வியாழன், 22 டிசம்பர், 2011

டாக்டர் ராமதாஸ்: கேரள அதிகாரிகள் அனைவரையும் மாற்ற வேண்டும்.

Ramadoss
சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழர்களின் உணர்வு புரியாமல் தாக்குதல் நடத்த உத்தரவிடும் ஏடிஜிபி ஜார்ஜ், ஐஜி ராஜேஷ் தாஸ் ஆகியோரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
நேற்று தேனி மாவட்டத்தில் லட்சக்கணக்கில் திரண்டு கேரள அரசுக்கு் எதிராக போராட முயன்ற பொதுமக்களையும், விவசாயிகளையும், பெண்களையும் போலீஸார் திடீரென கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தி ஓட ஓட விரட்டியும் கலைத்துள்ள செயல் மக்களை அதிர வைத்துள்ளது. இந்த சம்பவத்திற்கு டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக கம்பம் நகரிலிருந்து குமுளி நோக்கி பேரணி நடத்திய பொதுமக்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தடியடி நடத்தியுள்ளனர். இதனால் சிதறி ஓடிய பொதுமக்கள் கூடலூரில் மறியல் போராட்டம் நடத்தியபோது அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் காவல்துறையினர் விரட்டி அடித்திருக்கின்றனர்.

காவல்துறையினரின் தாக்குதலில் பெண்கள் உள்பட பலர் காயமடைந்துள்ளனர். காவல்துறையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தமிழக காவல் துறையின் சட்டம்-ஒழுங்கு பிரிவு கூடுதல் தலைமை இயக்குநராக இருக்கும் ஜார்ஜ் கேரளத்தைச் சேர்ந்தவர் என்பதால் இப்போராட்டத்தை ஒடுக்க வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே முயன்று வருகிறார். தென்மண்டல காவல்துறை தலைவராக இருக்கும் ராஜேஷ் தாசும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர். இவர்கள் மக்களின் போராட்டத்தை ஒடுக்கும் நோக்குடன் செயல்பட்டு வருகிறார்கள். எனவே இந்த அதிகாரிகள் அனைவரையும் உடனடியாக அங்கிருந்து மாற்ற வேண்டும்.

பொதுமக்கள் நடத்திவரும் போராட்டத்திற்கு பாதுகாப்பும், ஒத்துழைப்பும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக