வியாழன், 17 நவம்பர், 2011

Formula 1 பந்தயம்:ஏழைகளின் நாட்டில் பணக்காரத் திமிர்!

புத்தா கார் பந்தய மைதானம்
“இந்தியர்களுக்கு இனிமேலும் காபி தேவையில்லை; காப்பெச்சீனோ தான் தேவை” – பார்முலா 1 கார் பந்தையங்கள் குறித்து வலைபதியும் குணால் ஷா என்கிற ஆங்கில வலைபதிவர் சமீபத்தில் விடுத்திருக்கும் பிரகடனம்.
காபி கிடக்கட்டும், ஒழுங்காகத் தண்ணீர் விட்டாலே போதும் என்று நள்ளிரவில் குடங்களோடு ஊர்வலம் போகும் சாதாரண மக்களுக்கு காப்பெச்சீனோ பற்றி தெரிந்திருக்க நியாயமில்லை. அது ஒரு ஐரோப்பிய காபி வகை.
சென்ற மாதம் நடந்து முடிந்த பார்முலா 1 கார் பந்தயத்தைத் தொடர்ந்து இந்திய மேன்மக்களின் உலகமே பெருமிதத்தில் உப்பிப் பெருத்து தரைக்கு ஒரு அடி மேலாக மிதப்பதாகக் கேள்வி. அவர்களின் ‘ஆல் பாரின்; நோ இண்டியன்’ மூளைகள் காபியில் கூட காப்பெச்சீனோவுக்குக் குறைந்து சிந்திப்பதாயில்லை.
ஜே.பி குழுமம் என்கிற கட்டுமான நிறுவனம் தில்லியை அடுத்துள்ள நோய்டாவில் சுமார் 2500 ஏக்கர் விவசாய நிலத்தை வளைத்து அதில் 875 ஏக்கர் பரப்பில் அமைத்துள்ள புத்தா சர்வதேச வளையம் (Buddh international circuit)என்கிற கார் ரேஸ் பந்தைய மைதானத்தில் கடந்த அக்டோபர் 28-ம் தேதி துவங்கி 30-ம் தேதி வரை பார்முலா 1 கார் பந்தயத்தை நடத்தி முடித்துள்ளது. இதற்காகவும் யமுனை அதிவிரைவுச் சாலை அமைப்பதற்காகவும் சுமார் 334 கிராமங்களைச் சேர்ந்த நிலங்களை சாதாரண விவசாயிகளை ஏமாற்றி சல்லிசான விலைக்கு அமுக்கியிருக்கிறார்கள்.
இந்தியப் பெருமிதம் சர்வதேச அரங்கில் நிலைநாட்டப்படுவதைப் பற்றி ஏதுமறியாத அப்பாவி விவசாயிகளோ சதுர மீட்டருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட தொகை மிகக் குறைவானது என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக அளிக்கப்பட்ட உறுதிமொழியும் நிறைவேற்றப்படவில்லை, தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாகவும் அறிவித்து ஜே.பி குழுமத்தையும் இந்தியப் ‘பெருமிதத்தையும்’ எதிர்த்து போராடி வருகிறார்கள். இதையொட்டி இக்கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தொடுத்த வழக்கு ஒன்றில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சிர்பூர்கர், “பொதுநலனுக்காக சில தனிநபர்கள் தியாகம் செய்வது தவிர்க்க முடியாது” என்று ‘பஞ்சாயத்து’ பேசியிருந்தார். ஆயிரம் ஆனாலும் ‘பெருமிதம்’ சம்பந்தப்பட்ட விவகாரமென்றால் சும்மாவா?
விவசாயிகளின் எதிர்ப்புகளுக்கிடையே கடந்த மாத இறுதியில் நடத்தப் பட்ட முதல் பந்தயம் ஒருவழியாக இந்தியாவின் கவுரவத்தை சர்வதேச அளவில் உயர்த்தி விட்டதாக முதலாளித்துவ பத்திரிகைகள் புளகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கின்றன. இந்தப் புல்லரிப்பு  ஒன்றும் சாதாரணமாய் வந்து விடவில்லை. சுமார் 400 மில்லியன் டாலர்கள் (சுமார் 2000 கோடி ரூபாய்) செலவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள இந்த பந்தைய மைதானத்தில் விவசாயிகள் புகுந்து கடைசி நேரத்தில் ‘காரியத்தைக்’ கெடுத்து விடாமல் பார்த்துக் கொள்ள 35000 பேர் கொண்ட போலீசு படை குவிக்கப்பட்டிருந்தது.
பந்தயத்தைக் கண்டு களிப்புற தில்லியின் மேன்மக்கள் திரளாகக் குவிந்தனராம். 2,500 ரூபாயிலிருந்து 35,000 ரூபாய் வரை விற்ற நுழைவுச் சீட்டுகளைக் பெற்றுக் கொண்டு சுமார் 95,000 பேர் இந்த மூன்று நாட்கள் நிகழ்வை வேடிக்கை பார்த்துள்ளனர். பந்தய மைதானத்தின் பிரத்யேக பகுதியில் ‘அழகிகள்’ ஊற்றிக் கொடுக்கும் சீமைச் சாராயத்தைச் சப்பிக் கொண்டே வேடிக்கை பார்க்கும் நுழைவுச் சீட்டுகள் 2.5 லட்சம் ரூபாய் வரை விலை போயுள்ளது. கார்கள் பறப்பதைக் கண்டு கண்கள் களைத்துப் போனவர்களுக்கு பின் மாலை நேரத்தில் பாப் பாடகி லேடி காகாவின் (Lady Gaga) களிப்பூட்டும் பாடல்கள் – இதற்கான டிக்கெட்டுகள் சுமார் பத்து லட்சம் வரை விற்றுள்ளது.
ஆக, அண்ணா ஹசாரே பாயைச் சுருட்டிக் கொண்டு ராலேகான் சித்தியைப் பார்க்கக் கிளம்பியதன் பின் இப்போது தான் தில்லியின் மேன்மக்களுக்கு இளைப்பாறும் தருணம் வாய்த்திருக்கிறது. கடந்த ஆகஸ்டில் அண்ணாவுக்குத் திரண்ட சொற்ப கூட்டத்திற்கே தில்லி மாநகரத்தில் 35% குற்றங்கள் குறைந்ததாக போலீசு இலாக்கா சொன்னது. இப்போது அதைவிட அதிகமான அளவிலான மேன்மக்கள் கூட்டம் நோய்டாவில் குவிந்திருந்ததால் குற்றங்கள் 100 சதவீத அளவுக்குக் குறைந்திருந்தாலும் ஆச்சரியமில்லை.
பார்முலா 1 பந்தயம்:ஏழைகளின் நாட்டில் பணக்காரத் திமிர்! இப்படி இந்தியாவின் கவுரவக் கொடியை ஜே.பி குழுமம் கொடிமரத்தில் ஏற்றிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் நிம்மதியைக் குலைக்கும் துக்கச் சம்பவங்கள் ஒன்றிரண்டு நடக்கத்தான் செய்தன. மைதானத்தைச் சுற்றி போடப்பட்டிருந்த பல் அடுக்குப் போலீசு பாதுகாப்பு வளையத்தையும் மீறி பயிற்சி நாள் அன்றைக்குத் தெரு நாய் ஒன்று புகுந்திருக்கிறது. இதைக் கண்டு திடுக்கிட்ட பிரேஸிலைச் சேர்ந்த புருணோ சென்னா என்கிற ரேஸ் வீரர் போட்டி அமைப்பாளர்களை உஷார் படுத்தியுள்ளார். உடனடியாக தெரு நாய்களைக் கண்டுபிடித்து வெளியேற்ற ஒரு தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது. பந்தய மைதானத்தின் உள்ளே ரேஸ் வண்டிகளும் வெளியே நாய் வண்டிகளும் வலம் வர, ஒரு வழியாக போட்டியை சிறப்பாக நடத்தி முடித்துள்ளனர். நல்லவேளையாக இந்தியப் பெருமிதத்தின் மீது சொறி நாய் எதுவும் பின்னங்க்காலைத் தூக்கி மூத்ராபிஷேகம் செய்து விடும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே போட்டியின் துவக்க நாளன்று மெட்டாலிக்கா என்கிற பாப் இசைக் குழுவின் குத்தாட்ட நிகழ்ச்சியொன்றும் ஏற்பாடாகியிருந்தது. இதைக் காணவென்றே சுமார் 25,000 இரசிகர்கள் குழுமியிருக்கிறார்கள். ஆட்டம் ஆரம்பிக்க ஒரு சில நிமிடங்களே இருந்த நிலையில் மேற்படி நிகழ்வு சில தொழில்நுட்ப காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளியே பீர் பாட்டிலோடும் தேசபக்தியோடும் ஆவலோடு காத்துக் கிடந்த நேயர்கள், கைக்கெட்டியது வாய்க்கு எட்டாத ஆத்திரத்தில் பீர் பாட்டில்களை எரிந்து மேடையை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். டைம்ஸ் ஆப் இந்தியாவோ தில்லியில் குத்தாட்டம் நடத்த முடியாதது மாபெரும் தேசிய அவமானம் என்று அடுத்த நாள் பொங்கித் தீர்த்தது.
இப்படி ஒரு சில சில்லரைப் பிரச்சினைகளைத் தாண்டி பந்தயம் இனிதே நடந்து முடிந்தது. இப்போது சர்வதேச அளவில் இந்தியாவின் பணக்காரத்தனம் பறைசாற்றப்பட்டு விட்டதாகவும், இனிமேலும் ஐரோப்பியர்கள் இந்தியாவின் ஏழ்மையைக் காட்டி நம்மைப் பற்றி தாழ்வாக நினைக்க முடியாது என்றும் முதலாளித்துவ ஊடகங்கள் இறுமாப்புடன் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் பொருளாதார பலமும், இந்தியர்களின் கொண்டாட்ட விருப்பமும், செலவழிக்கும் வல்லமையும் உலகத்துக்கு பிரகடனம் செய்யப்பட்டு விட்டதாகவும், இந்தியர்கள் கட்டுப்பெட்டித்தனமிக்க கஞ்சர்கள் என்றோ, ஏழைகள் என்றோ இனிமேலும் வெள்ளைக்காரர்கள் நம்மைப் பற்றி ஏளனமாக கருத மாட்டார்கள் என்றெல்லாம் இப்பத்திரிகைகள் பெருமிதத்துடன் குறிப்பிடுகின்றன.
பந்தயக் களத்தில் தேசபக்தர் ஸ்ரீ விஜய் மல்லையா
இந்தியர்களின் சமீபகால செல்வச் செழிப்பு உலகறியாத சிதம்பர இரகசியமல்ல. இப்போது கூட போட்டியைக் கண்டுகளித்த இரசிகர்களில் நாளுக்கு 32 ரூபாய் சம்பாதிக்கும் இந்தியாவின் ஆகப் பெரும்பான்மையான வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் என்பது பற்றிய கணக்குகளை மாண்டேக் சிங்கும் மன்மோகன் சிங்கும் அறிவார்கள். பந்தயம் நடந்த மாயாவதியின் உ.பி மாநிலமும் இதற்கு முன்பே பிரபலமானது தான். 2006-ம் ஆண்டிலிருந்து இன்றைய தேதி வரை சுமார் 3000 குழந்தைகள் வைரஸ் காய்ச்சலுக்கு இறந்த செய்திகள் வந்து கொண்டு தானே இருக்கிறது?
இந்தக் கார்பந்தயம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் கூட சுமார் 500 குழந்தைகள் வரை ஒருவகை மூளைக்காய்ச்சலுக்கு (encephalitis) பலியான செய்திகளும் பத்திரிகைகளில் வந்தன. இப்படி சீரோடும் சிறப்போடும் சர்வதேச அளவில் ஒளிவீசி வரும் இந்தியாவின் கிரீடத்தில் சமீபத்தில் பதித்த வைரம் தான் பார்முலா 1 கார் பந்தயம்.
மட்டுமல்லாமல், இந்தப் பந்தயம் சிறப்பாக நடந்ததை முதலாளித்துவ பத்திரிகைகள் பாராட்டிக் கொண்டிருப்பதில் மேட்டுக்குடி இந்தியர்களின் இன்னுமொரு கல்யாண குணமும் குன்றிலேற்றிய தீபமாய் ஒளிவீசிப் பிரகாசிக்கிறது. பக்கத்தில் டெட்பாடியே கிடந்தாலும் சங்கடமேற்படாமல் ஃபுல் பிளேட் பிரியாணியை அலேக்காக உள்ளே தள்ளும் சொரணை கெட்டத்தனம் தான் அந்த சிறப்பு குணம். நாட்டின் ஆகப் பெரும்பான்மையான மக்கள் அன்றாடங்காய்ச்சிகளாய் வயிற்றுப்பாட்டுக்கும் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே நித்தம் நித்தம் அல்லாடிக் கொண்டிருக்கும் நிலையில் தங்கள் செழிப்பையும் வளப்பத்தையும் ஆபாசமாக வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டுமானால் சாதாரணத் திமிரும் கொழுப்பும் மட்டும் இருந்தால் போதாது – அதற்கென்று விசேடமான வன்மமும், வக்கிரமும் தேவை. அது இந்திய மேன்மக்கள் சமூகத்தில் கடந்த இருபதாண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருவது யாவரும் அறிந்த ஒன்று தான்.
மேற்படி நபர்களின் ‘பொதுநலனுக்காக’ நிலங்களைத் தியாகம் செய்து விட்டு வயிற்றுப்பாட்டுக்கு எதாவது வழி பிறக்குமா பிறக்காதா என்கிற நிச்சயமின்மையின் மத்தியில் அல்லாடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு மன்மோகன் மற்றும் முதலாளித்துவ பத்திரிகைகள் வாசிக்கும் தாலாட்டு இது தான் – ‘அதான் டிராக்டர்களும் மாட்டு வண்டிகளும் ஓடிய மண்ணில் லூவில் ஹாமில்டன்னையும் செபஸ்டியன் வெட்டேலையும் விட்டு விலையுயர்ந்த பந்தயக் கார்களை ஓட விட்டிருக்கிறோமே. நாடு வல்லரசாகுதுன்னு கனவு கண்டு கொண்டே தூங்குங்கள். அந்த ஈரத்துணியை கட்டிக் கொள்ள மட்டும் மறந்து விடாதீர்கள்!’

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக