ஞாயிறு, 6 நவம்பர், 2011

கலைஞருக்கு உண்மை தொண்டனின் கடிதம்

தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, கட்சியின் உண்மையான உடன்பிறப்பு' என்ற பெயரில், எட்டு பக்க கடிதம், அனுப்பப்பட்டுள்ளது. அதன் சுருக்கம்:"உடன் பிறப்பே' என நீங்கள் அழைக்கும் பாசச் சொற்களைக் கேட்டவுடன், எங்கள் உடம்பில் மயிர்க்கால்கள் எழுந்து நிற்கும். உங்கள் கடிதங்களைப் பார்த்தாலே, உணர்வுப்பூர்வமான தெம்பு உண்டாகும்.

இதெல்லாம் பத்தாண்டுகளுக்கு முன், நாங்களெல்லாம் அவசரநிலை காலத்திலும், எம்.ஜி.ஆர்., ஆட்சியிலும், குடும்ப நன்மை எதையும் கவனிக்காமல், கழகம், கலைஞர் என, பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர்கள். இன்று நாங்கள், தி.மு.க.,வில் அன்னியப்பட்டுள்ளோம்.வேலு, ஜெகத்ரட்சகன், சாத்தூர் ராமச்சந்திரன், சேடப்பட்டி முத்தையா, முத்துசாமி, சின்னசாமி, ரகுபதி, சத்தியமூர்த்தி, செல்வகணபதி, கருப்பசாமிபாண்டியன், கம்பம் செல்வேந்திரன், அழகு திருநாவுக்கரசு, தென்னவன், மைதீன்கான், இந்திரகுமாரி, கே.பி.ராமலிங்கம், அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு என, அ.தி.மு.க.,விலிருந்து வந்தவர்களுக்குத் தான் இன்று தி.மு.க.,வில் முதல் மரியாதை.


நாங்கள், சுயமரியாதைக்காரர்கள். தனி மனிதர்களின் பலவீனங்களை அறிந்து, சேவை செய்யும் பழைய அ.தி.மு.க.,வினர் போல எங்களால் இருக்க முடியாது.இன்று தி.மு.க.,வில் பல அதிகார மையங்கள் உள்ளன. ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, தமிழரசு, ராஜாத்தி, செல்வி, அவரது மருமகன் ஜோதி, உதயநிதி, சபரீஷ், மாறன் சகோதரர்கள், அழகிரியின் பிள்ளைகள் வரை, கட்சியில் கோலோச்சுகின்றனர். இவர்கள் மனது வைத்தால் தான், மந்திரி, எம்.பி., - எம்.எல்.ஏ., கட்சிப் பதவிகள் எல்லாம் கிடைக்கும். இவர்களுக்கு வேண்டிய பணிகளை, அ.தி.மு.க.,விலிருந்து வந்தவர்கள், சமயமறிந்து செய்வதால் தான், அவர்களை உங்கள் குடும்பத்தினருக்குப் பிடித்துவிட்டது. கட்சியில் என்ன நடக்கிறது என்பதே, அன்பழகனுக்கோ, வீராசாமிக்கோ தெரிவதில்லை.

அ.தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர் எஸ்.டி.எஸ்.,சோடு இருந்த ராஜாசங்கர் தான், தற்போது ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருக்கிறார். நெருக்கடியான நேரத்தில் ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருந்த வர்கள் இப்போது எங்கே என்பதே தெரியாமல் போய்விட்டது. அழகிரியுடனான சகோதர யுத்தத்தில், தன்னை நம்பியவர்களை காப்பாற்றாத ஸ்டாலின், எப்படி கட்சியைக் காப்பாற்றப் போகிறார்?

போன் ஒட்டுக் கேட்பில் அமைச்சர் பதவியை இழந்த பூங்கோதைக்கு, மீண்டும் வாய்ப்பு கிடைத்ததற்கு கனிமொழி தான் காரணம் என்பது, அனைவரும் அறிந்ததே. தலைவரையும், கட்சியையும் விமர்சித்து வெளியேறிய ஆலடி அருணா மகள் பூங்கோதைக்கும், தி.மு.க.,வுக்கும் என்ன சம்பந்தம்? அவசரநிலைக் காலத்தில், இந்திராவையே சவாலுக்கு அழைத்த உங்களால், தற்போது, குடும்ப உறுப்பினர்களைக் கூட கட்டுப்படுத்த முடியவில்லையா?

மு.க.முத்துக்காக எம்.ஜி.ஆரை இழந்தீர்கள். ஸ்டாலினுக்காக வைகோ வெளியேற்றப்பட்டார். முகலாய பேரரசில் தந்தைக்கும், பிள்ளைகளுக்கும் நடந்த சண்டைகளைப் பற்றி செய்திகள், இன்றைக்கும் வரலாற்றில் உள்ளன. அந்நிலை தி.மு.க.,வுக்கும் வந்துவிடக் கூடாது என்ற பயத்தில், கட்சி உறுப்பினர் உரிமைச் சீட்டு வைத்துள்ள தகுதியால், இதை உங்களிடம் மூடி மறைக்காமல் சொல்கிறோம்.

சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம், அவரது மகன் ராஜா; விழுப்புரத்தில் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி; கோவையில் பழனிசாமி, அவரது மகன் பாரி; ஈரோட்டில் ராஜா, திருச்சியில் நேரு, தம்பி ராமஜெயம்; கடலூரில் பன்னீர்செல்வம்; தஞ்சையில் பழனிமாணிக்கம், அவரது தம்பி; ராமநாதபுரத்தில் சுப.தங்கவேலன், மகன் சம்பத்; மதுரை, தேனி, சிவகங்கையில் அழகிரி, அவரைச் சார்ந்தவர்கள்; நெல்லையில் கருப்பசாமிபாண்டியன், அவரது மகன் சங்கர்; ஆவுடையப்பன், அவரது மகன் பிரபாகரன்; குமரியில் சுரேஷ்ராஜன், அவரது மனைவி பாரதி என, பரிவாரங்களின் கீழ் எங்களைப் போன்ற தொண்டர்கள் பணியாற்ற முடியுமா?

தொடர்ந்து 15 ஆண்டுக்கும் மேல் மாவட்டச் செயலர்களாக இருப்பவர்கள், குறுநில மன்னர்கள் போல, எங்களை மதிப்பதில்லை. பண்பாடற்ற முறையில் நடந்துகொள்ளும் இவர்களிடையே, உட்கட்சி ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியுமா?இந்த விவரங்கள் எல்லாம் உங்களுக்கு நன்கு தெரியும். இவற்றைப் போக்கும் வழியும், ஆற்றலும் உங்களுக்குத் தான் உண்டு. குடும்ப பாசத்திலிருந்து மீண்டு வாருங்கள் தலைவரே! எங்களைப் போன்ற தொண்டர்கள், உங்களைப் பாதுகாப்பர். அப்படி இல்லையென்றால், வரலாறு உங்களைப் பழிக்கும்.தமிழினத் தலைவர் என்ற பட்டத்தை எதிர்கால சமுதாயம் ஏற்காமல், வெறும் குடும்பத் தலைவர் என்ற பட்டத்தைத் தான் வழங்கும்.இப்படிக்கு,உங்கள் உடன்பிறப்புகள்.

- நமது நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக