வெள்ளி, 9 டிசம்பர், 2011

கொல்கத்தா மருத்துவமனையில் பயங்கர தீ- 73 பேர் பலி


Fire in South Kolkata
கொல்கத்தா:  தெற்கு கொல்கத்தாவில் உள்ள அம்ரி மருத்துவமனையின் அடித்தளத்தில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் திடீர் என்று தீப்பிடித்தது. இதில் 73 பேர் பலியாகியுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அம்ரி மருத்துவமனையின் அடித்தளத்தில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் திடீர் என்று தீப்பிடித்தது. இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் 70 பேரும், மருத்துவமனை ஊழியர்கள் 3 பேரும் பலியாகியுள்ளனர். தீப்பிடித்தவுடன் மருத்துவமனை அதிகாரிகள் அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறை வண்டிகள் 5 மணிக்கு தான் மருத்துவமனைக்கு வந்துள்ளன. சுமார் 25 தீயணைப்பு வண்டிகள் கொளுந்துவிட்டு எரிந்த தீயைப் பல மணி நேரம் போராடி அணைத்தன. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். நோயாளிகளைக் காப்பாற்றுவதற்காக ஐசியு, ஐசிசியு, ஐடியு ஆகியவற்றின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டன.

தகவல் அறிந்ததும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு மருத்துவமனை அதிகாரிகள் மீது எப்.ஐ.ஆர். போட உத்தரவிட்டார். இந்த விபத்தில் 40 பேர் பலியாகியுள்ளனர் என்பதை அவர் உறுதிபடுத்தினார். அதன் பிறகு பலி எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையின் அங்கீகாரத்தை அவர் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதிப் பந்தோபத்யாய தெரிவித்தார். இந்த விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தீப்பிடித்தவுடன் மருத்துவமனை ஊழியர்கள் நோயாளிகளை காப்பாற்றாமல் தாங்கள் மட்டும் ஓடிவிட்டனர். அதனால் பலர் மூச்சுத் திணறி உயிர் இழந்துள்ளனர் என்று இறந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இவ்வளவு பெரிய தீவிபத்தில் நோயாளிகள் மட்டும் தான் பலியாகியுள்ளனர். நோயாளிகள் மூச்சுத் திணறி சாகட்டும் என்று விட்டுவிட்டு ஓடிவிட்டனர் என்று ஒரு நோயாளியின் உறவினர் ஆவசமாகக் கூறினார்.

இந்த விபத்தால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை பொருட்களை அடித்து நொறுக்கினர். இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு கொடுக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொல்கத்தாவின் தகுரியா பகுதியில் உள்ள அம்ரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் 4 மாடிகளில் தீ பரவியது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில் மருத்துவமனை உரிமையாளர்கள் 6 பேர் போலீசில் சரண் அடைந்தனர். அவர்கள் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக