வியாழன், 17 நவம்பர், 2011

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் திவால்:மல்லையா போதைக்கு இந்தியா ஊறுகாயா?

vinavu.com
அரசு உதவினால் மல்லையா தப்பிவிடுவார் என்று நம்பிக்கையூட்டுகின்றன. மல்லையாவின் ஊதாரித்தனமும் அவரது விமான நிறுவனத்தின் கையாலாகாத்தனமும் பல்லிளித்துக் கொண்டிருக்கும் நிலையில் சிவில் போக்குவரத்துத் துறைக்கு முன்னறிவிக்காமல் விமானங்கள் ரத்து செய்ததற்கும், பயணிகளைத் தவிக்க விட்டதற்கும், தனது நட்டத்தை வங்கிகளின் தலையில் சுமத்தியதற்கும் மல்லையாவைக் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என்று இப்பத்திரிகைகள் கோரவில்லை.
சாராய சாம்ராட் விஜய் மல்லையாவுக்கு அனேகமாக இந்நேரம் போதை தெளிந்திருக்க வேண்டும். அவரது விமான கம்பெனி காற்றில் கரைந்த கற்பூரமாய் ஆவியாகிக் கொண்டிருப்பதைப் பார்த்து மிரண்டு போயிருக்கும் மல்லையா யாரிடம் போய் அழுவார்? கழுதை கெட்டால் குட்டிச் சுவர் தானே.. அதனால் தான் மன்மோகனிடம் கேட்கிறார் – ‘மச்சி ஒரு கோட்டரு சொல்லேன்’. பொதுத்துறை நிறுவனங்களின் கையாலாகாத்தனத்தால் அல்லலுறும் மக்களின் நலனுக்காகவே தனியார்மயத்தை இந்தியாவுக்கு இழுத்து வந்து அறிமுகம் செய்வித்த மன்மோகன் சிங்கோ வெட்கமில்லாமல் மல்லையாவிடம் சொல்கிறார் – ‘உங்கள் கோரிக்கையை அரசு பரிவுடன் பரிசீலிக்கும்’ என்று.
கடந்தவாரம் திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் தனது விமான சேவையில் 50% அளவுக்கு ரத்து செய்தது மல்லையாவின் கிங்பிஷர் விமான நிறுவனம்.
அந்நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 100 பைலட்டுகள் பலமாதங்களாக சம்பளம் தராமல் இழுத்தடிக்கப்பட்டதால் திடீரென்று வேலையை இராஜினாமா செய்து விட்டார்கள் என்றும், எரிபொருள் நிறுவனங்கள் தொடங்கி விமான நிலைய வாடகை வரை திரும்பிய பக்கமெல்லாம் கடன் வைத்திருப்பதாகவும் இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ‘கைல காசு வாய்ல தோசை’ (cash-and-carry) என்கிற முடிவுக்கு வந்து விட்டதாலும் தான் மல்லையாவின் கிங்பிஷர் நிறுவனத்தால் விமானங்களை இயக்க முடியாமல் போனது என்று  செய்திகள் வெளியாகின.
2003-ம் ஆண்டு மல்லையாவால் நிறுவப்பட்ட கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், 2005-ம் ஆண்டு வாக்கில் தனது விமான சேவையைத் துவக்குகிறது. அன்றிலிருந்து இன்றைய தேதி வரையில் அந்நிறுவனம் தொடர்ச்சியாக நட்டக்கணக்கு தான் காட்டி வருகிறது. கிங்பிஷர் நிறுவனத்தின் மொத்தக் கடன் சுமார்  7000 கோடி ரூபாய்கள். இந்தக் கடன்கள் அனைத்துக்கும் அரசுத்துறை வங்கிகளும் சில தனியார் வங்கிகளும் உத்திரவாதப் பத்திரங்கள் அளித்திருக்கின்றது.
தற்போது ஒட்டுமொத்தமாக மட்டையாகிக் கிடக்கும் தனது மீன்கொத்திப் பறவையை மீண்டும் பறக்கவிட அரசின் உதவியை நாடியுள்ளார் மல்லையா. அவர் அரசாங்கத்தை அணுகியிருப்பதைக் கண்ட அவரது போட்டித் தரகு முதலாளிகள், ஆளுக்கொரு ஈயச்சட்டியைத்  தூக்கிக் கொண்டு வரிசை கட்ட ஆரம்பிக்கவே, ராகுல் பஜாஜ் உள்ளிட்ட தரகுமுதலாளிகள் அரண்டு போய் ‘கிங்பிஷர் விமான நிறுவனத்திற்கு பெயில் அவுட் கொடுக்கக் கூடாது’ என்று அலறுகிறார்கள். மல்லையாவோ, ‘நாங்கள் பெயில் அவுட் செய்யும்படி கேட்டதுமில்லை கேட்கப்போவதுமில்லை’ என்று சவடால் அடித்திருக்கிறார். இது ஒரு அண்டப் புளுகு.
மக்களை ஏமாற்றுவதிலும் அதற்கு அரசை உடந்தையாக்கிக் கொள்வதிலும் மல்லையாவுக்கு ஒரு பெரிய வரலாறே இருக்கிறது. தொண்ணூறுகளின் இறுதியில் மெக்டவல் க்ரெஸ்ட் பைனான்ஸ் என்கிற ஒரு பிளேடு கம்பேனியைத் துவக்கும் மல்லையா, நிரந்தர வைப்பு நிதிகளுக்கு பொதுத்துறை வங்கிகள் தருவதை விட அதிகமான வட்டியைத் தருவதாக வாக்களிக்கிறார். இதை நம்பிய அப்பாவி மக்கள் தங்களது பணத்தை இவரது நிறுவனத்தில் முதலீடு செய்கிறார்கள். இப்படி மக்களிடமிருந்து வசூலித்த முதலீட்டை தனது தாய் நிறுவனமான யுனைட்டெட் ப்ரூவரீஸுக்கு மாற்றிக் கொண்ட மல்லையா, மெக்டவல் க்ரெஸ்ட் நிறுவனத்தின் பெயரை மெக்டவல் ஃபின்லீஸ் என்று மாற்றி விட்டு மஞ்சக் கடுதாசி கொடுத்து மக்களுக்கு பட்டை நாமத்தை சாற்றியிருக்கிறார்.
இது தொடர்பான வழக்கு இன்றும் நடந்து வருகிறது. பல்வேறு மட்டங்களில் உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளைக் கைக்குள் போட்டுக் கொண்டு இந்த வழக்குகளை இழுத்தடித்து நீர்த்துப் போகச் செய்தும் விட்டார். அன்றைக்கு மெக்டவல் க்ரெஸ்ட் நிறுவனத்தின் நிதியை யுனைட்டெட் ப்ரூவரீஸுக்கு கள்ளத்தனமாக மாற்றிக் கொள்ளவும், அதற்கு நட்டக் கணக்கெழுதி நிறுவனத்தின் பெயரை மாற்றி மஞ்சக்கடுதாசி கொடுக்கவும் அரசு விதிகளையும் சட்டங்களையும் தளர்த்தியும் வளைத்தும் மல்லையாவுக்கு உதவியது ஆளும்வர்க்கம் தான். மெக்டவல் க்ரெஸ்ட் நட்டமடைந்து விட்டதாகவும் அதற்கு அரசு கைகொடுத்து (பெயில் அவுட்) உதவ வேண்டுமென்றும் மல்லையா வைத்த கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. இன்றுவரை மெக்டவல் க்ரஸ்டில் மக்கள் போட்ட முதலீடுகள் போன திசை இன்னதென்று தெரிந்தும் அரசு மௌனமாகவே இருந்து வருகிறது.
அடுத்து, தற்போதைய பிரச்சினையைப் பொருத்தமட்டில், கிங்பிஷர் என்றில்லாமல் தனியார் விமான நிறுவனங்கள் அனைத்துக்கும் 2004-ம் ஆண்டிலிருந்தே பல்வேறு வகையான சலுகைகளை அரசு அள்ளிக் கொடுத்துள்ளது. உள்நாட்டில் வருமானம் கொழிக்கும் வழித்தடங்கள் அனைத்தும் தனியார் நிறுவனங்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்த மன்மோகன் அரசு திட்டமிட்டே பொதுத் துறை நிறுவனமான இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை படுகுழிக்குள் தள்ளியது. அதுவும் போக, ஏர் இந்தியாவின் சக்திக்கும் மீறி 111 விமானங்களை அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து வாங்கும் ஒரு ஒப்பந்தத்தைப் போட்டதன் மூலமும், ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் இணைப்பின் மூலமும் இந்நிறுவனங்களை 20,000 கோடி ரூபாய் நட்டத்திலும் 46,000 கோடி ரூபாய் கடனிலும் சிக்கவைத்துள்ளனர்.
சந்தையில் தமக்குப் போட்டியாக இருந்த பொதுத்துறை நிறுவனங்களின் காலை ஒடிக்கச் செய்து விட்டு தான் தனியார் விமான நிறுவனங்கள் போட்டிக் களத்துக்கே வந்தன. இத்தனை சலுகைகளையும் மீறித்தான் கிங்பிஷர், ஜெட்ஏர்வேய்ஸ் உள்ளிட்ட தனியார் விமான நிறுவனங்கள் நட்டக்கணக்குக் காட்டுகின்றன. தற்போது பொதுத்துறை நிறுவனங்களின் காலை ஒடித்தால் மட்டும் போதாது, தலையில் பெரும் பாரத்தையும் தூக்கி வையுங்களேன் என்று மல்லையா கேட்கிறார். அதாவது, ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தமது டிக்கெட் விலைகளை உயர்த்த வேண்டுமாம். ஆக, ஏற்கனவே குழிக்குள் தள்ளி விட்டது மட்டும் போதாது, கூடவே மண்ணைப் போட்டு நிரவி விடுங்கள் என்பதே மல்லையாவின் கோரிக்கை.
இது ஒருபுறமிருக்க, கடந்த  மார்ச் மாதம் கிங்பிஷர் நிறுவனத்திற்கு கடனளித்த 13 வங்கிகள் அதன் 23.21% பங்குகளை வாங்கியுள்ளன. தனது 7000 கோடி கடனில் 750 கோடிகளை பங்குகளாக மாற்றி வங்கிகளின் தலையில் கட்டியுள்ளார் மல்லையா. அந்த சமயத்தில் கிங்பிஷர் நிறுவனப் பங்கு ஒன்றின் விலை 64.48 ரூபாய்களாக இருந்தது. தற்போது அதன் பங்கு மதிப்பு 19.65 ரூபாய்களாக வீழ்ந்திருக்கும் நிலையில் ஏற்கனவே தனது நட்டத்தை மக்கள் மேல் சுமத்தி விட்டார் மல்லையா. பெயில் அவுட் என்பது ஆறு மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்து விட்டது என்பதே உண்மை. துவங்கிய நாள் முதலாக நட்டத்திலேயே இயங்கிக் கொண்டிருப்பதாக சொல்லும் ஒரு நிறுவனத்தின் பங்குகளில் நூற்றுக்கணக்கான கோடி மக்கள் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய விமானப் போக்குவரத்தின் 83% தனியார் விமானக் கம்பெனிகளின் ஆதிக்கத்தில் தான் உள்ளன. பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவோ வெறும் 17% சந்தைக்குள் முடக்கப்பட்டுள்ளது. ஆக, எரிபொருள் கடன், வருமான வரியும் கட்டவில்லை, விமானநிலைய வாடகையில் கடன், விமானத்தில் தண்ணீர் சப்ளையில் இருந்து சாப்பாடு சப்ளை வரை செய்யும் அனைவரிடமும் கடன் என்று திரும்பிய பக்கமெல்லாம் கடனையும் வைத்துக் கொண்டு – அரசின் உதவியோடு பெரும் சதவீதத்திலான சந்தையையும் கைப்பற்றிக் கொண்டிருக்கும் நிலையிலும் கூட இந்தத் தனியார் விமான நிறுவனங்களால் லாபம் ஈட்ட முடியவில்லை என்பது தான் இவர்களின் யோக்கியதை.
இந்திய மக்கள் தொகையில் விமானச் சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அரை சதவீதத்திற்கும் குறைவு. இந்த சிறிய மக்கள் பிரிவினருக்கான சின்னஞ்சிறு சந்தையை விழுங்க தனியார் விமான நிறுவனங்களுக்கிடையே நடந்த நாய்ச்சண்டைகள் இன்றைக்கு அவர்கள் ஒரு முட்டுச் சந்துக்குள் சிக்கிக் கொண்டு விழிக்கும் நிலைக்கு ஆளாக ஒரு காரணம். அமித உற்பத்தியும் அதற்கான சந்தையைக் கைப்பற்ற நடக்கும் குத்துப்பிடி சண்டைகளுமே முதலாளித்துவ சந்தை விதி. இந்த விதிகளையும் அதிலிருக்கும் சவால்களையும் முதலாளிகள் அறிந்தேயிருக்கிறார்கள். அதையும் மீறி இந்த சொற்ப சந்தையையும் கபளீகரம் செய்து தானே தனியாய்த் தின்ன வேண்டும் என்கிற பேராசை தான் நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் போதும் புதிய விமானங்கள் வாங்க ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு ஒப்பந்தம் போட வைக்கிறது.
இன்னொரு பக்கம், மல்லையாவின் ஊதாரித்தனம் ஊரறிந்த இரகசியம். கடந்த மாதத்தில் மட்டுமே சரக்குப் பார்ட்டிகளில் கலந்து கொள்ள மூன்று முறை அமெரிக்காவுக்குத் தனி விமானத்தில் பறந்துள்ளார். ஒவ்வொரு முறையும் 70 லட்சங்களுக்குக் குறையாமல் செலவு செய்தும் உள்ளார். 89 மில்லியன் டாலர் (சுமார் 450 கோடி ரூயாய்) மதிப்பிலான சொகுசுக் கப்பலில் உலகத்தைச் சுற்றி வருவதும், அழகான மாடல்களை அம்மணமாய் நிற்க வைத்து காலண்டர்கள் வெளியிடுவதுமாக உல்லாசப் பிரியராக உலகத்தை வலம் வந்த மல்லையா துடிப்பான இந்தியாவின் குறியீடாகக் கருதப்பட்டவர். மேல் நடுத்தரவர்க்க யுப்பிகளின் கனவுக் கண்ணனாகவும், பணக்கார இந்தியர்களின் கொண்டாட்டப் பெருமிதமாகவும் கருதப்பட்ட மல்லையா, தனது விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பிய கடனையே திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கிறார் என்பது போல முதலாளித்துவப் பத்திரிகைகள் சோக கீதம் வாசிக்கின்றன.
உண்மையில் மல்லையாவின் சீமாச்சாராய தொழிலே சில ஆயிரம் கோடி சொத்து மதிப்புடையது. அரசாங்கங்களே குடியை கோவிலாக வளர்த்து வரும் நிலையில் மல்லையா இதில் சுருட்டும் லாபம் பல மடங்காகும். இது போக ஐ.பி.எல் பெங்களூரூ அணியினை ஏலமெடுத்து அதையும் இலாபகரமான தொழிலாக நடத்துவதையும் நீங்கள் அறிவீர்கள். மல்லையாவின் அம்மண அழகிகள் காலண்டர்களே பல கோடி செலவில் எடுக்கப்பட்டு பெரும் விளம்பரங்களுடன் விநியோகிக்கப்படுகின்றன. இத்தகைய கஸ்மாலத்துக்கு இந்திய மக்கள் பணத்தை கொடுத்து நட்டத்தை சரி செய்ய நினைப்பது அயோக்கியத்தனமில்லையா?
முதலாளித்துவம் அம்மணக்கட்டையாய் நின்று கொண்டிருக்கும் நிலையில் முதலாளித்துவப் பத்திரிகைகளோ ‘அதோ பாருங்கள் நம் மாமன்னர் ஜொலிக்கும் தங்க உடையணிந்து நகர்வலம் வருகிறார்’ என்று கதையளக்கின்றன. அரசு உதவினால் மல்லையா தப்பிவிடுவார் என்று நம்பிக்கையூட்டுகின்றன. மல்லையாவின் ஊதாரித்தனமும் அவரது விமான நிறுவனத்தின் கையாலாகாத்தனமும் பல்லிளித்துக் கொண்டிருக்கும் நிலையில் சிவில் போக்குவரத்துத் துறைக்கு முன்னறிவிக்காமல் விமானங்கள் ரத்து செய்ததற்கும், பயணிகளைத் தவிக்க விட்டதற்கும், தனது நட்டத்தை வங்கிகளின் தலையில் சுமத்தியதற்கும் மல்லையாவைக் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என்று இப்பத்திரிகைகள் கோரவில்லை.
இந்தச் சிக்கலில் இருந்து மல்லையாவை அரசு எவ்வாறு கைதூக்கி விடலாம் என்கிற ஆலோசனைகளைத் சொல்லிக் கொண்டுள்ளன. தனியார் விமானக் கம்பெனிகளில் அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவிப்பது, வரியைக் குறைப்பது, விமானங்களுக்கான எரிபொருள் விலையைக் குறைப்பது, விமான நிலைய வாடகையைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுத்து இத்துறையைக் காப்பாற்ற வேண்டுமென்று முதலாளித்துவ ஊடகங்கள் எழுதுகின்றன.
சுமார் 5 கோடி குடும்பங்களை வாழ வைக்கும் சில்லறை வணிகத்தில் பன்னாட்டுக் நிறுவனங்களை நுழைய விட்டதன் மூலம் அழிவுக்குள்ளாகியிருக்கும் அக்குடும்பங்களைக் காப்பாற்ற வேண்டுமென்றோ, மறுகாலனியாக்கப் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாய் அழிவின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருக்கும் விவசாயத்தையோ சிறு தொழில்களையோ காப்பாற்ற வேண்டுமென்றோ இந்தப் பத்திரிகைகள் இதுவரை கோரியதுமில்லை;  இவை குறித்துக் கவலைப்பட்டதுமில்லை. இப்போது ஒரு ஊதாரியின் நட்டத்தை மக்களின் தலையில் எவ்வாறு கட்டலாம் என்று பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றன. மன்மோகன் சிங்கோ ‘அரசு பரிவோடு பரிசீலிக்கும்’ என்கிறார். இது யாருக்கான அரசு என்பதில் இதற்கு மேலும் உங்களுக்குச் சந்தேகம் இருக்கிறதா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக