ஞாயிறு, 4 டிசம்பர், 2011

ஆசிரியர்களின் பாலியல் தொல்லையால் அரசு பள்ளி மாணவியர் அவதி

தர்மபுரி மாவட்ட அரசுப் பள்ளிகளில், சில ஆசிரியர்கள், மாணவியருக்கு செக்ஸ் டார்ச்சர் மற்றும் பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பல மாணவியர் இந்த பிரச்னையை வெளியில் சொல்லாமல் மூடி மறைப்பதால், தொடர்ந்து கிராமப் பகுதி பள்ளியில், "வேலியே பயிரை மேயும்' அவல நிலை நீடித்து வருகிறது.

கல்வி அறிவில் மிகவும் பின்தங்கிய தர்மபுரி மாவட்டத்தில், பெண் கல்வியின் நிலை, பெரும் கேள்விக்குறியாக இருந்து வருகிறது. அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம், பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக, ஐந்தாண்டுகளில் பெண் கல்விக்கு, அதிமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. பல பள்ளிகளில், ஆசிரியர்கள் மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் போக்கு, கிராமப் பகுதி பள்ளிகளில், அதிகம் நடந்து வருகிறது. இது தொடர்பாக, பிரச்னைகள் வரும் போது, சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஜாதி பின்னணி, அரசியல் செல்வாக்கு உள்ளிட்ட காரணங்களால், தப்பும் சம்பவம் அதிகம் நடந்து வருகிறது. ஆசிரியர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது, தர்மபுரி மாவட்டத்தில், அதிகம் நடப்பதை, சமூக ஆர்வலர்கள் பலர் வேதனையுடன் கூறி வருகின்றனர்.
சமீபத்தில், தர்மபுரியை அடுத்த வெங்கட்டம்பட்டியில், உடற்கல்வி ஆசிரியர் பொன்ராஜ், மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம், மாணவியர் மூலம் கலெக்டர் லில்லியின் கவனத்துக்கு வந்தது. அதிர்ந்து போன கலெக்டர் லில்லி, விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஆசிரியர் பொன்ராஜை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இது போன்று, மாவட்டத்தில் பல கிராமப் பகுதி பள்ளிகளில், ஆசிரியர்களின் பாலியல் தொல்லைகளுக்கு, பல மாணவியர் ஆளாகி, வெளியிலும், வீட்டிலும் சொல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.மலைக் கிராமங்கள் அதிகம் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில், 15 உறைவிடப் பள்ளிகள் உள்ளன. சித்தேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கல்நாடு கிராமத்தில், 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் சிலர் விவசாயம் செய்கின்றனர். வேறு பலர் வேலைதேடி வெளியூர் சென்று விடுகின்றனர். சித்தேரியிலிருந்து இக்கிராமத்திற்கு செல்ல வேண்டுமென்றால், 13 கி.மீ., வனப்பகுதியில் நடந்து செல்ல வேண்டும்.

இக்கிராமத்தில், அரசு பழங்குடியினர் உறைவிட துவக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில், 56 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இதில், சிவலிங்கம் தலைமையாசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர், தற்சமயம் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். உதவி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. பள்ளி சமையல்காரராக பன்னீர் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.இப்பள்ளியில் பயிலும் மாணவியரிடம், தலைமையாசிரியர் பாலியல் தொந்தரவு செய்வதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து புகார் செய்தும் நடவடிக்கை இல்லை என, மாணவியர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இது குறித்து, கல்வித் துறை அலுவலர் கூறியதாவது:பாதிக்கப்படும் மாணவியர், இது குறித்து புகார் கொடுக்க முன் வருவதில்லை. புகார் கொடுத்தால், விசாரணை நடத்தி நிச்சயம் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி, இது போன்று பாதிக்கப்படும் மாணவியர் புகார் கொடுக்கவும், மாணவியரின் எதிர்காலம் பாதிக்காதவாறு புகார் செய்வோர் பெயர்களை வெளியிடாமலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


-நமது சிறப்பு நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக