ஞாயிறு, 4 டிசம்பர், 2011

கருணாநிதியை அதிர்ச்சியில் உறையவைத்த தேர்தல் முடிவு இது.


சட்டமன்றத்தில் அனல் பறந்துகொண்டிருந்தது. சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்துள்ளது. ஆகவே, சபாநாயகர் அவைக்குத் தலைமை தாங்கக் கூடாது; துணை சபாநாயகரைக் கூப்பிடுங்கள் என்பது ஆளுங்கட்சியின் கோரிக்கை. அதற்கான அவசியமே இல்லை. விவாதத்துக்கு வேறொரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் நானே அவைக்குத் தலைமை தாங்குவேன் என்பது சபாநாயகர் மதியழகனின் வாதம். தமிழக சட்டமன்றம் இதற்குமுன்னால் சந்தித்திராத புதிய சர்ச்சை.
பலத்த சலசலப்புகள் எழுந்த சூழ்நிலையில் சபாநாயகர் நாற்காலிக்குக் கீழே புதிய நாற்காலி ஒன்று போடப்பட்டது. துணை சபாநாயகர் சீனிவாசன் வந்து அந்த நாற்காலியில் வந்து உட்கார்ந்தார். ஆம், சபாநாயகருக்குப் போட்டியாக துணை சபாநாயகரைக் களத்தில் இறங்கியிருந்தார் கருணாநிதி. சபாநாயகரைக் கையில் வைத்துக்கொண்டு தனக்கு எதிராக எம்.ஜி.ஆர் தொடங்கிய யுத்தத்துக்குப் பதிலடி கொடுக்கக் கருணாநிதி தயாராகிவிட்டார் என்பது   தெரிந்தது.

சட்டென்று  எம்.ஜி.ஆர் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அமைச்சரவை மீது நாங்கள் கொடுத்துள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை முதலில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என்று சபாநாயகர் மதியழகனிடம் கோரினர். கோரிக்கை ஏற்கப்பட்டது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பேசுங்கள் என்று எம்.ஜி.ஆரை அழைத்தார். உடனே எம்.ஜி.ஆர் பேசத் தொடங்கினார். ஆனால் அவருடைய பேச்சு எதுவும் வெளியே கேட்கவில்லை.
விஷயம் இதுதான். சபாநாயகர், எம்.ஜி.ஆர் இருவருடைய மைக்குகளுக்கும் இணைப்பு தரப்படவில்லை. துணை சபாநாயகர் மற்றும் ஆளுங்கட்சியினருக்கு மட்டுமே மைக் இணைப்புகள் தரப்பட்டிருந்தன. நுணுக்கமாகச் செயல்பட்டிருந்தனர் ஆளுங்கட்சியினர். இணைப்பு இல்லாததைப் பற்றி எம்.ஜி.ஆர் கவலைப்படவில்லை. தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.
புதிய நாற்காலியில் அமர்ந்த துணை சபாநாயகர் சீனிவாசன் முதலில் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தார். விவாதம் தொடங்கியது. உடனடியாகத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. திமுகவில் இருந்து எம்.ஜி.ஆருடன் சேர்ந்து விலகிய சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை வெகுசொற்பம். மாறாக, திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையோ மிக அதிகம். தீர்மானம் வெகு எளிதாக நிறைவேறியது. சபாநாயகர் பதவியில் இருந்து மதியழகன் நீக்கப்பட்டதாக அறிவித்தார் துணை சபாநாயகர் சீனிவாசன்.
அந்த அறிவிப்பு வெளியானபோதும் சபாநாயகர் இருக்கையில் மதியழகனே இருந்தார். இன்னொரு பக்கம் இணைப்பு இல்லாத மைக்கில் பேசிக்கொண்டே இருந்தார் எம்.ஜி.ஆர். சட்டென்று சபை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துவிட்டு வெளியேறினார் சபாநாயகர். ஆனாலும் சபை தொடர்ந்து நடந்தது. உடனடியாக எம்.ஜி.ஆரும் அவருடைய ஆதரவு எம்.எல்.ஏக்களும் சபையைவிட்டு வெளியேறினர். அதன்பிறகு ஒரு மணி நேரத்துக்கு சபையை நடத்திவிட்டு சபையை ஒத்திவைத்தார் துணை சபாநாயகர் சீனிவாசன்.
ஒருவழியாக பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது என்றுதான் நினைத்தனர். ஆனால் கருணாநிதி அத்துடன் நிறுத்தவில்லை. அமைச்சரவை மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவரத் தயாரானார். எம்.ஜி.ஆர் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்குப் பதில் கொடுக்கவேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கம். நம்பிக்கைத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது அமைச்சரவைக்கு ஆதரவாக 172 வாக்குகள் விழுந்தன. எதிர்த்து விழுந்த வாக்குகள் பூஜ்ஜியம். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்று தன்னுடைய பலத்தை உணர்த்தியிருந்தார் கருணாநிதி.
லஞ்சம் , ஊழல் என்று எம்.ஜி.ஆர் உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் அதே ரீதியிலான நடவடிக்கை ஒன்றை எடுத்தார் முதலமைச்சர் கருணாநிதி. தமிழக சட்டமன்றத்தில் புதிய மசோதா ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது. பொதுவாழ்வில் ஈடுபட்டோர் லஞ்ச ஊழல் குற்றத்தடுப்பு மசோதா என்பது அதன்பெயர். பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்போர் மீது சாட்டப்படும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி அந்தஸ்தில் உள்ள ஒரு நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும்;  தேவைப்பட்டால், மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ளவர்கள் கூடுதல் ஆணையர்கள் நியமிக்கப்படுவார்கள்.
புதிய மசோதாவின்படி பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்போர் பட்டியலில் முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சர், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர், சட்டப்பேரவை மற்றும் மேலவையின் முன்னாள் – இந்நாள் உறுப்பினர்கள், மேயர், துணை மேயர், முன்னாள் மேயர், நகராட்சி, மாநகராட்சி, பஞ்சாயத்து யூனியனின் முன்னாள் – இந்நாள் தலைவர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அடங்குவர். லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும். குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பது நிரூபிக்கப்பட்டால் குற்றம் சாட்டியவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும்.
மத்திய அரசின் லோக்பால், லோக் அயுக்த் மசோதாக்களில்கூட பிரதமர் போன்றவர்கள் வராத சமயத்தில் மாநில அரசு கொண்டுவந்திருக்கும் மசோதாவில் முதலமைச்சரும் கொண்டுவந்தது நேர்மையான விஷயம் என்று பாராட்டப்பட்டது இந்த மசோதா. பொதுவாழ்வில் ஈடுபடுவோர் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க நீதிபதி வெங்கடாத்ரி நியமிக்கப்பட்டார். 5 ஏப்ரல் 1973 அன்று இந்த மசோதா சட்டமன்றம் மற்றும் சட்டமேலவையில் நிறைவேறியது.
புதிய மசோதவை நிறைவேற்றிவிட்ட மகிழ்ச்சியில் இருந்தபோது கருணாநிதிக்கு ஒரு சவால் காத்திருந்தது. இடைத்தேர்தல். திண்டுக்கல் மக்களவை திமுக உறுப்பினர் ராஜாங்கம் மரணம் அடைந்திருந்தார். ஆகவே, அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சியின் வலிமையை எடை போட்டுப் பார்க்கும் தேர்தல் என்பது பொதுவான கருத்து. அதிலும், கட்சி பிளவுபட்டிருந்த சூழலில் அந்த இடைத் தேர்தல் முடிவைத் தனக்கான கௌரவ விஷயமாகப் பார்த்தார் கருணாநிதி. செல்வாக்கு மிக்க வேட்பாளரைக் களமிறக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதற்காக அவர் களமிறக்கிய வேட்பாளர் பொன். முத்துராமலிங்கம். சுறுசுறுப்புக்குப் பஞ்சமில்லை. செல்வாக்குக்கும் குறைவில்லை. உற்சாகமாகக் களமிறங்கினர் திமுக தொண்டர்கள்.
புதிய கட்சியைத் தொடங்கிய சமயம் என்பதால் இடைத்தேர்தல் சரியான வெள்ளோட்டமாக இருக்கும் என்பது எம்.ஜி.ஆரின் கணிப்பு. மாயத்தேவர் என்ற வழக்கறிஞரை வேட்பாளராக்கினார். திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சிக்கும் நல்ல செல்வாக்கு இருந்தது. குறிப்பாக, காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரசுக்கு. அந்தக் கட்சியின் சார்பில் என்.எஸ்.வி. சித்தன் நிறுத்தப்பட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சங்கரய்யாவை வேட்பாளராக்கியது. இந்திரா காங்கிரஸும் நின்றது. ஆனால் எம்.ஜி.ஆருக்கு ஆதரவு கொடுத்துவிட்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.ஜி.ஆருக்கு ஆதரவாகத் தனது வேட்பாளரை வாபஸ் பெற்றுக் கொண்டது.
கௌரவத்தைத் தக்கவைக்கும் முயற்சியில் கருணாநிதி இறங்கினார். புதிய கௌரவத்தை அடையும் நோக்கத்தில் எம்.ஜி.ஆர் களத்தில் இறங்கினார். அப்போது தேர்தலுக்குத் தொடர்பில்லாத புதிய பிரச்னை ஒன்று வந்தது. அது, எம்.ஜி.ஆரின் தயாரிப்பின் உருவாகியிருந்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம். திமுகவில் இருந்தபோது தொடங்கப்பட்ட படம். வெளியிடும் தருணத்தில் புதிய கட்சியைத் தொடங்கியிருந்தார் எம்.ஜி.ஆர்.
படத்துக்கான சுவரொட்டியைக்கூட ஒட்டமுடியாத சூழல். ஒட்டிய சுவரொட்டிகளை எல்லாம் திமுகவினர் கிழித்தெறிந்ததாகச் செய்திகள் பரவிக்கொண்டிருந்தன. இதன் பின்னணியில் இருப்பவர் திமுகவின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான மதுரை எஸ். முத்து என்றனர் எம்.ஜி.ஆர் ரசிகர்கள். படம் திரையில் ஓடாது; ஓடினால் சேலை கட்டிக்கொள்கிறேன் என்று முத்து சவால் விட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின.
பலத்த நெருக்கடிகளுக்கு மத்தியில் உலகம் சுற்றும் வாலிபன் வெளியானது. அரசியல் வாடையே வீசாத வகையில் எடுக்கப்பட்ட படம் அது. திடீரென உருவான அரசியல் பிரச்னைகளுக்கு ஆளாகியிருந்தது. எனினும், படம் பிரம்மாண்டமான வெற்றி. உண்மையில் அந்த வெற்றி திமுகவினரை அதிர்ச்சியடையச் செய்தது. அதற்குக் காரணம் இருந்தது. 1964ல் திடீரென மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தபோது திமுகவினர் பலத்த அதிருப்தி அடைந்தனர். அதன் தொடர்ச்சியாக வெளியான என் கடமை படம் தோல்வியைச் சந்தித்தது. ஆகவே, உலகம் சுற்றும் வாலிபன் படமும் தோல்வியடையும் என்று நினைத்தனர். முடிவு நேர்மாறாக அமைந்திருந்தது.
இடைத்தேர்தலில் சுமார் ஐந்து லட்சம் வாக்குகள் பதிவாகின. அதிமுகவின் மாயத்தேவர் 2,60,930 வாக்குகளைப் பெற்று அபாரவெற்றியைப் பெற்றிருந்தார். ஸ்தாபன காங்கிரஸின் என்.எஸ்.வி. சித்தன் 1,19,032 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மாறாக, திமுக வேட்பாளர் பொன். முத்துராமலிங்கம் 93,496 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருந்தார். கருணாநிதியை அதிர்ச்சியில் உறையவைத்த தேர்தல் முடிவு இது. திண்டுக்கல் தோல்வி குறித்து பின்னாளில் கருணாநிதி இப்படித்தான் எழுதினார்.
‘திமுகழகத்தின் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த இடம் திண்டுக்கல். இந்தத் திண்டுக்கல்தான் கழகத்தின் பல்வேறு வெற்றிகளுக்கெல்லாம் தடைக்கல்லாகவும் இருந்தது.’
(தொடரும்)
0
ஆர். முத்துக்குமார் www.tamilpaper.net

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக