புதன், 4 ஜனவரி, 2012

சோனாவின் வாழ்க்கை மட்டுமல்ல. ஆயிரக்கணக்கான சினிமா பெண்களின் கதை

பேக்கப்) எழுத்தாக்கம் : தேவிமணி, ப்ரியாதம்பி

காதல், நட்பு என்று வாழ்க்கை முழுவதும் பல ஆண்களிடம் ஏமாந்திருக்கிறேன்.
விவரம் தெரியாத வயதில் என் அப்பாதான் என்னை முதன்முதலாக ஏமாற்றினார். பெண் குழந்தைகள் அப்பாவிடம்தான் இயல்பாகவே ப்ரியமாக இருப்பார்கள். ஆனால் மிகச்சிறு வயதில் இருந்தே எ ன்னை என் அப்பாவுக்குப் பிடிக்காது. பக்கத்தில் போனாலே திட்டுவார். சாயங்காலம் அவர் வரும் நேரத்தில் என் உடலே பதற ஆரம்பிக்கும். ஆனால் என் தங்கையிடம் அவர் இவ்வளவு கண்டிப்பாக நடந்து கொள்வதில்லை. என்னுடைய டீன் ஏஜில் நான் நண்பர்கள் என்று யாரிடமாவது பழகினால்கூட தவறாகப் பேசுவார். என்னுடைய முதல் காதலை அப்பாவிடம் சொல்லி, நான் பட்ட அவமானத்தை ஏற்கெனவே உங்களிடம் சொல்லியிருக்கிறேன். அவரால்தான் தற்கொலை செய்யும் முடிவுக்கே போய், பதினாறு வயதிலேயே பூச்சிக்கொல்லி மருந்தைக் கு டித்தேன். அதன்பிறகு தூக்க மாத்திரை சாப்பிட்டு ஒருமுறை, கண்ணாடியால் குத்திக்கொண்டு ஒருமுறை என தற்கொலை எண்ணம் இன்றுவரை என்னிடம் தொடர்கிறது.



என் அப்பா சரியில்லாமல் போனபிறகு, நான் சந்தித்த ஒவ்வொரு ஆணிடமும் அப்பாவின் சாயலைத் தேடியிருக்கிறேன். சாயல் என்றால் அன்பையும், அரவணைப்பையும்தான் சொல்கிறேன். ஆனால், எத்தனை முறைதான் ஒரே விஷயத்துக்காக ஏமாறுவது? ஒரு கட்டத்தில் என்னை நானே தேற்றிக்கொள்ள ஆரம்பித்து விட்டேன். ‘பிரச்னையா வா, ஒரு கை பார்க்கலாம் என்கிற எண்ணம்’ தான் இப்போது என்னிடம் இருக்கிறது.

பெண் குழந்தை ஒழுக்கமாக வளர வேண்டும் என்று கண்டிப்பு காட்டுகிறார் என்றுதான் அப்பா திட்டும்போதெல்லாம் நினைப்பேன். ஆனால், ஒரு கட்டத்திற்குப் பிறகு அப்பாவைப் பற்றித் தெரிந்த பின்னால் அவரைப் பார்க்கவே பிடிக்கவில்லை. அவருக்குப் பல பெண்களோடு தொடர்பு இருந்தது. அதே தப்பை பெண்கள் செய்தால் அவளுக்கு வேறு பெயர் கொடுப்பார்கள். அப்பா ஆண் என்பதால், எத்தனை பெண்களோடு தொடர்பு என்பதில்தான் அவருக்குப் பெருமையே! தவறெல்லாம் அவர் செய்து விட்டு என்னையும், அம்மாவையும் அவர் படுத்திய பாடு இருக்கிறதே... அப்பப்பா!

இப்போதும் என் அம்மாவோடு அப்பா சேர்ந்து வாழவில்லை. அம்மா என்னோடு இருக்கிறார். தங்கைக்குத் திருமணமாகி விட்டது. அப்பா, அம்மா, தங்கை என எ ல்லோரையும் நான்தான் பார்த்துக் கொள்கிறேன். என் அப்பா மீது எனக்கு கோபமெல்லாம் இல்லை. இன்றைய பெரும்பாலான ஆண்களின் பிரதிநிதி அவர், அவ்வளவு தான். ஆரம்பத்தில் தறுதலை என்று ஒதுக்கப்படும் இளைஞன்தான் பின்னாளில் தன் குடும்பத்தையே காப்பாற்றுவதாக பல சினிமாக்கள் வந்துவிட்டன. என் கதையும் அதுதான்...

சினிமாவுக்கு வந்து பத்து வருடங்களுக்கு மேலாகி விட்டது. சினிமாதான் என்னை நான்கு பேருக்குத் தெரியப்படுத்தியது. நான் இன்றைக்கு ஓரளவுக்கு வசதியாக வாழ்கிறேன் என்றால் அதற்கு சினிமாதான் காரணம். ஆனாலும் சினிமாவை விட்டு ஒதுங்க நினைக்கிறேன். நடிகையாகவோ, தயாரிப்பாளராகவோ சினிமா உலகில் இருந்து எனக்கு கசப்பான அனுபவங்களே எஞ்சியிருக்கின்றன.

சினிமாவை விட்டு விலகும் முடிவை ஓராண்டிற்கு முன்பே எடுத்துவிட்டேன். ஆனாலும் நிரந்தரமாக விலகும் முன்பு, ஒரே ஒரு படம் தயாரிக்க விரும்புகிறேன். நீங்கள் ஒரு அசட்டுச் சிரிப்பிலும், கிண்டல் பேச்சிலும் கடந்து செல்லும் ஒரு நடிகையின் பர்சனல் வாழ்க்கை எவ்வளவு துயரமானது என்பதை அறிய படமாக்க விரும்புகிறேன். அதற்கு என் கதையைவிட, வேறு சிறந்த கதை இருக்க முடியுமா? என் வாழ்க்கையை மட்டும் படமாக்கி விட்டு சினிமாவுக்கு நிரந்தர ‘குட்பை’ சொல்லி விடுவேன்.

படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டன. சின்ன வயது சோனாவாக நடிப்பதற்கு சரண்யா மோகனிடம் பேசலாம் என இருக்கிறேன். நடிகை சோனாவாக நடிப்பதற்கு பெ ண்களை தேடிக் கொண்டிருக்கிறேன். சரியான ஆள் கிடைக்கவில்லை என்றால் நானே நடிப்பதாகவும் இருக்கிறேன். தயாரிப்பாளர் சோனாவோடு, நடிகை சோனாவுக்கும் கடைசியாக ஒரு வாய்ப்புக் கொடுக்கலாமே என்கிற ஆசைதான்.

சினிமா தராத சந்தோஷத்தை நான் செய்யும் வேறு வேலைகள் தருகின்றன. என்னுடைய ‘யுனிக்’ நிறுவனங்கள் இப்போது சென்னை, மும்பை, மலேஷியாவில் செயல்பட் டுக் கொண்டிருக்கின்றன. இதன் கிளைகளை வேறு பல நாடுகளிலும் தொடங்கும் எண்ணம் இருக்கிறது. ‘எனர்ஜி டிரிங்க்’ தயாரித்து விற்பனை செய்யும் வேலைகளையும் கடந்த ஒரு வருடமாகவே செய்து வருகிறேன். அதற்கான மார்க்கெட்டிங் வேலைகளுக்காகத்தான் இப்போது அலைந்து கொண்டிருக்கிறேன். கூடவே ஆடம்பர ஃபர்னிச்சர்கள் தயாரிக்கும் பிஸினஸும் தொடங்கி இருக்கிறேன்.

சினிமாவில் கிடைக்காத சந்தோஷம் இந்தத் தொழில்களில் எனக்குக் கிடைக்கிறது. இங்கே ஆண், பெண் வித்தியாசம் எல்லாம் இல்லை. கடுமையாக உழைத்தால் யார் வேண்டுமானாலும் முன்னுக்கு வந்து விடலாம். ‘உடலைக் காட்டி முன்னுக்கு வந்தாள்’ என்கிற பேச்சை இங்கே பெரும்பாலும் கேட்க வேண்டியதில்லை. நடிகை சோனா என்கிற பெயர் மறந்து போகவே, நான் ஆசைப்படுகிறேன். எல்லோருக்கும் தெரிந்த ஆளாக இருந்து அவஸ்தைப்படுவதை விட, யாருக்கும் தெரியாத ஆளாக நிம்மதியாக இருப்பதுதான் முக்கியம்.

கவர்ச்சி நடிகையை கல்யாணம் பண்ணிக்கிறதெல் லாம் வேஸ்ட். அதுக்கெல்லாம் இங்கே யாரும் ரெடியா இல்லை. ‘வேணும்னா...’ என்று ஆரம்பித்து நக்கலாகச் சிரிக்கும் பேச்சுக்களை நிறைய கேட்டு விட்டேன். அவர்கள் என்னைக் கல்யாணம் செய்வது இருக்கட்டும். அவர்கள் யாரையும் கல்யாணம் செய்து கொள்ளும் எண்ணம் எனக்கி ல்லை. எந்தவொரு ஆணாலும் பெண்ணை சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடியாது என்று நான் உறுதியாகவே நம்புகிறேன். அதை நான் சொன்னால் உங்களுக்கு சிரிப்பாகக் கூடத் தோன்றலாம். இங்கே திருமணமான பெரும்பாலான பெண்களின் நிலை இதுதான். நான் வெளிப்படையாகச் சொல்கிறேன் அவ்வளவுதான்.

இந்தத் தொடரில் என்னை காயப்படுத்தியவர்கள் பெயரை தைரியமாகவே குறிப்பிட்டேன். அவர்களை இதன்மூலம் மிரட்ட வேண்டும் என்கிற எண்ணம் கூட எனக்கு இ ல்லை. ஆந்திர அரசியல்வாதி ஒருவரது பெயரைச் சொன்னதும், எனக்கு மிரட் டல்கள்கூட வந்தன. ஆனால் நான் எதற்கும் பயப் படவில்லை. என்னை காயப்படுத் தியவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாக இருக்க, காயம்பட்ட நான் மட்டும் எதற்கு அவப்பெயரைச் சுமக்க வேண்டும் என்கிற ஆதங்கத்தின் விளைவுதான் இந்தப் பகிர்தல்.

இந்தத் தொடர் தனிப்பட்ட சோனாவின் வாழ்க்கை மட்டுமல்ல. ஆயிரக்கணக்கான சினிமா பெண்களின் கதை. நடிக்கும் ஆசையில் ஊரை விட்டு ஓடிவந்து சினிமா வாய்ப்புக் கிடைக்காமல் சீரழியும் பெண்கள், சினிமா வாய்ப்புத் தருகிறேன் என ஏமாற்றப்படும் பெண்கள், சினிமா ஆண்கள் செய்யும் அத்தனை அயோக்கியத்தனங்க ளயும் பொறுத்துக் கொள்ளும் துணை நடிகைகள், திருமணம் செய்தால் பாதுகாப்பாக வாழலாம் என திருமணம் செய்துகொண்டு அதைவிட மோசமான வாழ்க்கையில் சிக்கிக் கொள்ளும் நடிகைகள், திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேற பயந்து அதிலேயே சாகும் முன்னாள் நடிகைகள், திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டு மீண்டும் சினிமாவுக்கே வந்து அவதிப்படும் பெண்கள்.. என இந்த சினிமாவில் இருக்கும் ஒவ்வொரு பெண் பின்னாலும் ஒவ்வொரு சோகக்கதை இருக்கிறது. நான் பகிர்ந்து கொண்டேன்.. அவர்கள் தாங்கிக் கொண்டு கடந்து கொண்டிருக்கிறார்கள், அவ்வளவு தான்..

திரையில் தோன்றும் நடிகையும் நம் குடும்பப் பெண்களைப் போல் ரத்தமும், சதையும், உணர்வுகளும் உள்ள மனுஷிதான். அவளுக்கும் ஏமாற்றங்களும், சோகங்களும், ஆசைகளும், ஏக்கங்களும் இருக்கும் என்பதைத்தான் இந்தத் தொடர் மூலம் பகிர விரும்பினேன். அதைச் செய்திருப்பேன் என்கிற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்.

இந்தத் தொடரில் என்னோடு பயணித்த அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
thanks kumudam +seyyadu kayal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக