சனி, 17 டிசம்பர், 2011

ப.சிதம்பரம் ‘ஹோட்டல்’ விஷயத்தில் முதல் தடவையாக வாய் திறக்கிறார்!

 டில்லி அரசியலில் ஒரு சிறு குழந்தைக்கும் புரியக்கூடிய அளவில் ஒரு விஷயம் நடக்கின்றது என்றால், அது ‘சில சக்திகள்’ உட்துறை அமைச்சர் சிதம்பரத்தை அமைச்சரவையில் இருந்து வெளியேற்றாமல் விட போவதில்லை என்பதுதான்.
ஸ்பெகட்ரம் வழக்கில் அமைச்சர் சிதம்பரத்தை தொடர்புபடுத்தி, அந்த ரூட்டில் அவரை அமைச்சரவையில் இருந்து தூக்கும் நடவடிக்கைகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மறுபக்கமாக conflict of interest குற்றச்சாட்டு இப்போது சூடு பிடிக்கிறது.
Conflict of interest குற்றச்சாட்டு, அமைச்சர் தனது பதவியைப் பயன்படுத்தி, தனது துறை சார்ந்த உதவி ஒன்றை, தாம் வக்கீலாக ஆஜராகிய கட்சிக்காரருக்கு செய்தார் என்ற வகையில் உள்ளது.

இந்த விவகாரத்தில் முதல் தடவையாக இன்று (வெள்ளிக்கிழமை) வாய்திறந்து தனது கருத்தை கூறியிருக்கிறார் அமைச்சர் சிதம்பரம். “எனது முன்னாள் கட்சிக்காரருக்கு அமைச்சர் பதவியை துஷ்பிரயோகம் செய்து உதவினேன் என்ற குற்றச்சாட்டு என்னை மனதளவில் பாதித்து விட்டது” என்று கூறிய அவர், “வக்கீல் என்ற முறையில் நான் ஆயிரக்கணக்கான வழக்குகளில் வாதாடியிருக்கிறேன். அந்த ஆயிரக்கணக்கான முன்னாள் கட்சிக்காரர்களுக்கும் எனது அமைச்சில் நல்லது கெட்டது எது நடந்தாலும், அது என்னால் செய்யப்பட்டது என்று எடுத்துக் கொள்ள முடியுமா?” என்று கேட்டிருக்கிறார்.
இங்கு அமைச்சர் சிதம்பரத்துக்கு எதிராக திரும்பியுள்ள விவகாரம், சிதம்பரத்தின் முன்னாள் கட்சிக்காரரான டில்லி ஹோட்டல் அதிபர் ஒருவர்மீது தாக்கல் செய்யப்பட்ட முதல் குற்ற அறிக்கையை உட்துறை அமைச்சு வாபஸ் பெற்ற விவகாரமே. அமைச்சர் சிதம்பரத்தின் விருப்பத்துக்கு அமைய உட்துறை அமைச்சு அதிகாரிகள் ஹோட்டல் அதிபருக்கு ஆதரவாக முடிவு எடுத்தனர் என்பது குற்றச்சாட்டு.
2ஜி-ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அமைச்சர் சிதம்பரத்தின் பெயரை இழுப்பதுபோல ஆழமான விஷயம் ஒன்றும் இந்தக் குற்றச்சாட்டில் கிடையாது. ஒரு விதத்தில் சொல்லப்போனால், இதை ஒரு விவகாரம் ஆக்கியதே, எதிர்க்கட்சிகள் அல்ல, ஒரு ஆங்கில ஊடகம்தான்.
சென்சேஷன் விஷயமாக அந்த ஆங்கில ஊடகம் தொட்ட சப்ஜெக்டை அதன்பின்னர்தான், “ஆஹா, இதோ மற்றொரு விவகாரம்” என்று பா.ஜ.க. தமது கையில் எடுத்துக் கொண்டது. நாடாளுமன்றத்தில் அதை வைத்து காட்சி அமைத்துக் கொண்டது. அது, கிடைத்த விஷயத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் அரசியல்!
நிலைமை தனக்கு எதிராக வேகமாக மாறி வருவதைப் புரிந்து கொண்டிருக்கிறார் அமைச்சர் சிதம்பரம். அதனாலேயே முதல் தடவையாக அவர் வாய்திறந்து அது பற்றிய நீண்ட தன்னிலை விளக்கம் ஒன்றையும் கொடுத்திருக்கிறார்.
“இவர்களது குற்றச்சாட்டில் சொல்லப்படும் ஹோட்டல் அதிபர் (அவரது பெயர் எஸ்.பி.குப்தா) கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து உட்துறை அமைச்சில் சுமார் 40 தடவைகள் தன்மீதுள்ள மூன்று முதல் குற்ற அறிக்கைகளை வாபஸ் வாங்குமாறு அணுகியுள்ளார். அதில்கூட வேறு 3 எம்.பி.க்களின் தலையீடு உள்ளது. அதன்பின்னரே அமைச்சு முதல் குற்ற அறிக்கைகளை வாபஸ் பெற்றிருக்கிறது.
முதல்குற்ற அறிக்கையை வாபஸ் பெறும் முடிவை உட்துறை அமைச்சகத்தின் டைரக்டர் ஒருவர் எடுத்திருக்கின்றார். அவர் சொந்தமாக எடுத்த முடிவு அது. அவர் அந்த முடிவு எடுத்த விஷயத்தை அமைச்சில் வேறு யாருக்கும் காண்பிக்கக்கூட இல்லை. அவ்வளவு ரகசியம் காக்கப்பட்டிருக்கிறது.
இவ்வளவு பின்னணி இருந்தும் முழு விஷயத்தையும் எனது தலையில் கொண்டுவந்து போட முயல்கிறது பா.ஜ.க. அவர்களது நடவடிக்கை என்னை மனதளவில் பாதித்து விட்டது. இது அபாண்டமான குற்றச்சாட்டு என்பதை நான் உறுதியாகச் சொல்கிறேன்” என்பது அமைச்சர் சிதம்பரத்தின் கூற்று.
டில்லி அரசியல் வட்டாரங்களில் நாம் விசாரித்த வகையில், இந்த விவகாரம் பா.ஜ.க.-வின் அஸ்திரம் கிடையாது. ப.சிதம்பரத்துக்கு எதிராக அவரது கட்சிக்குள் இருந்து யாரோ ஒரு ‘பெரிய தலை’ காலை வாரிவிடும் விவகாரம் இது. துறை சார்ந்த விபரங்களை மிகத் துல்லியமாக சேகரித்து, ஆங்கில ஊடகத்துக்கு கொடுத்த நபர், அமைச்சர் சிதம்பரத்தின் வெளிப்படையான எதிரியோ, எதிர்க்கட்சிகளோ, இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிஸம் அபிமானியோ கிடையாது.
எல்லாம் உள்வீட்டில், பக்கத்து இலையில் அமர்ந்துள்ள நெருக்கமான தோஸ்த்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக