வியாழன், 26 ஜனவரி, 2012

சர்மிளாவை மமதா சந்தித்தார்!11 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து

Mamata and Sharmila
இம்பால்: மணிப்பூரில் முதல் முறையாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு சேகரிக்கும் வகையில், அங்கு சென்றுள்ள மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, கடந்த 11 ஆண்டுகளாக ஆயுதப் படை சட்டத்தை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் இரும்புப் பெண்மணி இரோம் சர்மிளாவை சந்தித்துப் பேசினார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் நாளை மறுநாள் சட்டப்பேரவைத் தேர்தல். 2007-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் குதிக்காத மேற்கு வங்க ஆளும் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் இப்போது போட்டியிடுகிறது.மேற்கு வங்கம் தந்த உற்சாக தேர்தல் முடிவுகளால் கோவா, உத்தர்காண்ட், உத்தரப்பிரதேசம் என பல மாநிலத் தேர்தல்களில் வேட்பாளர்களை களம் இறக்கியிருந்தாலும் மணிப்பூர் முக்கியத்துவம் பெறுகிறது. மணிப்பூர் தேர்தலில் 48 இடங்களில் மம்தா கட்சி போட்டியிடுகிறது.
தேசிய அளவில் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைத்திருக்கும் ஐக்கிய ஜனதா தளத்துடன் மணிப்பூரில் மம்தா கட்சி தேர்தல் உடன்பாடு செய்துள்ளது. மணிப்பூரில் தற்போது காங்கிரஸ்-இந்திய கம்யூனிஸ்ட் கூட்டணி அரசு பதவி வகித்து வருகிறது.

மம்தாவின் சபதம் வெல்லுமா?


மணிப்பூர் தலைநகர் இம்பாலில் புதன்கிழமையன்று பிரச்சாரம் மேற்கொண்ட மம்தா, இந்திய ஆயுதப் படையினருக்கான சிறப்பு சட்டத்தை விலக்கக் கோரி கடந்த 11 ஆண்டுகளாக போராடி வரும் மணிப்பூரின் இரும்புப் பெண்மணியான இரோம் சர்மிளாவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இந்த சிறப்புச் சட்டத்தினால் மணிப்பூர் மக்கள் அனுபவித்து வரும் துயரங்கள் சொல்லி மாளா. பல ஆண்டுகளுக்கு முன்பு மணிப்பூர் பெண்கள் இக்கொடுமைக்கு எதிராக நடத்திய நிர்வாணப் போராட்டம் உலகை உலுக்கிய சம்பவங்களில் ஒன்று.

மம்தாவின் தேர்தல் ஆயுதமாகவும் அதிகார சிறப்புச் சட்டம் உருவெடுத்திருக்கிறது. தமது கட்சி ஆட்சி அமைத்தால் மணிப்பூரில் மக்கள் நீண்டகாலமாக அனுபவித்து வரும் இந்திய ராணுவத்தின் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டப்படும் என்றும் அதிகார சிறப்புச்சட்டம் ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.

மணிப்பூர் மக்களின் நீண்டகால கோரிக்கை இதுவாக இருந்தாலும் தற்போதைய நிலையில் அவ்வப்போது மாதக்கணக்கில் அனுபவிக்கும் பொருளாதாரத் தடையும், மணிப்பூர் மாநிலத்தின் சில பகுதிகளை நாகாலாந்தின் நாகா இனத்தினர் இணைக்கக் கோருவதும் முதன்மை பிரச்சனையாக இருக்கிறது.

மணிப்பூர் மக்கள் மனம் யாரை நாடுமோ? வங்கத்து மம்தாவின் மணிப்பூர் கனவு நனவாகுமா?

மணிப்பூர் நிலைமை

இந்தியாவின் எந்தப் பகுதியிலும் இருந்தும் எளிதில் சென்றடையவே முடியாத மலைப்பிரதேசம் மணிப்பூர். நெடும் மலைகளில் பயணிக்க வேண்டிய தேசிய நெடுஞ்சாலைகள் 39 மற்றும் 53 இவை இரண்டும்தான் மணிப்பூரை சென்றடைய வழி.

இருப்புப்பாதை வசதியோ விமான சேவையோ எட்டிப்பார்க்காத இந்திய பகுதி.

டஜன் கணக்கிலான இனக் குழுக்கள். ஒவ்வொரு இனக்குழுவுமே ஆயுதப்போராட்டத்தை ஏந்தி நிற்பவர்கள். ஒவ்வொரு இனக்குழுவுமே தனி நாடு அல்லது சுயாட்சி கோரி போராடுபவை.

மணிப்பூருக்கும் தமிழ்நாட்டுக்குமான தொடர்பு

மணிப்பூருக்கும் தமிழ்நாட்டுக்கும் நெருங்கிய தொடர்பும் உண்டு.

1960களில் பர்மாவில் இருந்து அகதிகளாக லட்சகணக்கான தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்ட வரலாற்று சோகம் நடந்தேறியது. கப்பல்களில் அகதிகளாக தமிழ்நாடு வந்திறங்கியவர்களுக்கு அந்நாளைய அரசியல் கட்சிகள் எதுவுமே ஆதரவுக் கரம் நீட்டவில்லை. புறநகர்களில் கேட்பாரற்ற காலனிகளில் தங்க வைக்கப்பட்டதோடு சரி.

செல்வச் செழிப்பில் திளைத்து தாய் மண்ணில் பிச்சைக்காரர்களாக நின்ற பராசக்தி படக்கதையின் நிஜ பிம்பங்கள் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டனர்.

மீண்டும் பர்மாவுக்கே செல்வோம் என்ற நம்பிக்கையோடு காடு மலை கடந்து மணிப்பூர்-பர்மா எல்லையான மோரே என்ற சின்னஞ்சிறு கிராமத்தை சென்றடைந்தனர் பல்லாயிரம் தமிழர்கள். நவீன வசதிகள் வந்துவிட்ட இன்றைய நிலையிலேயேகூட மோரேவை சென்றடைவது அசாத்தியமான நிலையில் 1960களிலும் 70களிலும் எப்படியெல்லாம் தமிழர்கள் சிரமப்பட்டு மோரேவை சென்றடைந்தனரோ?

மோரேவில் 1990கள் வரை பல்லாயிரக்கணக்கில் வாழ்ந்த தமிழர்கள் விசுவரூபமெடுத்த இனக்குழுக்களின் ஆயுதப் போராட்டங்களுக்கு இடையே படுகொலையாயும் போயினர். மீண்டும் தமிழ்நாட்டுக்கே அகதியாகவும் வந்தனர். இப்போது சில ஆயிரக்கணக்கில்தான் தமிழர்கள் வாழ்கின்றனர்.

மோரே இப்போது இந்தியா-பர்மா நாடுகளுக்கு இடையேயான சுதந்திர வர்த்தக மையமாகவும் உருமாறிவிட்டது. சிறு வர்த்தக நகரமான மோரேவின் வரலாற்றில் இன்றளவும் தமிழர்கள் பிரிக்க முடியாத ஒரு அங்கம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக