செவ்வாய், 13 டிசம்பர், 2011

குமுளியில் லட்சம் தமிழக மக்கள் போர்க்கோலம் – நேரடி ரிப்போர்ட்!

முல்லைப் பெரியாறு: குமுளியில் 1 இலட்சம் தமிழக மக்கள் போர்க்கோலம் – நேரடி ரிப்போர்ட்!கடந்த 11-ம் தேதி முன்மாலை நேரத்தில் கே டி.வியில் பதிவு செய்யப்பட்ட பிலிம்பேர் விருது வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது. மேடையின் முன்னே தெலுங்கு, கன்னட திரையுலகத்தினரோடு தமிழ் மற்றும் மலையாள திரையுலகினரும் முகத்தில் ஒட்டவைத்த ஒரு உறைந்து போன போலிச் சிரிப்போடு அமர்ந்திருந்தனர். மேடையில் கவுதம் வாசுதேவ மேனன் இயக்கிய விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்திற்காக எழுதப்பட்ட பாடல் ஒன்றுக்காக கவிஞர் தாமரைக்கு விருது வழங்கிக் கொண்டிருந்தனர். தமிழ் ஆர்வலரான கவிஞர் தாமரை படத்தின் இயக்குனர் பற்றி ஏதோ போற்றிப் புகழ்ந்து கொண்டிருந்தார்.
சரியாக அதே நேரத்தில் தமிழக கேரள எல்லையான தேனி -கம்பம் -கூடலூர்-  குமுளி பகுதியில் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த தமிழக மக்களோ தங்களது உரிமைக்காக அணையை நோக்கி போர்க் கோலத்துடன் முன்னேறிக் கொண்டிருந்தனர். முல்லைப் பெரியாறு பிரச்சினையில் சி.பி.எம் இறுதியாக ஒளிந்து கொள்ள எத்தனிக்கும் முழக்கம் தான் “கேரளாவுக்கு பாதுகாப்பு – தமிழகத்துக்குத் தண்ணீர்”. தற்போதைய நிலையில் கேரள மக்களின் பாதுகாப்பிற்கு முல்லைப் பெரியாறு அணையால் எந்தவிதமான பங்கமும் இல்லையென்பது பல்வேறு வல்லுனர்களின் ஆய்வுகளில் தெரியவந்துள்ள நிலையில் இந்த முழக்கத்தின் உண்மையான நோக்கம் புதிய அணை கட்டுவதை தமிழக மக்கள் ஏற்கச் செய்ய உளவியல் ரீதியில் தயாரிக்கும் நரித்தனமான நோக்கம் தான்.

புதிய அணை கட்டினாலும், தமிழகத்திதற்கு நீர் வராது. மேலும் பிரவம் இடைத்தேர்தலில் வெற்றிபெறுவது காங்கிரசு, சி.பி.எம் கட்சிகளுக்கு வாழ்வா சாவா எனுமளவுக்கு ஒட்டுப்பொறுக்கும் சண்டையாக நடைபெறுகிறது. ஏற்கனவே நூலிழையில் ஆளும் காங்கிரசு கும்பல் இதில் தோற்றால் ஓரிரு எம்.எல்.ஏக்களை வளைத்து சி.பி.எம் ஆட்சியைப் பிடிக்கும் என்பதால் இரு கட்சிகளும் வெறி கொண்ட முறையில் மலையாயள இனவெறியை கட்டவிழ்த்து வருகின்றன. முல்லைப் பெரியாறு எனும் அணை தமிழகத்தின் நீராதாரம் என்பதும் கூட இவர்களைப் பொறுத்தவரை ஓட்டுப் பொறுக்கும் சாக்கடை சண்டைக்கு பயன்படும் பொருள்தான்.
கேரளத்தில் முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று போராடிக் கொண்டே தமிழகத்தில் முரண்பாடு வேண்டாம், சுமூகமாக பேசித் தீர்த்துக் கொள்வோம் என்று சிபிஎம் நடத்திக் கொண்டிருக்கும் பித்தலாட்ட நாடகத்திற்கும் பிற தேசியக் கட்சிகளான காங்கிரசு மற்றும் பாரதிய ஜனதா நடத்திக் கொண்டிருக்கும் நாடகங்களுக்கும் பெரியளவில் வேறுபாடு ஏதுமில்லை. அது காவி, கதர் போட்ட தேசியமென்றால் இது சிவப்பு கட்டிய தேசியம் – வண்ணங்கள்  வெவ்வேறாக இருந்தாலும் எண்ணங்கள் ஒன்று தான். அது தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்க வேண்டுமென்பது தான்.
தமிழனவாத அமைப்புகளோ முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தாம் நடத்திக் கொண்டிருக்கும் போராட்ட மேடைகளை சி.பி.எம், சி.பி.ஐ கொலு பொம்மைகளால் அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கொன்றும் அங்கொன்றுமாய் பேசி பேச்சுமாத்து செய்யும் போலிக் கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட தேசியக் கட்சி சந்தர்ப்பவாதிகளை தமிழகத்தில் யாரும் கண்டிக்க முடியாத நிலையில் சாமானிய மக்கள் தன்னெழுச்சியாக அணி திரண்டு அணையை கைப்பற்ற போர் முரசு கொட்டியிருக்கிறார்கள்.

கடந்த ஓரிரு மாதங்களாகவே கம்பம், தேனி, கூடலூர், குமுளி, ஆகிய தமிழகப் பகுதிகளை ஒட்டிய கேரளப் பகுதிகளிலும், கேரளத்தின் பிற பகுதிகளிலும், குறிப்பாக முல்லைப் பெரியாறு அணையை ஒட்டிய பகுதிகளிலும் சி.பி.எம், காங்கிரசு பாரதியஜனதா போன்ற ‘தேசிய’ கட்சிகள் முல்லைப் பெரியாறு அணை உடையப் போகிறது என்கிற பயபீதியூட்டும் பிரச்சாரங்களையும் தமிழர்களுக்கு எதிரான மலையாள இனவெறிப் பிரச்சாரங்களையும் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள்.
அணை போனால் வாழ்க்கையும் போகும் என்பதை உணர்ந்திருந்த தமிழகப் பகுதியைச் சேர்ந்த மக்கள் கடந்த ஏழெட்டு நாட்களாகவே கம்பம் – குமுளி பகுதியில் கேரளா செல்லும் சரக்கு லாரிகள் அனைத்தையும் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதற்கிடையே இதில் தலையிடும் தமிழக உள்ளூர் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளின்  தலைவர்கள், எல்லைக்கு அந்தப்புறம் இருக்கும் தங்களுக்குத் தெரிந்த கேரள வியாபாரிகளுக்காகப் பரிந்து பேசி, அவர்களுக்கான வாகனங்களை மட்டுமாவது  விடுவிக்க வேண்டுமென்று போராடும் மக்களை அணுகியிருக்கிறார்கள். மக்களோ இந்த நரித்தனத்துக்கு பலியாகாமல் அவர்களை விரட்டியடித்துள்ளனர்.
செவி வழிச் செய்திகளை வைத்து பார்க்கும்போது தமிழகத்தில் இருந்து காய்கறிகள் செல்லாததால் குமுளி மற்றும் இடுக்கி மாவட்டத்தில் அத்தியாவசிய பண்டங்களின் விலைகள் உயர்ந்துள்ளன. தக்காளி கிலோ ரூ. 150, வெங்காயம் ரூ. 50, பச்சை மிளகாய் ரூ. 65, மாட்டுக்கறி கிலோ ரூ. 400 முதல் 500 வரை விற்பதாக தெரிகின்றது. இடையில் செங்கோட்டை வழியாக காய்கறிகளை கொண்டு வரும் முயற்சியும் நடைபெற்றது. எனினும் அங்கும் தடை விதிக்கும் பட்சத்தில் கேரளாவில் உள்ள பல மாவட்டங்களில் விலைவாசி விண்ணை முட்டுவது உறுதி. முல்லைப் பெரியாறு பிரச்சினையை ஊதிப்பெருக்கி குளிர்காய நினைக்கும் கேரள ஓட்டுப்பொறுக்கிகளால் கேரள மக்கள்தான் துன்பங்களை அடையப் போகிறார்கள். அச்சுதானந்தனுக்கோ, உம்மன் சாண்டிக்கோ ஒரு பாதிப்புமில்லை.
இந்நிலையில் சிலநாட்களுக்கு முன் தமிழகப் பகுதியிலிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட ஜீப்புகளில் கேரளப் பகுதிக்குள் கூலி வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் 3000 பேர் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். ஜீப்புகள் சிறைபிடிக்கப்படுகின்றது. வேறு வழியின்றி பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட எல்லா கூலித் தொழிலாளர்களும் கேரள பகுதியிலிருந்து கால் நடையாகவே தமிழகப் பகுதியை நோக்கி பயணமாகிறார்கள்.
இடையே குறுக்கிடும் மலையாளி இனவெறி மற்றும் பொறுக்கி கும்பல் ஒன்று நடந்து வந்து கொண்டிருந்த அப்பாவிப் பெண் தொழிலாளர்களிடம் பாலியல் ரீதியில் அத்துமீறி நடந்து கொண்டது. தமிழர்களை இழிவு படுத்தி கேலி பேசிய அவர்கள் குறிப்பாக பெண் தொழிலாளர்களை பாலியல் ரீதியாகக் குறிவைத்திருக்கிறார்கள். அத்தனை அவமானங்களையும் பொறுமையாக சகித்துக்  கொண்டு தமிழகப் பகுதிக்கு வந்து சேர்ந்த தொழிலாளர்கள் தமக்கு நேர்ந்த அவமானங்களை தமிழகத்தில் உள்ள மக்களிடம் சொல்லிக் குமைந்திருக்கிறார்கள்.
அதுவரை கேரள இனவெறியர்களின் இடைவிடாத பிரச்சாரத்தால் தமிழகப் பகுதியிலிருந்த மக்களில் ஒரு சிலர் “அணை தானே கட்டப் போகிறான். கட்டி விட்டுப் போகட்டுமே” என்றே இருந்திருக்கிறார்கள். ஆனால், தங்கள் பெண்களுக்கு நேர்ந்த இந்த அநீதிகளைக் கேட்டதும்  ஒட்டுமொத்தமாக எல்லா மக்களின் பொறுமையும் உடைந்து போய் விட்டது. அதே நேரத்தில் கேரள சட்டசபையில் பெரியாறு அணையை உடைப்பதும், புதிய அணை கட்டுவதும் தான் ஒரே தீர்வு என்றும் அதுவரை நீர்மட்டத்தை 120 அடிகளாக குறைத்து விடுவது என்றும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படுகிறது.
இந்த விஷயங்களைக் கேள்விப்படும் மக்கள் ஆத்திரம் அடைகிறார்கள். இது அவர்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினை. வலுவாக இருக்கும் ஒரு அணையை உடைத்து இங்கேயிருக்கும் லட்சக்கணக்கான மக்களின் வயிற்றிலடித்து விட்டு கேரளாவில் மின்சார உற்பத்திக்கு அந்தத் தண்ணீரைப் பயன்படுத்திக் கொண்டு வீணாக கடலில் கலக்க விடப்போகிறார்கள் என்பதும், இதற்காக வேலைக்குச் செல்லும் அப்பாவிக் பெண்களைக் கூட விட்டு வைக்காத அளவுக்கு எல்லைக்கு அந்தப்புறம் மலையாள இனவெறி தலைவெறித்து ஆடுவதும் தமிழகப் பகுதிகளைச் சேர்ந்த மக்களை ஆவேசத்தின் உச்சிக்கே தள்ளுகிறது.
இப்பிரச்சினைக்கு ஒரே தீர்வு அணையைக் கைப்பற்றுவது தான் என்கிற முடிவுக்கு மக்கள் வருகிறார்கள். இப்பகுதியில் செயல்பட்டு வரும் விவசாயிகள் விடுதலை முன்னணியினர் (ம.க.இ.கவின் தோழமை அமைப்பு) ஏற்கனவே ஒவ்வொரு கிராமத்திலும் மக்களைக் கொண்டே “முல்லைப் பெரியாறு அணை மீட்புக் குழு” அமைக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டு வந்துள்ளனர்.
தற்போது பிழைப்புவாதத்திலும் சந்தர்பவாதத்திலும் ஊறித் திளைக்கும் உள்ளூர் அளவிலான ஓட்டுக் பொறுக்கிக் கட்சிகளைச் சேர்ந்த அரசியல் ரவுடிகளை ஒதுக்கித் தள்ளி விட்டு மக்களாகவே அணை மீட்புக் குழுக்களை அமைத்து வருகிறார்கள்.  இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (10.12.2011) ” முல்லைப் பெரியாறு அணையை மீட்போம்” என்கிற முழக்கத்தை முன்வைத்து பெரியாறு அணையிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சுருளிப்பட்டி கிராமத்திலிருந்து  முதலில் சுமார் 5000 விவசாயிகள் அணிதிரண்டு முல்லைப் பெரியாறு அணையை நோக்கி நடை பயணம் ஒன்றைத் துவக்கினர். செல்லும் வழியெங்கும் இருந்த கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும் இந்தப் பேரணியில் கலந்து கொள்ள 40,000 ஆயிரத்துக்கும் மேலாகத் திரண்டு விட்ட அந்தக் கூட்டம் 144 தடையுத்தரவைக் கிழித்துக் குப்பைத் தொட்டியிலெறிந்து விட்டு அணையை நோக்கி முன்னேறியது.
இடையில் ஆறு இடங்களில் போலீசு அமைத்திருந்த  தடுப்பரண்களைத் தகர்த்தெறிந்து விட்டு முன்னேறிய அந்த மக்கள் படை, தம்மை பின்புறத்திலிருந்து போலீசு நெருங்கி விடுவதை தாமதப்படுத்த கற்களாலும் மரங்களாலும் தடுப்புகளை அமைத்தவாறே தொடர்ந்து முன்னேறி அணையிலிருந்து 100 மீட்டர் தொலைவு வரை நெருங்கிச் சென்று ஆர்ப்பாட்டம் செய்து விட்டுக் கலைந்தது.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக் கிழமை (11.12.2011), முந்தைய தினம் கூடியதை விட இரண்டு மடங்கு அதிகமான மக்கள் ஒன்று திரண்டு மீண்டும் ஒரு பேரணியை நடத்தினர். சுமார் 70,000க்கும் அதிகமாக கூடிய மக்களில் பெண்கள் கணிசமான அளவு கலந்து கொண்டனர். தங்களைத் தடுக்கக் காத்திருக்கும் போலீசுப் பட்டாளத்திற்கு தகுந்த பதிலை அளிக்க பெண்கள் கையில் கிடைத்த விளக்குமாறு, பிய்ந்த செருப்பு உள்ளிட்ட ‘பேரழிவு’ ஆயுதங்களையும் ஆண்களோ கையில் கிடைத்த கத்தி கடப்பாறை உள்ளிட்ட சாதாரண ஆயுதங்களையும் ஏந்திச் சென்றனர்.
மக்கள் அணையை நெருங்குவதைத் தடுக்க, போலீசு கூடலூருக்கும் லோயர் கேம்புக்கும் இடையில் இருந்த குறுவனூற்றுப் பாலத்தில் தடுப்பரண் அமைத்துள்ளது. அதைத் தகர்த்து மக்கள் முன்னேறிச் சென்றனர். சுமார் 30 கிலோமீட்டர்களுக்கும் மேல் கால் நடையாகவே பேரணியில் நடந்து வந்த மக்கள் எந்தச் சோர்வுமின்றி ஆவேசமாக மத்திய அரசையும் கேரள அரசியல் கட்சிகளையும் எதிர்த்து கோஷங்களை எழுப்பியவாறு முன்னேறிச் சென்றனர்.
அணையை நோக்கி முன்னேறிச் சென்ற மக்களின் பேரணியை குமுளி-கேரள எல்லையில் வைத்து மறித்தது தமிழக டி.ஐ.ஜி தலைமையிலான போலீசு படை. முல்லைப் பெரியாறு அணை தொடர்பான சர்ச்சைகள் நியாயமாகத் தீர்க்கப்படும் வரை தமிழகத்தையும் கேரளத்தையும் இணைக்கும் 13 நெடுஞ்சாலைகளையும் அரசே மூட வேண்டுமென்றும், இந்தக் கோரிக்கையை அரசு உடனே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும், அதுவரை தாம் கலைந்து செல்ல முடியாதென்றும் மக்கள் உறுதியாகத் தெரிவித்தனர்.
இதற்கிடையே அங்கே தனது அடிப்பொடிகளுடன் விஜயம் செய்தார் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். போராடும் மக்களிடையே சமரசம் பேசி கலைந்து போகச் செய்து விடலாமென்ற நப்பாசையில் வந்த பன்னீர்செல்வத்துக்கு செருப்பாபிஷேகம் செய்து தகுந்த மரியாதை அளித்தனர் மக்கள். ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளை போராட்டத்தில் தலையிட அனுமதிக்க மாட்டொமென்று கோஷமிட்ட மக்கள், “ஏழு நாளா போறாடுகிறோம், இப்ப கேரளாக்காரனுக்கு பிரச்சினைன்னு சொன்னதும் எங்களை சமாதானம் செய்ய வந்தியா” என்று அர்ச்சனை செய்து விரட்டியடித்துள்ளனர்.
மக்களின் ஆவேசம் கண்டு பீதியடைந்த ஓ.பன்னீர்செல்வம் அடிபட்ட கையோடு, குமுளியில் இருந்து கீழே இறங்கிச் சென்றுள்ளார். அமைச்சருக்கு கிடைத்த மரியாதைக் கண்டு கொதித்த தமிழக போலீசு தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயற்சித்தது. இதற்கிடையே கீழே இருக்கும் மக்கள் விஷயத்தைக் கேள்விப்பட்டு கூடலூர் அருகே அமைச்சரின் வாகன பவனியைத் தடுத்து நிறுத்தினர். “திரும்பிப் போ திரும்பிப் போ கேரளாவுக்கே திரும்பிப் போ” என்று கோஷமிட்டு போர்கோலம் பூண்டு நின்றிருந்த மக்களிடமிருந்து எப்படியோ தப்பித்தோம் பிழைத்தோமென்று அமைச்சரும் அடிப்பொடிகளும் பின்னங்கால் பிடறியில் பட  ஓட்டம் பிடித்தனர்.
தற்போது கேரளத்தில் காங்கிரசு, பாரதிய ஜனதா, சிபிஎம் மட்டுமின்றி மாநில அளவில் இயங்கும் அனைத்துக் கட்சிகளும் எந்த வேறுபாடுமின்றி ஸ்தாபன ரீதியில் ஒருங்கினைந்து மலையாள இனவெறியை உயர்த்திப் பிடித்து, கேரள மக்களிடையே அச்சமூட்டும் பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளனர். 200 கிலோ மீட்டர்களுக்கு மனிதச் சங்கிலி, ஊர்வலம், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று வரிசையாக அணைக்கும் தமிழர்களுக்கும் எதிராக நடத்தப்படும் பயபீதியூட்டும் பிரச்சாரங்களுக்கு கணிசமான அளவு கேரள மக்கள்ஆட்பட்டுள்ளனர்.
தமிழகத்திலோ, ‘தேசியக்’ கட்சிகள் என்று சொல்லிக் கொள்ளும் காங்கிரசு, பாரதிய ஜனதா மற்றும் போலிகம்யூனிஸ்டு கட்சிகள் வெண்டைக்காயை வெளக்கெண்ணையில் கழுவிக் கொட்டுவது போல் வழவழா கொழகொழாவென்று மென்று முழுங்குகிறார்கள். அணை பாதுகாப்பானது என்பதை முன்னிறுத்தி தமது கேரளக் கூட்டாளிகளிடையே பேச துப்பில்லாத இவர்கள் தமிழர்களிடம் ஒருமுகமும் மலையாளிகளிடம் ஒருமுகமும் காட்டி இரண்டு பக்கமும் பொறுக்கித் தின்ன வாய்ப்புகள் கிடைக்குமா என்று பார்க்கிறார்கள்.
கேரள மக்களின் வயிற்றுப்பாடும் வாழ்க்கையும் தமிழகத்தின் விவசாய விளைச்சலில் தான் அடங்கியிருக்கிறது என்பதை முன்வைத்து கேரள மக்களின் தேவையற்ற அச்சத்தை விளக்குவதை விடுத்து இனவெறி அரசியலில் ஒருவருக்கொருவர் சளைக்காமல் முங்கி முத்தெடுக்கப் பார்க்கிறார்கள். இருந்தாலும், இப்போதைக்கு அதில் முன்னணியில் இருப்பது போலி கம்யூனிஸ்டுகள் தாம்.
இந்த சந்தர்ப்பவாத முகமூடிகளை நன்கு அறிந்து வைத்திருக்கும் தமிழக விவசாயிகளோ தெளிவாக இவர்களை புறம் தள்ளி தன்னிச்சையாக அணையைக் காக்க அணிதிரண்டு வருகிறார்கள். தங்கள் சொந்த அனுபத்தினூடாகவே துரோகிகளை இனங்கண்டு விலக்கியுள்ள விவசாயிகளோடு கைகோர்த்துச் செல்ல வேண்டியது இரு மாநிலங்களிலும் இருக்கும் புரட்சிகர ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.
கூடன்குளம் போராட்டத்தை தணிப்பதற்க்காக நாடகமாடிய பாசிச ஜெயா அதே பாணியில் முல்லைப் பெரியாறு போராட்டத்தை ஆப்பு வைப்பதற்க்காக, வரும் 15.12.2011 அன்று சட்டசபையைக் கூட்டி தமிழகத்தின் உரிமையை விட்டுத்தரமாட்டோம் என்று தீர்மானம் போட இருக்கிறார். மூவர் தூக்கிற்கும் இப்படித்தான் தீர்மானம் போட்டு பின்னர் அதை அவரே காறித்துப்பினார் என்பது நினைவு கூறத்தக்கது. ஐந்து காசுக்கு கூட மதிப்பில்லாத இந்த தீர்மானங்களால் எந்த பயனுமில்லை என்பது எல்லாருக்கும் தெரியும். ஜெயாவின் நோக்கம் போராடும் மக்களின் கோபத்தை தணித்து நீர்த்து போகச் செய்வதுதான். அதிலும் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அடிவாங்கிய பிறகு ஏதாவது செய்ய வேண்டி இருக்கிறது.
ஆனால் மக்கள் போராட்டம் அத்தனை சுலபத்தில் தணியப் போவதில்லை. இன்றும் 12.12.2011 – கூடலூர் பகுதியில் மக்கள் திரண்டு செல்லப்போகிறார்கள். தற்போது இந்த போராட்டத்தில் சேர்ந்து கொள்ளும் மக்களின் புவிப்பரப்பு அதிகரித்து வருகின்றது. இன்றைய போராட்டத்தில் சிவகங்கையிலிருந்தும் விவசாயிகள் வரப்போவதாக எமது தோழர்கள் கூறுகிறார்கள். ஆனால் இருநாள் அனுபவத்தை பார்த்து போலீசு இன்றுமுதல் வன்முறை நடவடிக்கையையும், முன்னணியாளர்களை கைது செய்து சிறையிலடைக்கும் என்றும் தெரிகிறது.
அப்படி தடியடி அல்லது துப்பாக்கி சூடு மூலம் கூட்டத்தை கலைத்து விடலாமென்று இருமாநில போலீசு நினைத்தாலும் வரும் நாட்களில் மக்கள் கூட்டம் சில பல இலட்சங்களுக்கு மாறும் போது யார் என்ன செய்ய முடியும்? அரசுகளும், ஓட்டுக்கட்சிகளும், நீதிமன்றங்களும் செயலற்று போகும் போது மக்களுக்கான உரிமையை அவர்களே மீட்டெடுப்பார்கள். அதற்கு முன்னறிவுப்புதான் இந்த அணை காக்கும் போர்!
__________________________________________________________
-          வினவு செய்தியாளர் -
-            தகவல் உதவி: வி.வி.மு, கம்பம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக