செவ்வாய், 13 டிசம்பர், 2011

இடுக்கி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் மீண்டும் இணைக்க வேண்டும்-பிரதமரிடம் 2 காங். எம்பிக்கள் கோரிக்கை


NSV Siddhan and JM Haroon
டெல்லி: வாக்கெடுப்பு நடத்தி இடுக்கி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பிக்கள் ஜே.எம்.ஆருண், என்.எஸ்.வி.சித்தன் ஆகியோர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரதமரை சந்தித்த இருவரும் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு உடனே தலையிட்டு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும் கேரளாவில் உள்ள இடுக்கி, தேவி குளம், பீர்மேடு பகுதிகளை மீண்டும் தமிழ்நாட்டுடன் சேர்க்க வேண்டும். இதற்காக அங்கு மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரை நிறுத்த வேண்டும் என்றும், அந்த அணை வலுவாகவே இருப்பதால் புதிய அணை கட்ட தேவை இல்லை என்றும் எடுத்துக் கூறினர்.

பின்னர் மத்திய அமைச்சர்கள் ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம் ஆகியோரையும் சந்தித்து அணைப் பகுதியில் பதற்றத்தைத் தணிக்க இரு மாநில அரசுகளையும் மத்திய அரசு அழைத்து பேச்சு நடத்த வேண்டும் என்றும் வற்புறுத்தினர்.

அதே போல ஏ.கே.அந்தோணியை விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்தாகூர் உள்ளிட்ட சில தமிழக எம்பிக்களும் சந்தித்துப் பேச்சு நடத்தினர். சந்திப்புக்குப் பின் மாணிக்தாகூர் கூறுகையில், இந்தப் பிரச்சனையில் ஏ.கே.அந்தோணி தலையிட்டு பதற்றத்தை தணிக்கும்படி வேண்டுகோள் விடுத்தோம்.

எங்கள் கருத்துகளை ஏற்றுக் கொண்ட ஏ.கே.அந்தோணி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரும் வரை இரு மாநிலங்களும் காக்க வேண்டும் என்று அந்தோணி தெரிவித்தார் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக