புதன், 7 டிசம்பர், 2011

தமிழக-கேரள யுத்தமா?புகையவில்லை, எரியவே தொடங்கிவிட்டது

Viruvirupu,Cumbum, India: Kerala Police issued orders banning any gathering of more than five people for three days in and around the border checkpostas protestors from Tamil Nadu and Kerala clashed over the Mullaperiyar Dam – a contentious issue between the two neighbouring states. In various parts of Tamil Nadu, Kerala business buildings and various shops of Keralites were attacked.
கேரளா போலீஸ், தமிழக எல்லையருகே 5 பேருக்கு மேற்பட்டவர்கள் ஒன்றாகக் கூடி நிற்க தடை விதித்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் கேரள மாநில பதிவுடன் வரும் வாகனங்கள்மீது தாக்குதல் நடாத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக-கேரள எல்லைப் பகுதியில் இரு பக்கத்திலும் தாக்குதல்கள் தொடருவதாக செய்திகள் வருகின்றன. இரு மாநில அரசுகளும் மத்திய அரசிடம் பஞ்சாயத்துக்காக சென்றுள்ளன.
தமிழக-கேரள மாநிலங்களுக்கிடையே தொடங்கியிருப்பது யுத்தமா?
இரு தரப்பிலும் வன்முறைச் சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. கேரளாவி்ன் குமுளி
எல்லையோரமாக தடுத்து நிறுத்தப்பட்ட வாகனங்கள்..
பகுதியில் தமிழர்கள் மீது தாக்குதல் நடந்ததை அடுத்து, கம்பம் பகுதியில் உள்ள கேரள நிறுவனங்கள், நிதி நிறுவனங்களை தமிழக மக்கள் தாக்கினர். கேரளா செல்லும் தமிழக வாகனங்கள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன.

எல்லையோர தமிழ் கிராமங்களில் உள்ளவர்களே, தமிழக பதிவுள்ள வாகனங்களை தடுத்து நிறுத்துகின்றனர்.
கேரளாவுக்கு தேவையான பால், காய்கறி மற்றும் மளிகை பொருட்களில் கணிசமான அளவு தமிழகத்தில் இருந்துதான் செல்வது வழக்கம். இப்போது இவற்றை ஏற்றிச் செல்லும் தமிழக லாரிகள் எல்லைக்கு இந்தப் பக்கம் தமிழகத்திலேயே நிறுத்தப்படுகின்றன. இதனால் கூடலூர், கம்பம் ஆகிய பகுதிகளில் சாலைகளின் இருபக்கங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன.
இந்த எல்லையைக் கடந்து சபரிமலைக்குச் செல்லும் தமிழக பக்தர்கள் எல்லையைக் கடக்க அனுமதிக்கப்படவில்லை எந்த மாநில அரசோ, அதிகாரிகளோ, போலீஸோ அவர்களைத் தடுத்து நிறுத்தவில்லை. பொதுமக்களே பொதுமக்களைத் தடுத்து நிறுத்துகின்றனர். போலீஸால் எதுவும் செய்ய முடியவில்லை.
கேரளா செல்லும் பக்தர்கள் கூடலூர், கம்பம் வழியாக செல்லாமல் பழனி, பாலக்காடு வழியாக செல்லும்படி கேட்டுக்கொள்வதுடன் ஒதுங்கிக் கொள்கின்றனர் போலீஸார்.
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு சென்ற காய்கறி லாரிகளை கம்பம், குமுளி பகுதி தமிழக மக்கள் வழிமறித்து நிறுத்தியதுடன் முடிந்து விடவில்லை கதை. “நம்மவர்களை தாக்கும் கேரளத்தவருக்கு காய்கறி கொண்டு போகிறீர்களா? எதற்கு? அவர்கள் சாப்பிட்டு, தெம்பாக தமிழர்களுக்கு அடிப்பதற்கா?” என்று கொதிக்கின்றனர் கம்பம், குமுளி பகுதி மக்களில் சிலர்.
முடிவு? கேரளத்தவருக்கு காய்கறி எடுத்துச் சென்ற ‘குற்றத்துக்காக’ ஆன்-தி-ஸ்பாட் அபராதம்!
அபராதம் பணமல்ல. கேரளாவுக்கு கொண்டு செல்வதற்காக லாரிகளில் வந்த காய்கறி மூடைகளை மக்களே லாரிகளில் இருந்து பலவந்தமாக இறக்கி ‘பறிமுதல்’ செய்கின்றனர். பறிக்கப்பட்ட காய்கறி மூடைகளை அருகில் உள்ள கோயில்களுக்கு கொண்டு சென்று, அங்கே தடுத்து நிறுத்தப்பட்டுள்ள ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் செய்கின்றனர்.
கேரளா செல்ல அனுமதிக்கப்படாத பக்தர்களில் பலர், தமிழகத்துக்குள் உள்ள சுருளி அருவியில் குளித்து விட்டு, அங்கேயே ஐயப்பன் போட்டோவை வைத்து மாலையை கழற்றி விரதத்தை முடித்துவிட்டு ஊர் திரும்புகின்றனர்.
குமுளியில் தமிழர்களின் கடைகளை கேரளத்தினர் அடித்து நொறுக்கிய செய்திகள் தமிழகத்தில் பரவியதில், கம்பத்தில் கேரளத்தினரின் கடைகள், நிறுவனங்களை தமிழர்கள் சிலர் சூறையாடினர். லாரி, வேன் ஆகியவை தீவைத்து எரிக்கப்பட்டன. எல்லைப் பகுதியில்தான் பதட்டம் என்றில்லை. சென்னை, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய நகரங்களில் இன்று கேரள மாநிலத்தவரின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.
சென்னை, கோவையில் உள்ள ஜோய்ஆலுக்காஸ் நகைக் கடைகள் முற்றுகைக்கு உள்ளாகின. சென்னை தி.நகரில் உள்ள ஜோய்ஆலுக்காஸ் நகைக் கடையை தமிழ்த் தேச பொதுவுடமைக் கட்சியினர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். தஞ்சையில் உள்ள ஜோய்ஆலுக்காஸ் நகைக் கடை முன்பு போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் உள்ள கேரள மாநிலத்தவரின் நகைக்களை தமிழ்த் தேச பொதுவுடைமை கட்சியினர் அடித்து உடைத்தனர். அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். மொத்தம் 4 கேரளத்தவரின் நகைக்கடைகள் தாக்குதலுக்கு உள்ளாகின.
தஞ்சாவூரில் இன்று கேரள வியாபாரிகளின் கடைகளை தமிழ்த் தேச பொதுவுடமைக் கட்சியினர் தாக்கினர். ராயல் காபி பார் மற்றும் ஒரு குளிர்பானக் கடை ஆகியவை தாக்கப்பட்டன. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தஞ்சை முழுவதும் உள்ள கேரள வியாபாரிகள் தங்களது கடைகளை இன்று மூடியுள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரச்சினை இப்போது புகையவில்லை, எரியவே தொடங்கிவிட்டது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக