செவ்வாய், 15 நவம்பர், 2011

Kingfisher விஜய் மல்லையா: ஒரு நல்ல சேதி, ஒரு கெட்ட சேதி!

Viruvirupu

கடந்த வாரம் சிக்கலுக்குமேல் சிக்கலைச் சந்தித்த கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸின் இந்த வாரம், வாரத்தின் முதல் தினமான இன்று (திங்கட்கிழமை) இரு எதிரெதிரான சேதிகளுடன் ஆரம்பித்துள்ளது. ஒன்று நல்ல சேதி. மற்றையது கெட்ட சேதி.
கெட்ட சேதி, கிங்ஃபிஷருக்கு கடன் வழங்கும் பேங்குகள் மேலும் கடன் வழங்க கடும் நிபந்தனை ஒன்றை விதித்துள்ளன. நிறுவனத்தின் முதலீட்டில் மேலதிகமான 8 பில்லியன் ரூபாவை (159.6 மில்லியன் டாலர்) கொண்டு வந்தால்தான், மேற்கொண்டு கடன் வழங்க முடியும் என்று கூறிவிட்டன. பாரத ஸ்டேட் பேங்க் மனேஜிங் டைரக்டர் இந்தத் தகவலை இன்று வெளியிட்டுள்ளார்.
கிங்ஃபிஷருக்கு கடன் வழங்கும் 13 பேங்குகள், பாரத ஸ்டேட் பேங்க் தலைமையில்தான், இந்த நிறுவனத்துடன் டீல் பண்ணுகின்றன. இதனால், ஸ்டேட் பேங்கின் சொல், கிங்ஃபிஷருக்கு வேதவாக்கு!
விஜய் மல்லையா - ஒரு நல்ல சேதி, ஒரு கெட்ட சேதி!
நல்ல சேதி, இன்று காலை மும்பை பங்குச்சந்தை திறக்கப்பட்டு சிறிது நேரத்திலேயே கிங்ஃபிஷரின் பங்குகளின் விலை 7.6% எகிறியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மும்பை பங்குச்சந்தை மூடப்பட்ட நேரத்தில் 18% வரை சரிந்த பங்கு விலை திங்கட்கிழமை அதிகரிக்கத் தொடங்கியிருப்பது, நிறுவனத்துக்கு ஒரு நல்ல அறிகுறி.
திடீரென பங்கு முதலீட்டாளர்களுக்கு கிங்ஃபிஷர் பங்குகளின்மீது என்ன ஆர்வம்?
கிங்ஃபிஷர் நிறுவனம் தனது சொத்துக்களை விற்று முதலீட்டை அதிகரிக்க முன்வந்திருப்பதே காரணம். இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகத்தின் உச்ச மதிப்புள்ள மும்பை நகரில் கிங்ஃபிஷருக்கு நிலம் மற்றும் கட்டிடங்கள் சொத்துக்களாக உள்ளன.
கிங்ஃபிஷர் தனது சொத்துக்களில் சுமார் 6.5 பில்லியன் டாலர் (மில்லியன் அல்ல, பில்லியன்!) பெறுமதியுள்ள சொத்துக்களை விற்கலாம் என்று மும்பை வர்த்தக வட்டாரங்களில் பேச்சு அடிபடுகின்றது. அதையடுத்தே பலரும் கிங்ஃபிஷர் பங்குகளில் மேல் பாய்ந்து விழத் தொடங்கியுள்ளனர்.
இன்று காலை 0500 GMT நேரத்தில், கிங்ஃபிஷரின் பங்குகள் மும்பையில் 20.45 ரூபாவுக்கு விற்பனையாகிக் கொண்டிருந்தன.
இதை மும்பை முதலீட்டாளர்களுக்கு ஒரு திடீர் ஆர்வத்தால் ஏற்பட்ட வர்த்தக வீக்கம் என்றே ஊகிக்கலாம். குறுகிய கால லாபம் சம்பாதிக்க நினைப்பவர்கள் இந்த பண விளையாட்டில் விளையாடுகிறார்கள். கணிசமானவர்கள் இந்த வாரத்தின் முதல் இரண்டு தினங்களிலும் முதலீட்டின் 10 சதவீத லாபம்வரை சம்பாதிக்க முடியும்.
கிங்ஃபிஷரின் மும்பை சொத்துக்கள் பற்றி வில்லங்கமான நியூஸ் ஏதாவது வராத வரைக்கும், தாராளமாக விளையாடிப் பார்க்கலாமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக