வெள்ளி, 9 டிசம்பர், 2011

சர்தாரிக்கு மாரடைப்புடன், பக்கவாதம், முக வாதமும் ஏற்பட்டுள்ளது- தகவல்


Zardari
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் சர்தாரிக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து தற்போது அவருக்கு பக்கவாதமும், முகவாதமும் (facial paralysis) ஏற்பட்டுள்ளதாக புதிய தகவல் தெரிவிக்கிறது. இதனால்தான் அவர் உடனடியாக துபாய்க்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தானிலிருந்து வெளியான பத்திரிக்கைச் செய்தி தெரிவிக்கிறது.
மாரடைப்பு ஏற்பட்ட பின்னர் அவருக்கு பக்கவாதம் மற்றும் முகவாதம் ஏற்பட்டதாக அந்த செய்தி தெரிவிக்கிறது. இருப்பினும் சர்தாரியின் நிலை கவலைக்கிடமாக இல்லை என்றும் அவர் அபாய கட்டத்தைத் தாண்டி விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவரது உடம்புக்குள் ஏற்பட்டுள்ள ரத்தக் கசிவால் உயிருக்கு ஆபத்து ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தி நியூஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், சர்தாரிக்கு ஸ்பீச் தெரப்பி உள்ளிட்ட சில பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. அதன் பிறகே அவரால் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும். இதற்காகவே அவர் துபாய் கொண்டு செல்லப்பட்டுள்ளார். விரைவில் அவர் லண்டனுக்குக் கொண்டு செல்லப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று சர்தாரிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவருக்கு முகவாதமும் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் விமானம் மூலம் துபாய் கொண்டு செல்லப்பட்டார்.

இது பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.ஆனால்சர்தாரிக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்று அவரது செய்தித் தொடர்பாளர் மறுத்திருந்தார். ஆனால் சர்தாரிக்கு மாரடைப்பு ஏற்பட்டது உண்மையே என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே சர்தாரிக்கு உயர் ரத்தக் கொதிப்பு பிரச்சினை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக