திங்கள், 12 டிசம்பர், 2011

முல்லை பெரியாறு அணையை பாதுகாக்க மத்திய பாதுகாப்பு படை தேவை: கருணாநிதி

சென்னை: "பிரச்னைக்கு ஒரு முடிவு ஏற்படும் வரையில் முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பை, மத்திய பாதுகாப்பு படையினரின் பொறுப்பில் விட வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து தி.மு.க., தொண்டர்களுக்கு கருணாநிதி எழுதிய கடிதம்: இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்பதென்றும், அதற்கடுத்து முல்லைப் பெரியாறு அணையால் பாசன வசதி பெறும் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் 14ம் தேதி மாலை 3 மணி முதல் 5 மணி வரை மனிதச்சங்கிலி அணிவகுப்பு நடத்த, தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னையில் காலை 8 மணி முதலே உண்ணாவிரதத்தில் அமர்ந்திருக்க எனக்கு விருப்பம் தான். ஆனால், கட்சியின் தொண்டர்கள் எனது வயது கருதி, முழு நாளும் உண்ணாவிரதம் இருப்பது உடல்நலத்திற்கு நல்லதல்ல என்று, என்னை கேட்காமலேயே அவர்களாகவே முடிவு செய்திருக்கின்றனர். என் உடல், உண்ணாவிரதத்திற்கு ஒத்துழைப்பு தருகிறதோ, இல்லையோ, என் உள்ளம் எல்லாம் உண்ணாவிரதத்திலே தான் ஊன்றி நிலைத்திருக்கும். கேரளாவைச் சேர்ந்த பலர், தமிழகத்தில் பல முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். தலைமைச் செயலகத்திலேயே பலர் உயர்நிலை அதிகாரிகளாக இருக்கின்றனர். கேரள மாநிலத்தில் இன்றைய தலைமைச் செயலராக உள்ள பிரபாகர், தமிழகத்தைச் சேர்ந்தவர்.
கடந்த ஆண்டு நான் திருவனந்தபுரம் சென்றபோது, தங்கும் விடுதிக்கே வந்து என்னை சந்தித்தார். ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளைப் போல பாசப் பிணைப்போடு பழகிக் கொண்டிருக்கும் இரு மாநிலத்தவரிடையே பேத உணர்வு வந்து விடக் கூடாதல்லவா?
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை, இந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவு ஏற்படும் வரையில், மத்திய பாதுகாப்புப் படையினரின் பொறுப்பில் விட வேண்டும். அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த அனுமதிக்க வேண்டுமென, சுப்ரீம் கோர்ட் கேரள அரசுக்கு உத்தரவிட்டதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

னின் தேதியில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக