திங்கள், 9 ஜனவரி, 2012

சிலைகள் வைக்க 2500 கோடியைக் கொட்டிய மாயாவதி!

லக்னோ: தனக்கும், தனது கட்சி சின்னமான யானைக்கும், சட்ட மேதை அம்பேத்கருக்கும், பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கான்ஷிராமுக்கும் சிலைகள் வைக்க ரூ. 2500 கோடிக்கும் மக்கள் பணத்தைக் கொட்டி விரயமாக்கியுள்ளார் மாயாவதி. தற்போது இந்த சிலைகளை மூடும் பணிக்கும் மக்கள் பணமே பயன்படுத்துவது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
உ.பி. முதல்வராக மாயாவதி வந்தது முதல் ஏகப்பட்ட பேருக்கு சிலைகள் அமைத்துள்ளார். புத்தமதத்தைச் சேர்ந்த மற்றும் தலித் தலைவர்கள் பலருக்கும் அவர் சிலை வைத்துள்ளார். சிலையை வைத்து அரசியல் செய்த ஒரே தலைவி இவராகத்தான் இருக்க முடியும். அந்த அளவுக்கு ஏகப்பட்ட பேருக்கு சிலைகள் வைத்துள்ளார் மாயாவதி.
புத்தர், ரவிதாஸர், நாராயண குரு, ஜோதிராவ் பூலே, ஷாஹுஜி மகராஜ், தந்தை பெரியார், அம்பேத்கர், கான்ஷி ராம் ஆகியோருக்கு சிலைகள் வைத்த மாயாவதி, தனக்கும் ஏகப்பட்ட சிலைகளை வடித்து அசத்தினார்.
அதுபோதாதென்று தனது கட்சியின் சின்னமான யானைக்கும் ஏகப்பட்ட சிலைகளை நிறுவியுள்ளார். சிலைகளை வைப்பதற்காகவே பல நினைவிடங்களையும் அவர் எழுப்பினார். இந்த நினைவிடங்கள் அமைக்கவும், சிலைகளை வைக்கவும் ரூ. 2500 கோடிக்கும் மேல் அவர் மக்கள் பணத்தை எடுத்துச் செலவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகளும் உள்ளன. உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனங்களுக்கும் உ.பி. அரசு ஆளானது.

இந்த சிலைகள் குறித்து கண்டனங்கள் எழுந்தபோது தலித் விரோத கருத்துக்கள் இவை என்று சிம்பிளாக சொல்லி விட்டார் மாயாவதி. மேலும் அம்பேத்கருக்கும், கான்ஷிராமுக்கும் சிலைகள் வைப்பதை எதிர்ப்பவர்கள் தலித் விரோதிகள் என்றும் அவர் முத்திரை குத்தினார்.

தலைவர்களுக்கு சிலை வைப்பதுதான், யானைகளுக்கும் எதற்கு இத்தனை சிலைகள், மாயாவதிக்கு எதற்கு இத்தனை சிலைகள் என்பதற்கு அவர் சரியான விளக்கம் தரவில்லை.

மொத்தத்தில் உ.பி. மக்களின் வரிப்பணம் வீணாகிப் போனதுதான் மிச்சம்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக