வியாழன், 24 நவம்பர், 2011

7 மணி நேர மின்வெட்டு.. இருளில் தவிக்கும் மக்கள்- தொழில்கள் பாதிப்பு

தமிழ்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி குறைந்துள்ளதால் ஏழு மணி நேரம் மின் வெட்டு அமலாக்கப்படுகிறது. இந்த மின் வெட்டினால் மாநிலம் முழுவதும் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் மூன்று முதல் நான்கு மணிநேரமாக இருந்த மின்வெட்டு தற்போது 7 மணி நேரமாக அதிகரித்துள்ளது.
தமிழக மின் நிலையங்களின் மூலம் 3,560 மெகாவாட், தனியார் மின் நிலையங்களால் 940 மெகாவாட், மரபுசாரா எரிசக்தி மூலம் 100, காற்றாலைகளால் 1,150, மத்திய தொகுப்பால் 2,060 மெகாவாட் மின்சாரம் கிடைத்துள்ளது. 800 மெகாவாட் மின்சாரம், தனியாரிடமிருந்து வாங்கப்பட்டுள்ளது.
இதுபோக 3,700 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் கடும் மின்வெட்டு அமலாக்கப்பட்டு வருகிறது.
இதற்கு தமிழக மின்வாரியம் பல்வேறு காரணங்களை தெரிவித்து வருகிறது. நிலக்கரி இருப்பு குறைவு, பராமரிப்பு, நிலையங்களில் கோளாறு, தளவாட பொருட்களுக்கு பற்றாக்குறை என வரிசையாக காரணங்களை சொல்கிறார்கள்.
இதனால் சென்னை தவிர மாநிலத்தின் மற்ற பகுதிகள் பயங்கர மின் வெட்டை சந்தித்து வருகின்றன. கிட்டத்தட்ட 7 மணி நேரம் கரண்ட் இல்லை. மூன்று மணி நேரம் தொடர்ச்சியாகவும், பின்னர் 4 மணி நேரம் சுழற்சி முறையிலும் பவர் கட் ஆகிறது.
சென்னையில் தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே மின்வெட்டு அமலாக்கப்படுகிறது.
தொழிற்சாலைகளில் பாதிப்பு:
இதனால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது கோவை, திருப்பூர், ஈரோடு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் தான்.

பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதனால், பண்டிகை காலத்தில் மேற்கொள்ளப்படும், நாள்காட்டி, ஆயத்த ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவற்றின் உற்பத்தி பணிகள், மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளன.
இதற்கிடையே, மின் வெட்டோடு, விரைவில் மின் கட்டணத்தையும் தமிழக அரசு உயர்த்தவுள்ளது.
மின் கட்டணத்தை உயர்த்தச் சொல்லி தமிழக மின் வாரியம் சார்பில் கடந்த 17ம் தேதி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது வரும் 25ம் தேதி, ஆணைய சேர்மன் கபிலன் முன் விசாரணைக்கு வருகிறது. மின் வாரியம் சார்பில் அதன் தலைவர் ராஜிவ் ரஞ்சன் ஆஜராகி விளக்கம் சொல்வார்.
இதையடுத்து மின் கட்டணத்தை அதிகரிக்க ஆணையம் அனுமதி வழங்கும் என்று தெரிகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக