வியாழன், 22 டிசம்பர், 2011

கமிஷன் கேட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஓட வைக்காத நிர்வாகம் தேவை முதல்வரே!

தமிழகத்தில் தொழில்துறை வளர்ந்து தமிழகம் இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாறும் என்று முதல்வர் ஜெயலலிதா முன்பும் பேசியிருக்கிறார்தான். அப்போது அதையெல்லாம் சீரியசாக எடுக்கத் தேவையில்லை என்பது ‘உள்ளே நடப்பது என்ன’ என்ற விஷயம் தெரிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
வெளிநாட்டில் இருந்து வந்து முதலீடு செய்து தொழில் தொடங்க அனுமதி கேட்டால், சசிகலா சின்டிகேட்டில் பதிலுக்கு என்ன கேட்பார்கள் என்று, பன்னாட்டு நிறுவனங்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.
சசிகலா கேட்டைக் கடந்து சைதாப்பேட்டைக்கு வருவதற்கு சர்வதேச நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை.

ஆனால், இப்போது நந்தியாக இருந்த சசிகலா சின்டிகேட்டுக்கு சங்கு ஊதிவிட்டதால், நேற்று (புதன்கிழமை) சென்னை வர்த்தக மையத்தில் தமிழக அரசு மற்றும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற, ‘கனெக்ட் 2011′ தொழில்நுட்பக் கருத்தரங்கில் ஜெயலலிதா பேசியதை ஓரளவுக்கு சீரியசாக எடுத்துக் கொள்ளலாம்.
“தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் நிறைந்த, இந்தியாவின் ‘சான் ஜோஸ்’  நகராக (கலிபோர்னியாவிலுள்ள சான் ஹோசே -San Jose- நகரை குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன்) சென்னை உருமாறிக் கொண்டிருக்கிறது.வாரத்துக்கு ஒரு தொழிற்சாலை வீதம் வளரும் சென்னை, விரைவில் நாட்டின் தொழில்நுட்பத் தலைநகராகும்” என்று பேசியிருக்கிறார் முதல்வர்.
மிகவும் திறமையான முறையில் முதல்வரது பேச்சு தயாரிக்கப்பட்டிருந்தது. நான் அறிந்தவரை தமிழக முதல்வர்களில் யாரும் இதுபோன்ற தரவுகளுடன் ஒரு பேச்சை பிரசன்ட் பண்ணியதில்லை. “நாட்டின் மிக வேகமாக முன்னேறி வரும் துறையாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் அயல்பணி ஒப்படைப்புத்துறை விளங்குகிறது. ஆசிய-பசிபிக் நாடுகளில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா திகழ்கிறது. நாட்டில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அயல்பணி ஒப்படைப்புத்துறை மூலம் 2011-ம் நிதியாண்டில் 88.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
25 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இத்துறை தொடர்ந்து முன்னேறி வருகிறது. இந்திய ஏற்றுமதியில், இத்துறைகளின் பங்கு கடந்த 1998-ம் ஆண்டு 4 சதவீதமாக இருந்த நிலைமாறி, இப்போது 26 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாஸ்காம் சார்பில் 2009-ல் வெளியான மெக்கென்ஸி அறிக்கையில், இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் மூலம் 175 பில்லியன் அமெரிக்க டாலர்களும், உள்நாட்டு வர்த்தகம் மூலம் 50 பில்லியன் அமெரிக்க டாலர்களும் என இரண்டும் சேர்த்து 225 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் எதிர்பார்ப்பதாகக் கூறப்பட்டுள்ளது” என்று பேசினார் முதல்வர்.
இவர் கொடுத்துள்ள தரவுகள் அகில இந்தியா அளவிலான தரவுகள். இந்திய அளவில் மாநிலப் பரப்பளவு விகிதாசாரத்தில் (அல்லது மக்கள் தொகை விகிதாசாரத்தில்) தமிழகத்தில் இந்தத் தரவுகளின் விகிதாசாரத்தில் வெளிநாட்டு செலாவணி வருவாய் உள்ளதா? அதை முதல்வரால் சொல்ல முடியாத நிலை உள்ளது.
குஜராத்தும், மகராஷ்ட்ராவும் பூஸ்ட் பண்ணிவிட்ட அகில இந்திய புள்ளிவிபரத்தையே இவர்கள் யூஸ் பண்ணிக் கொள்கிறார்கள்!
முதல்வர் மேலும் பேசுகையில், “மிகக் குறைந்த செலவில், திறமையான மனித ஆற்றல் கொண்ட மாநிலமாகவும் இருப்பதால், முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது. (இதுவரை அப்படியெல்லாம் எதுவும் கிடையாதுங்க! சசி சின்டிகேட் அற்ற அட்மினிஸ்ட்ரேஷனில் சாத்தியமாகலாம்)  தெற்காசிய நாடுகளையும் தாண்டி, உலக நாடுகளுக்கே இந்தியாவின் கிழக்கு நுழைவாயிலாகத் தமிழகம் இருக்கும்.
இப்போதைக்கு தமிழகத்தில் 120 பன்னாட்டு நிறுவனங்கள் உள்பட 1,800 மென்பொருள், தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதியாளர்கள் உள்ளனர். (இதில் எத்தனை நிறுவனங்கள் தமது மெயின் ப்ராடக்டை தமிழகத்தில் வைத்திருக்கிறார்கள்? பாதிக்குப் பாதி, சப்சிடரி ஆபரேஷன்தான் இங்கு நடக்கிறது) இத்துறைக்கு முதுகெலும்பான, தகவல் தொடர்பு கட்டமைப்புகளையும் தமிழகம் வழங்கி வருகிறது. (சில நிறுவனங்கள் பிலிப்பீன்ஸ் நோக்கிச் செல்ல தயாராகின்றன) அதுதவிர, சர்வதேச நிதி அமைப்புகளுக்கான மையமாகச் சென்னை திகழ்கிறது” என்று கூறியுள்ளார். பிராக்கெட்டுக்குள் இருப்பவை எமது வாசகங்கள்.
இறுதியில் முதல்வர், “அனைத்துத்துறை வளர்ச்சியிலும், தமிழகத்தை முதல் மாநிலமாக்கும் கனவு எனக்கு இருக்கிறது. இதை அடைய, எனது அரசு புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. முதலீட்டாளர்களுக்கு ஏற்ற தொழில் கொள்கையை உருவாக்குவதிலும் முனைப்பு காட்டி வருகிறோம். வலிமையான தமிழகத்தை உருவாக்க, முதலீட்டாளர்களை நான் வரவேற்கிறேன்” என்றார்.
நல்ல நினைப்புதான். ஆனால் அதற்கு, திறமையான ஒரு தொழில்துறை அமைச்சரும், கமிஷன் கேட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களை பாய்ந்து ஓட வைக்காத நிர்வாகமும் தேவை முதல்வரே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக