வெள்ளி, 9 டிசம்பர், 2011

அண்டை மாநிலத்தைப் பகைத்துக் கொண்டு எந்த மாநிலமும் வாழ்ந்து விட முடியாது- கி.வீரமணி


Veeramani
சென்னை: நதி நீர்ப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். மத்திய அரசுக்கு மாநிலங்களை கட்டுப்படுத்த ஏற்கனவே இந்திய அரசியல் சட்டத்தில் 356 என்ற விதி உள்ளது என்பதை நினைவூட்டுவது நமது கடமை. அண்டை மாநிலத்தைப் பகைத்துக் கொண்டு எந்த மாநிலமும் வாழ்ந்து விட முடியாது என்பதை கேரளா நினைவில் கொள்ள வேண்டும் என்று தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
கேரள அரசு வேண்டுமென்றே, எங்கே அணையை உயர்த்தி தமிழ்நாடு பயன்பெறும் நிலை வந்துவிடுமோ என்ற அச்சத்தாலும், அவசியமற்ற பொறாமையிலும்தான் ஆற்றொழுக்காக சென்று கொண்டிருந்த இந்த பிரச்சினையை வழக்குக்குரியதாக்கி சிக்கலாக்கி இரு மாநிலங்களிலும் வன்முறை வெடித்துக் கிளம்பும் அளவுக்கு விபரீதத்திற்குள் தள்ளிவிட்டது.ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆனந்த் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு, அதில் இரு மாநிலங்கள் சார்பாக அவரவர் பால் உள்ள நியாயங்களை எடுத்துரைக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளே நியமிக்கப்பட்டுள்ள நிலையில்-அதற்காக காத்திராமல், புதிய அணை கட்டப் போகிறோம் என்று ஆரம்பித்தது கேரள அரசு.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் பீதியைக் கிளப்பி, உணர்ச்சி மேலீட்டை கேரள மக்களுக்குத் தரவும், அங்கே வன்முறை வெடித்துக் கிளம்பியுள்ளது. உடனே அதற்கு பதிலுக்குப் பதில் என்பது போன்று தமிழ்நாட்டில் அமைதியைக் குலைத்து அமளி-துமளிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெடிக்கும் நிலை விரும்பத்தக்கது அல்ல. அண்டை மாநிலத்தை பகைத்துக்கொண்டு எந்த மாநிலமும் வாழ்ந்துவிட முடியாது.

நதிகளை நாட்டுடைமையாக்கி, அங்கே கட்டப்பட்ட அணைகளுக்கு அவசியம் வந்தால் மத்திய அரசு ஒப்புதல்- மேற்பார்வை - மாநில அரசுகள் கலந்து ஆலோசித்து ஒத்துழைப்பு நல்கிய பிறகே கட்டலாம் என்று ஒரு சட்டத்தை உடனடியாக மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.

தமிழர்கள் ஒன்றுபட்டு நிற்பது உறுதி. உடனடியாக மத்திய அரசு அணையை பாதுகாக்கவும், புதிய அணைகளை அதன் ஒப்புதல் இல்லாமல் கட்டுவதைத் தடுப்பதற்கும் உடனடியாக முன்வருவது அவசர - அவசியம்.முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டிருப்பதைப்போல இதில் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் ஆகிய அனைவரும் ஒன்றுபட்டு தமிழக அரசுக்கு பலமாக நிற்கிறார்கள் என்பது உறுதி.

தேவையற்று தமிழ்நாட்டில் வன்முறை வெடிக்காமல், சுமுகத்தீர்வை உச்சநீதிமன்றத்தின் மூலமே காண வேண்டும். நதி நீர்ப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். மத்திய அரசுக்கு மாநிலங்களை கட்டுப்படுத்த ஏற்கனவே இந்திய அரசியல் சட்டத்தில் 356 என்ற விதி உள்ளது என்பதை நினைவூட்டுவது நமது கடமை.

இதில் மத்திய அரசும் ஆளும் கட்சி மாநிலத்தில் எது என்ற கண்ணோட்டம் பாராது, நியாயத்தை நிரந்தரமாக்கும் போக்குடன் செயல்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக