புதன், 23 நவம்பர், 2011

அன்னா ஒரு தீவிரவாதியா?காந்தியவாதியா ?

மது அருந்துவது நல்ல பழக்கம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அதற்காக, குடிப்பவர்கள் எல்லாரையும் தெருவிளக்கு கம்பத்தில் கட்டி வைத்து சாட்டையால் அடிக்க வேண்டும் என்று சொல்வது சரியாகுமா? அதுவும், அகிம்சை வழி நிற்கும் இரண்டாவது மகாத்மா என்று போற்றப்படும் அன்னா ஹசாரே சொல்லலாமா? சொன்னாலும் தவறில்லை,  அடித்தாலும் தவறில்லை என்கிறார் பெரியவர்.

லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை தூக்கில் போடவேண்டும் என்று சொன்னபோது அன்னா ஒரு காந்தியவாதியா அல்லது தீவிரவாதியா என்ற கேள்வி எழுந்தது. இப்போது குடிப்பவர்களுக்கு அரபுநாடுகளிலும் தலிபான் பிடியில் உள்ள ஆப்கானிஸ்தானிலும் அமலில் இருப்பதை போன்ற தடாலடி தண்டனை வழங்க சிபாரிசு செய்கிறார்.
அவரது கிராமத்தில் குடிகாரர்களை இப்படி தண்டித்து திருத்தியதாக அவர் விவரித்துள்ளார்.
பொது இடத்தில் கம்பத்தில் கட்டி வைத்து தண்டனை வழங்குவது இன்றைய காலத்துக்கோ சட்டங்களுக்கோ ஒத்துவராதே என்று கேட்டதற்கு, குழந்தைகளை பெற்றோர் அடித்து திருத்துவது போன்றதுதான் இந்த சிகிச்சை என்று படுசகஜமாக பதிலளித்துள்ளார். அம்மா அப்பா அடித்தால்கூட குழந்தைகள் புகார் கொடுக்கலாம் என்கிற அளவுக்கு சமுதாயத்தில் நேர்ந்துள்ள மாற்றங்களை அன்னா அறியவில்லையா, அறிந்தும் பொருட்படுத்தவில்லையா என்பது தெரியவில்லை.

மது அருந்துவது, உற்பத்தி செய்வது, விற்பது எல்லாம் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகள். உதாரணமாக தமிழக அரசுக்கு மிகப்பெரிய அளவில் வருமானம் ஈட்டித் தருவது டாஸ்மாக். இலவச திட்டங்கள் தொடங்கி பல்வேறு மக்கள் நல திட்டங்கள் அந்த வருமானத்தை நம்பியிருக்கின்றன. தொழிற்சாலைகளையும் கடைகளையும் அனுமதித்துவிட்டு நுகர்வோரை மட்டும் தண்டிக்க கோருவது அர்த்தமில்லாத வாதம்.

 இந்திய வரலாற்றில் இதுவரை குடிகாரர்களே இருந்ததில்லை என்பது போலவும் இன்றைய தலைமுறைதான் குடிபோதையில் மிதக்கிறது என்பதாகவும் அடிக்கடி அறிக்கை விடுவது சில அரசியல்வாதிகளுக்கு வாடிக்கையாகி விட்டது. அந்த வரிசையில் அன்னாவும் சேர்ந்துள்ளார். குடிப்பவர்களுக்கு அதற்கே நேரமில்லை என்பதால்  மறுப்பு எதுவும் அளிக்காமல் அமைதி காக்கின்றனர். அதை சாக்கிட்டு அன்னாவும் குடிமக்களை உசுப்பிவிட்டால், ஊழலுக்கு எதிரான அவரது போராட்டம் பிசுபிசுத்து விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக