புதன், 21 டிசம்பர், 2011

தமிழகம் பொங்கி எழுந்து விட்டது, இனி யாராலும் கட்டுப்படுத்த முடியாது-வைகோ

Vaiko Arrest
தேனி: கேரள முதல்வருக்கும், கேரள அச்சுதானந்தன் கூட்டத்தினருக்கும் சொல்லுகிறோம். எங்கள் வாழ்வை அழிக்க நினைக்காதீர்கள். தமிழகம் பொங்கி எழுந்துவிட்டது. யாரும் கட்டுப்படுத்த முடியாது. அணையை நீ நெருங்கினால் லட்சக்கணக்கானவர்கள் அணிவகுத்து வருவார்கள். எந்த மிலிட்டரியும் தடுக்க முடியாது என்று ஆவேசமாக கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர்கள்.
தேனி மாவட்டத்தில் இன்று கேரள சாலையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தி கைதானார் வைகோ. போராட்டத்தினபோது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்த போராட்டத்திற்கு விவசாயிகள், வியாபாரிகள் என எல்லா தரப்பு மக்களுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு தமிழகம் நன்றிக் கடன் பட்டிருக்கிறது. எனவே நம் எதிர்காலத்தை காக்கின்ற இந்த கிளர்ச்சி தானாகவே எழுந்துவிட்டது.

தமிழக பத்திரிகைகள், ஊடகங்கள் பொறுப்புணர்ச்சியோடு செயல்படுகின்றன. இவ்வளவுக்கும் காரணம் கேரளாவில் உள்ள பத்திரிக்கைகள், கேரள ஊடகங்கள். அவர்களுக்கு சொல்லுகிறோம். புத்தி வரட்டும் உங்களுக்கு. எங்களை அழிக்க வேண்டும் என்று நினைத்தால் பிறகு நீங்க பட்டிணி கிடைக்க வேண்டியதாகயிருக்கும்
13 சாலைகளிலும் நாங்கள் ஏற்கனவே அறிவித்திருக்கின்ற முற்றுகை போராட்டத்தை நடத்துவதற்காக நாங்கள் கம்பம் குமுளிக்கு செல்லுகின்ற வழியில் காவல்துறையினர் எங்களை உத்தமபாளையம் தாலுகா எல்லையில் 144 தடை உத்தரவு இருப்பதை கூறி எங்களை தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.
இந்த போராட்டம் மக்கள் போராட்டமாக வெடித்து விட்டது. கேரள அரசுக்கு சொல்லுகிறோம். தமிழக ஐயப்ப பக்தர்களையோ, அங்குள்ள எங்கள் மக்களையோ, தொழிலாளர்களையோ தொல்லைப்படுத்தாதீர்கள். இங்கு தமிழகம் பொறுமையை கையாண்டு வருகிறது.
முல்லைப் பெரியாறு அணையை காப்பாற்ற வேண்டும் என்றும், நம் மக்களை காப்பாற்ற வேண்டும் என்றும் ஒரு உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது மதுரை அப்பல்லோ மருத்துவமனையிலே. ஜெயபிரகாஷ் நாராயணன் என்கிற அந்த இளைஞனின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.

மரணத்தின் நெருக்கத்திலே அவன் இருக்கிறான். அவன் பிழைக்க வேண்டும் என்று நாங்கள் பிராத்தனை செய்கிறோம். அந்த இளைஞன் முல்லைப் பெரியாறு அணையை காப்பாற்ற தன்னையே அழிக்க முடிவு செய்து, அவன் ஏன் தீக்குளித்தான் என்பதை மருத்துவமனையில் நான் பார்த்தபோது சொன்னான், மத்திய காங்கிரஸ் அரசின் துரோகத்தையும், கேரள காங்கிரஸ் அரசின் துரோகத்தையும் கண்டித்து நேரு சிலையிலே நான் தீக்குளித்தேன் என்று ஜெயபிரகாஷ் நாராயணன் சொன்னார்.
எனவே இந்த கொந்தளிப்பு, போராட்டம், மக்கள் கிளர்ச்சி பிரளயம்போல் எழுந்துவிட்டது. கேரள அரசும், அரசியல் கட்சிகளும் எங்கள் எதிர்காலத்தை அழிக்க நீங்கள் திட்டமிடுவதால் நாங்கள் இந்த பொருளாதார முற்றுகை போட வேண்டியது தவிர்க்க இயலாதது. இதுதொடர்ந்து நிரந்தர பொருளாதார முற்றுகையாக மாறுவதும் அல்லது நீங்கள் புத்தி வந்து, இந்த தப்பை செய்யமாட்டோம் எனறு பின்வாங்குவதும் உங்கள் கையில் இருக்கிறது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கக் கூடிய மக்களின் உணர்வு, நம்மை பாதுகாத்துக்கொள்ள, நம் எதிர்காலத்தை பாதுகாத்துக்கொள்ள என்ற முறையில் இந்த போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தை நாங்கள் அறவழியில் நடத்துகிறோம் என்றார் வைகோ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக