திங்கள், 28 நவம்பர், 2011

Punjab வேலைக்கு வந்தால் மொபைல் போன், சைக்கிள் இலவசம்:தொழிலாளர்களை கூவி அழைக்கின்றன நிறுவனங்கள்

லூதியானா:போதிய அளவில் ஊழியர்கள் கிடைக்காததால், பஞ்சாபில் உள்ள பிரபலமான சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட பல தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. ஊழியர்களை கவர்வதற்காக மொபைல் போன், சைக்கிள் ஆகியவற்றை இலவசமாகத் தரும் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பிரபலமான சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்கள், உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள நிறுவனங்களில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான் பெரும்பாலும் தொழிலாளர்களாக உள்ளனர். இது தவிர, பீகாரிலிருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர், பிழைப்பு தேடி, லூதியானாவுக்கு வருவதும் உண்டு. இவர்களுக்கு இங்குள்ள நிறுவனங்களில் உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும்.ஆனால், சமீபகாலமாக, பீகாரில் இருந்து, பஞ்சாபுக்கு தொழிலாளர்கள் வருவது கணிசமாகக் குறைந்துள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மாநிலத்தில் செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களால், பீகாரிலேயே அதிக வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

பீகாரில் இருந்து பஞ்சாப் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு பிழைப்புக்காக செல்வது, பெரிய அளவில் குறைந்துள்ளது. இதன் காரணமாக, லூதியானாவில் உள்ள சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு போதிய அளவில் ஊழியர்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. பல நிறுவனங்களில் ஊழியர்கள் இல்லாததால், இழுத்து மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஊழியர்களை கவர்வதற்காக, அவர்களுக்கு மொபைல் போன்கள், ரீசார்ஜ் கார்டுகள், சைக்கிள்கள் ஆகியவற்றை இலவசமாக வழங்குவதற்கு, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

இதுகுறித்து, லூதியானா சைக்கிள் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பு சங்கத்தின் முன்னாள் தலைவர் சாவ்லா கூறுகையில், "பீகாரில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாலும், கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தாலும், அங்கிருந்து வரும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால், ஊழியர்களை கவர்வதற்காக இலவசங்களைத் தர, சைக்கிள் நிறுவனங்கள் முன்வந்துள்ளன' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக