ஞாயிறு, 4 டிசம்பர், 2011

கனிமொழியைச் சிறை தள்ளவைத்ததே கலைஞரை கட்டிப்போடத்தான்


கடந்த ஆறு மாதங்களாக கலைஞரின் நெஞ்சில் உறுத்திக் கொண்டிருந்த நெருஞ்சி முள் இன்று அகன்றது. அவ்வகையில் திமுக சார்பு சிந்தனைகள் கொண்டவன் என்கிற வகையில் கனிமொழிக்குக் கிடைத்திருக்கும் ஜாமீன் எனக்கு பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
ஜெயலலிதாவின் ஆட்சி, முன்னெப்போதும் இல்லாத வகையில் கொடுங்கோல் ஆட்சியாக தற்போது மலர்ந்திருக்கிறது. ஆனாலும், அதற்கு எதிரான கலைஞரின் குரல் வலுவற்றதாகவே இருந்து வருகிறது. இது கலைஞரின் வழக்கமில்லை. மிக வலுவான எதிரியாக இருந்த எம்.ஜி.ஆருக்கே ‘தண்ணி’ காட்டிக் கொண்டிருந்தவர், இப்போது ஏன் ஆமை வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்?
புதிய தலைமைச் செயலக இடமாற்றம், சமச்சீர்க் கல்வி குழப்பம், காவல்துறையினரின் பரமக்குடி தலித் படுகொலை, நூலக இடமாற்றம், பஸ்-பால்-மின்சார விலையேற்றம் என்று அடுத்தடுத்து அராஜக பிரம்மாஸ்திரங்களை ஜெ. ஏவிக்கொண்டிருக்கிறார். இத்தகைய படுமோசமான சூழலில், அரசியல் சிக்ஸர்கள் அடிக்க வேண்டிய கலைஞரோ, அவரது வழக்கமான சீற்றத்தை காண்பிக்கவில்லை.

அவருக்கு வயதாகிவிட்டது என்று சிலர் கூறுகிறார்கள். வேறு சிலரோ, அதிமுகவுக்கு மாநிலத்திலும் உள்ளாட்சியிலும் கிடைத்த அசுரபலம்தான் கலைஞரின் சாவகாசப் போக்குக்கு காரணம் என்று கருதுகிறார்கள்.
கலைஞரின் வாழ்க்கையை நன்கு அறிந்த யாரும் இத்தகைய காரணங்களை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். 1991ல் திமுக இரண்டே இரண்டு இடங்களில் வென்றபோதுகூட கலைஞர் இத்தகைய அச்சமூட்டும் அமைதியை காண்பித்ததில்லை. மிசா காலத்தில் கழகத்தவர் மொத்தமும் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டபோது, அண்ணாசாலையில் நின்று தனிமனிதராக முரசொலியைத் துண்டு பிரசுரமாக வினியோகித்தவர் அவர். எம்.ஜி.ஆர் காலத்து அரசியல் நெருக்கடிகளை அனாயயசமாகத் துடைத்தெறிந்தவர். இருமுறை கழகம் நேர்பிளவு கண்டபோதும், தன்னுடைய சாதுரியத்தால் கழகத்தைக் காத்தார். ‘உடன்பிறப்பே!’ என்கிற அவரது கரகரப்பான குரல் ஒன்றுக்கே கன்றுக்குட்டியாக கழகத்தவர் ஓடிவருவார்கள். பொதுவாழ்க்கையில் அவர் சம்பாதித்த பெரிய சொத்து இது.
அப்படிப்பட்டவர், தேர்தலுக்குப் பிறகு பதுங்குவது மாதிரியான தோற்றம் ஏன் ஏற்பட்டது?
கனிமொழி.
புத்திரி சோகம்தான் கடந்த ஆறு மாதமாக கலைஞரை செயல்பட விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது. இது யூகமல்ல. உறுதிப்படுத்திக் கொண்ட உண்மை.
முன்பெல்லாம் கழகத் தலைவர்கள் கலைஞரை சந்திக்கும் போதெல்லாம், ‘ஊர்லே கட்சி எப்படிய்யா நடக்குது?’ என்று ஆரம்பித்து, பேச்சைத் தொடங்குவாராம். ‘அமைச்சரே, மாதம் மும்மாரி பொழிகிறதா?’ என்று அரசர் மந்திரியைப் பார்த்து கேட்பது போன்ற தொனி இருக்குமென்று என்னிடம் சொன்னார், கலைஞரோடு பேசிப்பழகும் வாய்ப்புப் பெற்ற கழக முன்னணித் தலைவர் ஒருவர். கட்சிதான் கலைஞருக்கு உயிர். மற்றதெல்லாம் கழகத்துக்குப் பிறகுதான்.
ஆனால், சமீபமாக அவரை யார் சந்திக்கச் சென்றாலும், ‘கனியைப் போய் பார்த்துவிட்டு வந்தாயா?’ என்றுதான் உரையாடலை ஆரம்பிக்கிறார் என்கிறார்கள். உரையாடல் முடியும் வரை கனி, கனி, கனிதான். ‘கனிமொழியைச் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் தள்ளவைத்ததே கலைஞரை கட்டிப்போடத்தான்’ என்று திமுகவினர் கொதிப்பதன் ரகசியமும் இதுதான்.
சொந்த வாழ்க்கை, இலக்கியமென்று தன்னுடைய விருப்பத் தேர்வுகளின் அடிப்படையில் மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருந்த கனிமொழியை, அரசியலுக்குக் கொண்டுவந்து சிறையில் தள்ளிவிட்டோமோ என்னும் குற்றவுணர்ச்சி கலைஞருக்கு இருந்திருக்கலாம். எனவேதான் உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாமல், இந்த வயதான காலத்திலும் இருமுறை டெல்லிக்குச் சென்று, மகளைப் பார்த்துவிட்டு வந்திருக்கிறார். தன்னைச் சந்திக்க வருபவர்களை, ‘திகாருக்குப் போய் கனியைப் பார்த்துட்டு வாய்யா’ என்று பணித்திருக்கிறார்.
திருமணமான சில நாள்களிலேயே மிசாவில் ஸ்டாலின் சிறையில் அடைபட,  உயிர் போகுமளவுக்கு சித்திரவதை செய்யப்பட்டபோதுகூட கலைஞர் இந்தளவுக்கு துன்பப்படவில்லையே? ஏன்?
‘செண்டிமெண்ட்’ காரணம் இருக்கலாம். கனிமொழி பிறந்தபோது கலைஞர், அண்ணா அமைச்சரவையில் அமைச்சர். அவர் பிறந்த ஓராண்டிலேயே முதலமைச்சர். உலகின் எந்தவொரு தந்தைக்குமே அதிர்ஷ்ட மகள் செண்டிமெண்ட் உண்டு. எந்த மகள் பிறந்த பிறகு, வாழ்க்கையில் லட்சியங்களை அடைகிறார்களோ, உயரங்களைத் தொடுகிறார்களோ, அந்த மகள் மீது மற்றக் குழந்தைகளைக் காட்டிலும் அபரிதமான பாசம் வைத்து விடுவார்கள். கனிமொழி மீதும் அத்தகைய கூடுதலான பாசம் கலைஞருக்கு ஏற்பட்டிருக்கலாம்.
அதுவுமின்றி, தன்னுடைய துணைவியார் ராசாத்தி அம்மாளின் ஒரே மகள் கனிமொழி. உடன்பிறந்த சகோதர, சகோதரி இல்லாதவர். கலைஞரின் பிரியத்துக்குரிய எழுத்துத் துறையில், அவரது வாரிசுகளில் கனிமொழி ஒருவர்தான் அபாரமாகப் பளிச்சிட்டார். கலைஞரின் இலக்கியத்துறை வாரிசு எனுமளவுக்கு வளர்ந்தார்.
இதெல்லாம்தான், கனிமொழி சிறையில் இருந்த நாள்களைக் கலைஞருக்கு நரகமாக்கியிருக்க வேண்டும். அவரது வழக்கமான போர்க்குணத்தை மட்டுப்படுத்தியிருக்க வேண்டும். தானே சிறையில் வாடுவதற்கு ஒப்பான உணர்வை அவர் அடைந்திருக்கிறார். கடந்த ஆறு மாதங்களாக உணர்ச்சி அலையில் தாறுமாறாக அவர் அலைக்கழிக்கப்பட்டார். அவரையே சிறைப்படுத்தியிருந்தாலும்கூட இவ்வளவு துன்பப்பட்டிருக்க மாட்டார் என்றுதான் தோன்றுகிறது.
குடும்பத் தலைவர், கட்சித் தலைவர் என்கிற இருபொறுப்புகளையும் கலைஞர் கடந்த நாற்பதாண்டுகளாக ஓய்வின்றி சுமந்தபோதும், இரண்டும் ஒன்றை ஒன்று பாதித்ததில்லை. முதன்முறையாக கனிமொழி விஷயத்தில்தான் கலைஞர் தடுமாறியிருக்கிறார். கலைஞருக்கு ஏற்பட்ட இந்த மனத்தடை, மாபெரும் இயக்கமான திமுகவையே கொஞ்சம் சோர்வடையச் செய்திருக்கிறது.
அவ்வகையில் கனிமொழிக்கு ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஜாமீன் கிடைத்திருப்பது, கலைஞரை முன்பிலும் சுறுசுறுப்பாக்கும். இதுவரை கட்டப்பட்டிருந்த அவரது கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதாக உணர்வார். இனி அரசியலில் அவரது வழக்கமான அதிரடி பாணியில் அடித்து விளையாடத் தடையேதுமில்லை. கனிமொழியின் விடுதலை, கலைஞருக்கே விடுதலை கிடைத்ததற்கு ஒப்பானதாகும். எனவே, கனிமொழி திகாரில் இருந்து வெளியே வருவது எனக்கு முக்கியமானதாகப்படுகிறது. தமிழக அரசியலில் ஆளுங்கட்சியின் அராஜகங்களுக்கு எதிராக இனி நிலவப் போகும் திமுகவின் தீவிர செயல்பாடுகளை, கனிமொழியின் இந்த விடுதலை தீர்மானித்திருக்கிறது என்கிற அடிப்படையில், இது தமிழக மக்களுக்கும் அவசியமானதொரு நிகழ்வாகும்.
0
யுவகிருஷ்ணா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக