வியாழன், 15 டிசம்பர், 2011

WOW பாரதத்தாய் ஐஸ்வர்யா ராயிக்கு குழந்தை பிறந்திருக்கிறது!!

“ஐஸ்வர்யா ராய் சுக பிரசவத்தில் குழந்தை பெற்றுக் கொண்டதன் மூலம் இந்த நாட்டுக்கே முன்மாதிரியாய் விளங்குகிறார்” என்கிறார் மும்பை லீலாவதி மருத்துவமனையின் பிரசவ பிரிவு தலைமை மருத்துவர் கிரண் கொயல்லோ. மறுநாளே இதை முன்மொழிந்து வழிமொழிந்து இடைமொழிந்து குதூகலித்துள்ளது டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை. நடுத்தர வயதைக் கடந்த பெரும்பாலான பெண்கள் சிசேரியன் செய்து கொள்ளவே விரும்புவதாகவும், இந்நிலையில் சுகப்பிரசவமே வேண்டும் என்கிற ஐஸ்வர்யா ராயின் மன உறுதி நாட்டுமக்களுக்கே வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக நிற்கிறது என்கிறது அந்த செய்திக் கட்டுரை.

சிசேரியன் ஆகி விடக்கூடாது என்கிற ஐஸ்வர்யா ராயின் மன உறுதியைக் காட்டிலும் அவர் மேல் பணம் கட்டியிருக்கும் – மற்றும் கட்டவிருக்கும் – படக் கம்பெனி முதலாளிகளில் இருந்து விளம்பர நிறுவனங்கள் வரை அனைருக்கும் இதயம் தாறுமாறாக எகிறியிருக்கும். லீலாவதி மருத்துவமனை மகப்பேறு வார்டின் முன் கையைப் பிசைந்து கொண்டு குறுக்கும் நெடுக்குமாக உலாத்திக் கொண்டிருந்த அமிதாப் பச்சனின் மனசாட்சிக்குக் கூட அது தெரிந்திருக்கும் – வயிற்றில் ஆப்பரேஷன் கோட்டோடு கவர்ச்சி உடையில் தோன்ற முடியாதல்லவா? அதனால் தான் எந்தவிதமான சந்தேகத்துக்கும் இடமளிக்காத வகையில் அமிதாப் பச்சனே ட்விட்டரில் இது சுகப்பிரசவம் தான் என்று உலகத்துக்கு அறிவித்திருக்கிறார்.
அபிஷேக் பச்சனும் ஐஸ்வர்யாவும் 2007-ல் திருமணம் முடித்ததில் இருந்து அவர் கருவுற்ற தேதி வரை அந்தக் கால மாமியார் போல ‘அடியே இன்னுமா மசக்கை ஆகலை’ என்று முதலாளித்துவ ஊடகங்கள் செய்த விசாரணைகளை வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். கருவுற்ற பின்னும் வயிறு தள்ளியிருக்கிறதா என்பதில் ஆரம்பித்து அதை மறைக்க எந்த வகை உடை அணிகிறார் – எதை அணியலாம் என்பது வரைக்கும் ஆங்கில ஊடகங்கள் தமது ‘பேஜ் 3′ பக்கங்களில் அக்கறையுடன் பல ஆலோசனைகளை வழங்கி அவற்றைத் தமது வாசகர்களுக்கு சுவைபட விவரித்துக் கொண்டிருந்தன.
குழந்தை பிறந்ததும் ஐஸ்வர்யா எப்போது வெளியே தலைகாட்டுவார் குழந்தையின் புகைப்படம் எப்போது வெளிவரும் என்ன பெயர் வைப்பார்கள் என்று துப்பறியும் நாவலைப் போல் விறுவிறுப்பாக எழுதிக் குவித்தனர். இதற்கிடையே பிறக்கப் போவது ஆணா பெண்ணா என்பதை வைத்து வடநாட்டில் புக்கிகள் பந்தையம் கட்டி சூதாடியது நடந்தது. சூதாட்டம் என்று வந்த பின் கிரிக்கெட்டாவது குழந்தையாவது – தின்னும் சோற்றைக் கூட விட்டு வைக்காமல் சூதாடும் நாட்டில் குழந்தையை வைத்து சூதாடுவது ஆச்சர்யத்துக்குரியதல்ல – ஆனால் அதையும் பெருமிதத்துடன் பத்திரிகைகள் எழுதுகின்றன என்பதைக் கொண்டே இவர்களின் தரம் என்னவென்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
இப்போது ஐஸ்வர்யா திரும்பவும் எப்போது திரையில் தோன்றி மகிழ்விப்பார் என்கிற எதிர்பார்ப்பில் மூழ்கிக் கிடக்கும் இரசிகர்களின் எதிர்பார்ப்புகளை ஆற்றுப் படுத்தும் விதமாக அவர் தனது உடலை மெலிய வைக்க மீண்டும் பயிற்சிகளை  ஆரம்பித்துள்ளார் என்கிற உலக முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை பக்கம் பக்கமாக ஓதுகின்றன கார்ப்பரேட் ஊடகங்கள். அதிலும் ஒரு படி மேலே போன இந்துஸ்தான் டைம்ஸ், பிரசவத்துக்குப் பின் செய்தியாளர்கள் முன் தோன்றிய ஐஸ்வர்யா பாரம்பரிய வேலைப்பாட்டுடன் கூடிய ஹவாய் செருப்பை அணிந்து வந்தார் என்றும் இது கால் தசைகள் மற்றும் பின்புறத்தில் சேர்ந்துள்ள கொழுப்பைக் குறைக்க உதவுமென்றும் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறது. மட்டுமல்லாமல், அந்த செருப்பை எங்கே வாங்கலாம் அதன் விலை என்ன அது போன்ற செருப்பை அணிவதன் பிற பலன்கள் என்ன அதைப் பற்றி உடற்கூறியல் வல்லுனர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கர்ம சிரத்தையாக ‘செருப்பு’ ஆய்வுக் கட்டுரையாக அதை வளர்த்துச் செல்கிறது.
ஐஸ்வர்யாவுக்கு நடந்த சுகப்பிரசவத்துக்காக மகிழ்ச்சிக் கடலில் முழ்கியுள்ள பத்திரிகைகள் இதே நேரத்தில் இந்தியாவில் பிறந்த குழந்தைகளின் இறப்பு சதவீதம் 18.65 சதவீதமாக உயர்ந்துள்ளதைப் பற்றி சம்பிரதாயமாகச் சொல்லி விட்டுக் கடந்து செல்கின்றன. அதிலும் நாட்டின் தலைநகரமான தில்லியில் தான் குழந்தை இறப்பு சதவீதம் மிக அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் இறப்பு விகிதம் மிக வேகமாக அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வேகமாக ‘வளர்ந்து’ வரும் தில்லி நகரத்துக்கு மேக்கப் போடுவதற்காக நடந்துவரும் பிரம்மாண்டமான கட்டுமானப் பணிகளுக்காக இடம் பெயர்ந்து வரும் ஏழை எளிய உழைக்கும் மக்களுக்கு போதிய மருத்துவவசதிகள் ஏதும் வழங்கப்படாததே இதற்குப் பிரதானமான காரணம். மேலும் தில்லியில் உள்ள அரசு சுகாதார நிலையங்களில் இருக்கும் பிரசவ வார்டுகளுக்கு போதிய மருத்துவர்களோ செவிலியர்களோ பிற உட்கட்டமைப்பு வசதிகளோ எதுவுமே செய்து கொடுக்கப்படவில்லை.
உலகளவில் குழந்தை இறப்பு விகிதம் குறித்து ஐ.நா வெளியிட்டிருக்கும் பட்டியலில் இந்தியா 152-ம் இடத்தில் இருக்கிறது. இலங்கை, நேபாளம் போன்ற குட்டி நாடுகளும் துனீஷியா, லிபியா, கோஸ்டாரிகா போன்ற ஆப்பிரிக்க நாடுகளும் கூட இந்தியாவை விட மேம்பட்ட நிலையில் இருக்கிறார்கள். கூடிய சீக்கிரத்தில் வல்லரசாப் போகிற நாடு என்று ராக்கெட்டு விட்ட அப்துல் கலாமே சர்டிபிகேட் கொடுத்துள்ள இந்த தேசத்தில், பிறக்கும் குழந்தைகளைக் கூட காப்பாற்ற வக்கற்ற தேசம் என்பது யதார்த்தமாக இருக்கும் போது ஒரு நடிகை பிள்ளை பெற்றுள்ளதைப் பற்றி இவ்வாறு விவரித்து எழுத அசாத்தியமான தடித்தனம் தேவை.
அமிதாப் பச்சன் தனக்குப் பிறந்துள்ள பேரக்குழந்தைக்கு இன்னமும் பெயர் வைக்கவில்லையாம். சரியான பெயர் ஏதும் கிடைக்கவில்லை என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தங்கள் குடும்பமே புதிய வரவான அந்தக் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று தேடி வருவதாகவும் தனது ரசிகர்களும் பொருத்தமான பெயர்களைச் சிபாரிசு செய்யலாம் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். பெயர் ‘அ’ வரிசையில் இருக்க வேண்டும் என்பது நிபந்தனை போல – இந்த செய்தி வெளியான எல்லா ஆங்கில செய்தி ஊடகங்களின் இணையதளங்களிலும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பெயர்களை பரிந்துரைத்து வருகிறார்கள்.
இந்தப் பெயர் வைப்பு வைபவம் என்பது ஐஸ்வர்யாவுக்கு மட்டும் கிடைத்த பேறு அல்ல. கோடிக்கணக்கான ஏழைப் பெண்கள் பெற்றெடுக்கும் பிள்ளைகளுக்கு மன்மோகன் தலைமையிலான காங்கிரசு கூட்டணி அரசு ‘க’ வரிசையில் ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள் – அது – கருமாதி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக