசார் பூங்கா அமைக்க அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதுÕÕ என்றார்.மனுதாரர்கள் சார்பாக மூத்த வக்கீல் வில்சன் ஆஜராகி, ‘‘அண்ணா நூலகத்தை இடமாற்றம் செய்ய ஐகோர்ட் தடை விதித்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசு மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது’’ என கூறினார்.

இதைக் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே ஐகோர்ட் தெளிவாக உத்தரவிட்டுள்ளது. மீண்டும் இதை தெளிவுபடுத்துகிறோம். கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. இது தொடர்பாக 4 வாரத்தில் விரிவான பதில் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக