சனி, 14 ஜனவரி, 2012

மனிதனை மனிதன் தூக்குவது பச்சைப் பார்ப்பனக் கொடுமையாகும்!

சிறீரங்கம் அர்ச்சகப் பார்ப்பனர்களை சூத்திரர்கள் தூக்க வேண்டும் என்ற கருத்தினால் சுவரொட்டி ஒட்டுவதா? மாபெரும் கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை!
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
சிறீரங்கம் கோவில் அர்ச்சகர்ப் பார்ப்பனர் களைப் பல்லக்கில் தூக்கிச் செல்ல வேண்டும் என்று கோரியும், சட்டப்படி நடந்து கொண்ட அதிகாரியை அச்சுறுத்தியும் சுவரொட்டி ஒட்டிய பார்ப்பனர்களைக் கண்டித்தும், சட்டப்படி நடந்து கொண்ட அதிகாரிமீது நடவடிக்கை எடுத்தால் மாபெரும் கிளர்ச்சி வெடிக்கும் என்று எச்சரித் தும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சிறீரங்கம் கோவில் திருவிழாவின்போது (கிருத்திகா என்பது அதன் பெயர்) திருக்குறுங்குடி நம் பாடுவான் என்ற கீழ்ஜாதிபக்தன் (பக்தர்களானாலும் ஜாதி முத்திரை மாறுவதில்லை இந்த புண்ணிய பூமியில்) ஆண்டவன் நாராயணன் பற்றிப் பாடுவானாம். துவாதசி 12ஆம் நாள் அன்று பிரம்ம ராட்சசர்கள் (பார்ப்பனர்களாக இருந்து சாபத்திற்கு ஆளானவர்கள் தான் பிரம்ம ராட்சசர்கள் என்று சொல்லப்படுவது கர்ண பரம்பரைக் கதை) இந்த கீழ்ஜாதியானைக் கண்டு பொறாமைப்பட்டு இவனை விழுங்கி விட விரும்பினார்களாம்; அவனோ நான் நாராயணன்மீது பாடி பூஜை முடிக்கும்வரை காத்திருந்து பிறகு என்னை விழுங்குங்கள் என்று வேண்டினானாம்! இந்தப் பக்தியைக் கண்டு அந்த ராட்சசர்களே இரங்கினார்கள் - பிறகு மோட்சத்திற்கு போய் விட்டானாம் அவன்.
மனிதனை மனிதன் தூக்குவது இன்று பொருந்துமா?
இந்த உற்சவத்தின்போது 4 குடும்பங்கள் பொறுப் பேற்று பல்லக்கில் இந்த அர்ச்சகப் பார்ப்பனரைத்  தூக்கி சுமந்துவரும் வழக்கம் இருந்ததாம்; தூக்குகிறவர்களே இது இப்போது பொருந்தாது; மனிதனை மனிதனே தூக்கிச் சுமந்து செல்லும் காட்டுமிராண்டி கால பழைமை நாடகம் இனி நடக்காது என்று எதிர்ப்புத் தெரிவித்து, தூக்க மறுத்த நிலையில், இதைக் கண்காணிக்கும் இந்து அறநிலைய பாதுகாப்புத் துறை  கூட்டு ஆணையர் (இவர் ஒரு சூத்திரத் திராவிடர்) இந்த பிரம்மரதம் என பல்லக்குத் தூக்கிடும் நிலையையும் பவனி வருவதையும் நிறுத்தி ஆணையிட்டார்.
இவர்களுக்குப் பாரம்பரிய உரிமை - இவர்கள் கோருவதுபோல் ஏதும் இல்லை என்று 1824ஆம் ஆண்டு ஆவணத்தின்மூலமே நிரூபித்து சிறீரங்கம் பல்லக்குச் சவாரி பார்ப்பனர்களின் பொய் மூலத்தைத் தவிடு பொடியாக்கி விட்டார்!
எதிர்ப்பு வெடித்தது!
இதுபற்றி சென்ற மாதம் நாம் அறிக்கை கொடுத்தோம் - சிறீரங்கம் பக்தர்களே நியாய உணர்வு, மனித நாகரிகம், மனிதநேயம் அடிப்படையில் அவர் செய்ததுதான் சரி, அதைப் போக்கி மாற்றிட, பழைய கருப்பனாக்கிட சிறீரங்கம் பூணூல்  திருமேனிகளின் நடவடிக்கையை நாங்கள் எதிர்க்கிறோம். நீங்களும் ஆதரவு தாருங்கள் என்று எங்களைக் கேட்டுக் கொண்டனர்.
உடனே அறிக்கை விட்டோம். இறங்கி நடந்தே சென் றனர். இதனால் ரங்கநாதர் ஒன்றும் கோபித்துக்கொண்டு சிறீரங்கத்தை விட்டு ஓடி விடவில்லை! இப்போதும் பள்ளி கொண்டே கிடக்கிறார்!
இதற்கிடையில் இந்த அதிகாரி போட்ட ஆணையை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்திலும் வழக்குப் போட் டதைத் தொடர்ந்து, இந்து அறநிலையத் துறை அதிகாரி யின் 27.9.2010 நாளிட்ட ஆணை (பல்லக்கைத் தூக்கி சுமப்பதை ஒழித்த ஆணை) செல்லும் என்று தீர்ப்பு அளித்துவிட்டனர்!
2010 நவம்பர் 18ஆம் தேதி டிசம்பர் 26, டிசம்பர் 27 (2010) ஆகிய நாட்களில் இந்த கொடிய பழக்கம் நிறுத்தப்பட்டு விட்டது.
நேர்மையான அதிகாரியை எதிர்த்து சுவரொட்டியா?
இப்போது இவருக்கெதிராக  சுவரொட்டி ஒன்றை ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி பார்ப்பனர்கள் திட்டமிட்டே இந்த அதிகாரி - தன் மனிதாபிமானக் கடமையைச் செய்த நல்ல காரியத்துக்காக - சிறீரங்கம் பக்தர்கள் பலரும் வரவேற்கின்ற செயலுக்காக - நடவடிக்கை எடுக்க சுவரொட்டி அடித்து ஒட்டியுள்ளனர். இந்த விஷமப் பிரச்சாரத்திற்கு தமிழக அரசு பலியாகப் போகிறதா? கூடவே கூடாது; அப்படி இந்த பார்ப்பன ரல்லாத செவ்வனே கடமையாற்றும் அதிகாரியை நாத் திகர், கம்யூனிஸ்ட் என்றெல்லாம் முத்திரை குத்தி நட வடிக்கை கோருவது பச்சைப் பார்ப்பனக் கொடுமையாகும்!
மாபெரும் கிளர்ச்சி வெடிக்கும்
அப்படி ஏதும் நடந்தால் சிறீரங்கத்தில் பக்தர்கள் உட்பட பலரையும் திரட்டி மாபெரும் மக்கள் கிளர்ச்சியாக உருவெடுக்கக் கூடும். தமிழக அரசு அதன் கடமையைச் செய்து, பார்ப்பனீயக் கொடுமைக்கு சிறீரங்கத்தில் முற்றுப்புள்ளி வைத்து, நேர்மையான வகையில் செயலாற்றும் அதிகாரிகளுக்குரிய தக்க பாதுகாப்புத் தர வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.
அந்த போஸ்டரில் (Times of  India page 5) சவர்க்கார், திலகர் படத்தை (இந்துத்வாவின் கர்த்தாக்கள்)  மற்றும் சம்பந்தமில்லாதவர்களையும் போட்டுக் காட்டி தங்களை அடையாளம் காட்டிக் கொண்டனர்.
இந்த போஸ்டர் போட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது நீதிமன்ற அவமதிப்புக்குக் கீழும் வரக்கூடிய குற்றமும் ஆகும்.


சென்னை                                                                                                       தலைவர்
14.1.2012                                                                                                   திராவிடர் கழகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக