திங்கள், 12 டிசம்பர், 2011

அணை விவகாரம்- டெல்லியில் இருந்தபடி வேடிக்கை பார்க்காதீர்-மத்திய அரசு மீது கருணாநிதி கடும் தாக்கு


Karunanidhi
சென்னை: வேண்டுமென்றே திட்டமிட்டு, தமிழகத்தினுடைய செழிப்பை, செல்வாக்கை, வளத்தை வீணாக்கி அழித்து, தமிழகத்தை சஹாரா பாலைவனமாக்க திட்டமிட்டு கேரளத்திலிருந்து ஒரு சதி ஜோடிக்கப்படுமேயானால் அதை தமிழன் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. தான் அழிவதற்கு தன்னுடைய சந்ததிகள் அழிவதற்கு தன்னுடைய மக்கள் அழிவதற்கு தன்னுடைய நாடு அழிவதற்கு தன்னுடைய எதிர்காலமே அழிவதற்கு எந்த முட்டாள் தமிழனும் ஒத்துக் கொள்ள மாட்டான் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள அரசின் செயல்பாடுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் தலைமையில் நடந்த உண்ணாவிரதத்தை முடித்து வைத்து திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது:

கேரளாவில் உள்ள அத்தனை பேரும் தமிழகத்தை ஏதோ ஒரு தீண்டப்படாத மாநிலமாகவும், இது எதிர்காலத்திலே வறண்ட பாலைவனமாக ஆக வேண்டும் என்ற எண்ணத்தோடு பேசுவதும், அறிக்கை விடுப்பதும் அவற்றுக்கேற்ப நடந்து கொள்வதும் நீங்கள் எல்லாம் அறிந்துததான்.

நான் அடிக்கடி சொல்வதைப் போல் நம்முடைய கழகத்தினுடைய தீர்மானத்திலே குறிப்பிட்டிருப்பதைப் போல தமிழன் யாருக்கும் தாழ்ந்து போக மாட்டான், யாரையும் தாழ்த்த மாட்டான் என்பதற்கேற்ப, நம்முடைய செயற்குழு தீர்மானத்தை அண்ணா வழியில், அகிம்சையைப் போதித்த அய்யா காந்தியடிகள் வழியில் போராடி வெற்றி பெறுவது என்கிற முனைப்போடு நாம் உள்ளோம்.

நம்முடைய எழுச்சியை தமிழகம் மட்டுமல்ல, இன்றைக்கு இந்திய திருநாடே அறிந்திருக்கிறது. இந்தியத் திருநாடு மாத்திரமல்ல, உலகத்தில் எங்கெங்கே தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் இந்த உணர்ச்சி பரவியிருக்கிறது.

இது ஒரு சாதாரண பிரச்சனை. ஏன், இப்படி சொல்கிறேன் என்றால், இந்தப் பிரச்சனையை பெரிதுபடுத்திக் கொண்டு இதிலேதான் கேரளத்தினுடைய வாழ்வே இருப்பது போல மாயமாக காட்டிக் கொண்டு அங்குள்ள அரசும், அங்குள்ள கட்சிகளின் தலைவர்களும் போட்டு வருகிற நாடகத்தையும், ஆடுகின்ற ஆட்டத்தையும் காணும் போது எனக்கு வியப்பாக இருக்கிறது.

1969ம் ஆண்டு தமிழகத்தில் முதல்வராக நான் அப்போதே இருந்தபோது, அண்ணா அவர்களுக்குப் பிறகு அந்தப் பொறுப்பை ஏற்ற காலகட்டத்தில் திருவனந்தபுரத்திலே 10.5.1969 அன்று, ஒரு மாநாடு நடந்தது. இரு மாநிலங்களுக்கிடையிலான நதி நீர்ப் பங்கீடு குறித்து ஆராய்ந்து தீர்வு காண அந்த மாநாடு நடந்தது. அதில் நானும், அன்று நிதியமைச்சராக இருந்த மதியழகனும் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த சாதிக் பாட்சாவும் கலந்து கொண்டோம்.

கேரள அரசின் சார்பாக அன்றைய முதல்வர் நம்பூதிரிபாடும் பாசனத்துறை அமைச்சர் குரூப்பும், மின்சார அமைச்சர் கோவிந்தனும் கலந்து கொண்டனர். அந்த கலந்துரையாடல் மாநாட்டுக்கு மத்திய அரசின் நீர்ப்பாசனத்துறை அமைச்சர், மின்விசைத்துறை அமைச்சர் கே.ஆர்.ராவ் தலைமை வகித்தார்.

நீண்ட நேரம் நதி நீர்ப் பிரச்சனை குறித்து பேசியும் முடிவேற்படவில்லை. காலையில் தொடங்கி பிற்பகல் 2 மணி வரையில் நடந்த பேச்சுவார்த்தைக்கு முடிவே ஏற்படவில்லை. அப்போது இஎம்எஸ் சொன்னார். அதிகாரிகளை வைத்துப் பேசினால் நாங்கள் சொல்வதை உங்கள் பக்க அதிகாரிகள் மறுத்துப் பேசுவார்கள். உங்கள் அதிகாரிகள் பேசுவதை எங்களது அதிகாரிகள் மறுப்பார்கள். இரு பக்க அதிகாரிகளும் போட்டி போட்டுக் கொணடு சமரசப் பேசுசார்த்தையை கெடுத்து விடக் கூடும். ஆகவே கருணாநிதி அவர்களே, நான் சொல்கிறேன், அதிகாரிகளை வெளியே அனுப்பி விட்டு நாம் மாத்திரம் உட்கார்ந்து தனியாக பேசலாம் என்றார்.

நானும் ஏற்றுக் கொண்டேன். அவ்வாறு பேசினோம். பேச ஆரம்பித்து பத்து நிமிடத்திற்கெல்லாம் பேச்சிலே முடிவு ஏற்பட்டது. அந்த முடிவின்படி, பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம், பவானி ஆறு திட்டம், பம்பையாறு படுகை சம்பந்தமான பிரச்சனைகளை கோவைக்கு சிறுவாணி தண்ணீரை கொண்டு வரும் திட்டம், கபிணியாறு திட்டம் ஆகியவற்றில், எப்படியெப்படி தண்ணீரை பங்கிடுவது என்பது குறித்து நம்பூதிரிபாடும், நானும் தனியாக அதிகாரிகள் இல்லாமல் நடத்திய பேச்சில் நல்ல முடிவு கண்டு, நான், நம்பூதிரிபாடு, ராவ் ஆகியோர் கையெழுத்திட்டு ஒப்பந்தம் நிறைவேறியது என்ற அறிவிப்பை வெளியிட்டோம்.

பின்னர் செய்தியாளர்கள் ஒப்பந்தம் குறித்துக் கேட்டபோது, ஏறத்தாழ 60 கோடி ரூபாயிலிருந்து 70 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தால், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கரா நிலம் பாசன வசதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், தொடங்கப்பட்ட வேலைக்கு 50 கோடி நெருக்கமாக செலவழித்தும் கூட, தமிழக அரசுக்கும், கேரள அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நிறைவேறாததால், ஒரு லட்சம் ஏக்கரா மட்டும் பயனடைந்துள்ளது.

நீராதார பிரச்சினை தீராதப் பிரச்சனையாக உள்ளது. இப்போது செய்துள்ள ஒப்பந்தப்படி, மேலும் ஒரு லட்சம் ஏக்கரா பகுதி பாசன வசதி பெறும். ஆனை மலையாறு போன்ற வறண்ட பகுதிகளிலும் 20,000 ஏக்கர் பாசன வசதி பெறும். கோவைக்கு சிறுவாணி குடிநீர் தர முடியும் என்று நான் சொன்னேன்.

அப்போது என்னையும், கேரள முதல்வரையும் பாராட்டிய மத்திய அமைச்சர் ராவ், நதி நீர்ப்ப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் இந்த இரு முதல்வர்களும் இந்தியாவுக்கே வழிகாட்டியுள்ளனர் என்றார். ஏன் சொல்கிறேன் என்றால், அன்றைக்கு இருந்த முதல்வராகளாகிய நாங்கள் நாட்டின் நலன், மக்களின் நலன் இதை மட்டுமே முன்வைத்து, எனது மாநில நலம் என்ற ஒன்றை மாத்திரம் கருதாமல் செயல்பட்டோம்.

இன்றைக்கு நிலை என்ன. முல்லைப் பெரியாறு 1895ம் ஆண்டு கர்னல் பென்னிகுயி்க் என்பவரால் கட்டி முடிக்கப்பட்டது. அணையைக் கட்டுவதிலே அவர் எவ்வளவு முன்னின்று பாடுபட்டார் என்பதை கேள்விப்பட்டால் உடம்பெல்லாம புல்லரிக்கிறது. திட்டச்செலவு கூடுதலாகி செலவுக்கு வேறு வழியில்லாமல், தனது வீட்டில் இருந்த நகைகளையும் வைத்து பொருள்திரட்டி அணையைக் கட்டினார் என்பது வரலாறு.

1895ல் கட்டப்ட்ட அந்த அணை இப்போது பழுதாகி விட்டது. புயல் வந்தால் பூகம்பம் வந்தால் தாங்காது. உடைந்தால் லட்சக்கணக்கான மக்கள் மடிந்திட நேரிடும் என்று பயமுறுத்தி கேரளத்தில் உள்ள நல்லவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். வருங்காலத்தில் அகராதியில் நல்லவர்கள் என்பதற்கு என்ன பொருள் எழுதப்படும் என்பதை உங்களது முடிவுக்கே விடுகிறேன்.

படம் எடுத்துக் காட்டுகிறார்கள். உடைந்து விட்டதாகவே படம் எடுத்துக் காட்டுகிறாரகள். உடைந்து நாடு நகரெல்லாம் அழிந்து வீடு வாசல் எல்லாம் நதியிலே மிதந்து குழந்தை குட்டியெல்லாம் இறந்து மடிந்து போகிற காட்சிகளை படம் எடுத்துக் காட்டுகிறார்கள்.

ஒரு இயக்குநர் தனக்குள்ள திறமையை இரு மாநில மோதலை ஏற்படுத்தத்தான் பயன்படுத்தியிருக்கிறார் என்பதை எண்ணும் போது கலை உலகில் இருக்கிற நான் அதற்காக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது ஒரு வீண் வதந்தி. இப்படி வதந்தி பலமுறை பரப்பப்பட்டதுண்டு. கடந்த காலத்தில், இதுபோன்ற வதந்திகள் பரப்பப்பட்ட காரணத்தால், அணை பலவீனமாக இருக்கிறது என்பதை வைத்து, 1981 முதல் 94 வரை அணையை 3 முறை பலப்படுத்தியிருக்கிறோம்.

24 அடி அகலம் 3 அடி உயரத்தில் 1200 அடி நீளத்திற்கு 12,000 டன் கான்க்ரீட் போடப்பட்டு, அணை பலப்படுத்தப்பட்டுள்ளது. அணையின் பின்புறத்தில் தாங்கு அணையாக 135 அடி உயரத்தில் 1700 அடி நீளத்தில் 33 அடி அகலத்தில் கான்க்ரீட் போடப்பட்டுள்ளது.

பூகம்ப பயத்தை போக்கும் வகையில் அணையின் 1500 அடி நீளத்தில், 9 அடி இடைவெளி விட்டு 4 அங்குல விட்டத்தில் 95 துளைகள் இடப்பட்டு அதிலிருந்து கம்பிகளை எடுத்து கீழ் மட்டத்திலே 30 அடி கீழே உள்ள பாறைகளில் சொருகி, அதை கான்க்ரீட் கலவை கொண்டு உறுதிப்படுத்தி 20 டன் எடையைத் தாண்டும் அளவுக்கு இறுக்கி முடுக்கி விடப்பட்டுள்ளது. நிலநடுக்கமே ஏற்பட்டாலும் அணைக்கு எந்தப் பாதிப்பும் வராது. அணை முன்பை 3 மடங்கு பலமாக இருக்கிறது.

எனவே அணை பலவீனமாக உள்ளது என்பது பொய்யான வாதம், கேரளாவின் சூழ்ச்சி. இதை யாரும் ஏற்க வேண்டியதில்லை என்பதை செயல் மூலமாக திட்டவட்டமாக தெளிவாக்கியிருக்கிறோம்.

முல்லைப் பெரியாறு வழக்கில் அணை உறுதியாக இருக்கிறதா என்பதை ஆய்வு நடத்த உச்சநீதிமன்றமே 2001ல் பிப்ரவரி 10ம் தேதி 7 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது. அதில், மிட்டல் தலைவராகவும், மத்திய தலைமைப் பொறியாளர் 2 பேர், மத்தியப் பிரதேச மாநில அணைப் பாதுகாப்புக் குழுத் தலைவர் , உ.பி. தலைமைப் பொறியாளர், தமிழக அரசின் சார்பில் ஒரு பிரதிநிதி, கேரள சார்பின் ஒரு பிரதிநிதி என 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு ஏறத்தாழ 1 ஆண்டு காலம் முல்லைப் பெரியாறு அணை உறுதியாக இருக்கிறதா என்பதை ஆராய்ந்து, ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்தது. அதில், அணை உறுதியாக இருக்கிறது, அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்று பரிந்துரை செய்தது.

அதன் பிறகு 2002ல் முல்லைப் பெரியாறு அணை குறித்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தனது நிலைப்பாட்டை விளக்கி அறிக்கை தாக்கல் செய்தது. அதில், முல்லைப் பெரியாறு உறுதி தொடர்பாக 7 பேர் கொண்ட நிபுணர் குழுவின் முடிவுகளை மத்திய அரசு ஏற்றுக் கொள்கிறது. அத்துடன் அணையின் உயரத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்துவதால் அணைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய அரசு உறுதி செய்கிறது என்று அதில் மத்திய அரசு தெரிவித்தது.

நான் முல்லைப் பெரியாறு பிரச்சனை தொடர்பாக கேரள முதல்வர், மத்திய அமைச்சர், பிரதமருக்கு ஒன்றல்ல, இரண்டல்ல, பல கடிதங்களை எழுதியிருக்கிறேன்.

முல்லைப் பெரியாறு அணை வழக்கில் உச்சநீதமன்றம், 2006 அன்று தீர்பபின் விவரங்களைத் தெரிந்து கொண்டால், கேரளத்து அரசு சார்பாக வெளியிடப்படும் தகவல்கள், எவ்வளவு மோசமானவை, நம்பகத்தன்மை அற்றவை என்பதை புரி்து கொள்ளலாம்.

அணை பலமிழந்து விட்டது என்ற கேரளாவின் கூற்றில் எந்தவிதமான முகாந்திரமும் இல்லை. வல்லுநர் குழு பரிந்துரைத்தபடி 142 அடி வரையில் நீரைத் தேக்கி வைக்கலாம். மீதமுள்ள பலப்படுத்தும் பணிகளை மத்திய நீர்க் குழுவுக்கு திருப்தி அளிக்கும் வகையில் தமிழகம் மேற்கொண்ட பின்னர் உச்சமட்ட அளவான 152 அடி வரை தமிழ்நாடு நீரைத் தேக்கிக் கொள்ளலாம்.

கேரள அரசு மற்றும் அதன் அதிகாரிகள் தமிழ்நாடு அரசு சார்பில் பணிகளை செய்வதை தடுத்து நிறுத்தும் போக்கினைக் கைவிட வேண்டும். தமிழக அரசின் பணிகளை தடுக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்தத் தீர்ப்பினை அப்போதே மதிக்காமல் கேரள அரசு அடுத்த 16வது நாளில் நீர்ப்பாசன மற்றும் நீர்ப்பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு முதல் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்து பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியாக வைத்துக் கொள்வோம என்று சட்டமே செய்தது.

இப்போது சட்டசபையைக் கூட்டி 120 அடியாக வைத்துக் கொள்வோம் என்று தீர்மானம் போடுகிறது. அது என்ன சட்டமன்றமா, இஷ்டத்திற்கு வளைந்து கொடுக்கக்கூடிய பஞ்சாயத்தை விட மோசமான ஒரு அமைப்பா?.

இந்தியாவிலேயே கேரளாக்காரர்கள் மிகுந்த அறிவாளிகள், திறமையானவர்கள், புத்திசாலிகள் என்றெல்லாம் பேசப்படுவதுண்டு. அப்படிப்பட்டவர்கள் இப்படிச் சொல்கிறார்கள் என்றால், அது யாரை ஏமாற்ற, இந்த நாடகம் நடத்துகிறார்கள் என்பதை தமிழ் மக்கள், மன்னிக்க வேண்டும், இந்திய திருநாட்டு மக்கள், தேசிய உணர்வு படைத்த மக்கள், இந்தியா ஒன்று என்று எண்ணுகின்ற மக்கள் அனைவரும் இதைக் கவனித்துப் பார்க்க வேண்டும.

வேண்டும் என்றே திட்டமிட்டு, தமிழகத்தினுடைய செழிப்பை, செல்வாக்கை, வளத்தை வீணாக்கி அழித்து, தமிழகத்தை சஹாரா பாலைவனமாக்க திட்டமிட்டு கேரளத்திலிருந்து ஒரு சதி ஜோடிக்கப்படுமேயானால் அதை தமிழன் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. தான் அழிவதற்கு தன்னுடைய சந்ததிகள் அழிவதற்கு தன்னுடைய மக்கள் அழிவதற்கு தன்னுடைய நாடு அழிவதற்கு தன்னுடைய எதிர்காலமே அழிவதற்கு எந்த முட்டாள் தமிழனும் ஒத்துக் கொள்ள மாட்டான்.

எனவே நாம் நடத்துகின்ற அறப்போர், தமிழ்நாட்டில் கேரள மக்கள் இன்றைக்கு சுதந்திரத்தோடு உலாவுகிறார்கள். தொடர்ந்து சுதந்திரத்தோடு இருப்பார்கள் என்பதில் நமக்கு ஆடேசபனை கிடையாது. தமிழன் கேரளத்திலே வாழ வேண்டும். அந்த ஒற்றுமையும், உணர்வும், வளர வேண்டுமென்றால், தழைக்க வேண்டுமேயானால், இடைத் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு, நாங்கள் இடக்கு செய்வோம் என்றில்லாமல், ஒரு இடைத் தேர்தலுக்காக எவ்வளவு பேர் அடிபடுவது, கொல்லப்படுவது, உடமைகளை இழப்பது, உயிர்களைப் பலி கொடுப்பது என்ற நிலை எல்லாம் ஏற்படாமல், எங்களோடு ஒத்துழைத்து கேரளத்தில் உள்ள பெரியவர்கள், அறிவாளிகள், கேரளத்தில் உள்ள நிபுணர்கள், விஞ்ஞானிகள், வித்தகர்கள், விவசாயப் பெருங்குடி, மக்கள் தமிழ் மக்களின் கைகளைத் தூக்கி, தமிழர்களும் கேரளத்தில் உள்ளவர்களும் சகோதரர்கள்தான் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ளாமல், கேரளம், களித் தமிழ் பேசுகிற நாடும், துளு பேசுகிற நாடும், எல்லா மக்களும் இந்தியர்கள்தான்.

ஒரு காலத்திலே சோர, சோழ, பாண்டியர் மூவேந்தர்களின் கொடியின் கீழ் வாழ்ந்தவர்கள்தான். அந்தக் கொடி நிழலில் உருவாக்கிய ஒற்றுமை, உறுதி, என்றும் நிலை நிறுத்தப்பட இந்தப் பிரச்சனையில், யாரும் உணர்ச்சிவசப்படாமல் அவர்களும் நாமும் சகோதரர்கள் என்று எண்ண வேண்டும், இருவரும் வளமை பெற வேண்டும்.

இந்தியாவுடையை ஒற்றுமையை பேண வேண்டும் என்பதை இந்த நேரத்தில் சொல்லி மத்திய அரசு கேரளத்துக்கும், தமிழகத்திற்கும் இடையே நடைபெறும் பிரச்சனையை டெல்லியிலே இருந்தபடி வேடிக்கை பார்க்காமல் ஒரு வேடிக்கையாக கருதாமல், இது எதிர்காலத்திலே மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்ற ஆபத்தை உணர்ந்து, எதிலும் தாமதமாக முடிவெடுக்கிற மத்திய அரசு இதிலே தாமதமாக முடிவெடுக்காமல், தமிழர்களின் செங்குருதி தெருவிலே சிந்தாமல் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக