வியாழன், 3 நவம்பர், 2011

கனடாவில் தீபாவளிக் கொண்டாட்டத்தை குழப்ப முனையும் புலிப் பினாமிகள்!


கனடிய அரசு இதனை அனுமதிக்குமா?
- இந்திரஜித்
deepavali invitation2010ம் ஆண்டு கனடாவில் இலங்கையர் சமூகத்தால் தீபாவளி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் - சிங்கள – முஸ்லீம் சமூகங்களின் மக்கள், குடும்பம் குடும்பமாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். அத்துடன் கனடிய அரசின் பிரதிநிகளும் அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு கௌரவமளித்தனர்.
அந்தத் தீபாவளி நிகழ்வுக்கு ஒரு சிறப்பான அர்த்தம் இருந்தது. அதாவது தீபாவளித் திருநாள் என்பது, மக்களுக்கு கொடுமை செய்த நரகாசுரனை அழித்த நாளை நினைவுகூர்ந்து கொண்டாடப்படும் ஒரு நாளாகும். அதேபோல மக்களுக்கு சொல்லொணா கொடுமைகள் புரிந்து வந்த நவீன நரகாசுரர்களான புலிகளை, 2009 மே மாதத்தில் இலங்கை இராணுவம் அழித்தொழித்து மக்களைத் துன்பத்தினின்றும் மீட்டது. அதன் பின்னர் கொண்டாடப்பட்ட முதலாவது தீபாவளி என்றபடியினால், 2010 தீபாவளிக் கொண்டாட்டத்தில் அதிகளவு கனடிய இலங்கையர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். கடந்த வருடம் போலவே இவ்வருடமும் கனடாவில் அதே இடத்தில் (Korean Cultural Centre, 1133 Leslie Road, North York, Toronto) 2011 நவம்பர் 06ந் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு தீபாவளியைக் கொண்டாடுவதற்கு இலங்கையர்கள் இன மத மொழி வேறுபாடின்றி ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். கடந்த வருடத்தைவிட அதிகமானதும் சிறப்பானதுமான கலாச்சார நிகழ்ச்சிகள் ஏறபாடு செய்யப்பட்டுள்ளதுடன், அதிகளான மக்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளித் தயாரிப்புகள் இவ்வாறு களைகட்டி வருகையில், இதைக்கண்டு பொறுக்கமுடியாத கனடாவிலுள்ள புலிப் பினாமிகள் இந்த மக்கள் கலாச்சார நிகழ்ச்சியைத் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக குழப்பும் சதி வேலைகளைத் திரை மறைவில் செய்து வருவதாகத் தகவல்கள் கசிந்து, அது பாதுகாப்புத்துறைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் அமைதியானதொரு சமய கலாச்சார நிகழ்வைக் குரூர எண்ணத்துடன் குழப்ப முனையும் புலிகளின் செயற்பாடு, அனைத்து மக்களையும் வெறுப்பிலும் கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்த சட்ட விரோத வன்முறை செயற்பாடு குறித்து, ஜனநாயக விழுமியங்களை உயர்த்திப் பிடித்து வரும் கனடிய அரசு என்ன செய்யப் போகின்றது என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கனடிய மண்ணிலும் புலிகளின் அராஜக செயற்பாடுகளை கனடிய அரசு அனுமதிக்கப் போகின்றதா என்பதே மக்களின் கேள்வி!

புலிகளின் குழப்ப வேலைக்கு அவர்கள் கூறும் காரணம், தீபாவளி தமிழர்களுக்குரிய நாள், அதை சிங்களவர்கள் கொண்டாடக்கூடாது என்பதே. இதுபோன்ற நகைப்புக்கிடமான கருத்துக்களால்தான் புலிகளும் சரி அவர்களது முன்னைய தமிழ் தலைமைகளும் சரி மக்களை முட்டாள்களாக்கி வந்துள்ளனர்.

முதலாவது தீபாவளி என்பது தமிழர்களின் திருநாளன்று. அது தமிழர்கள் மத்தியில் இடையில் செருகப்பட்ட ஒன்று. அது இந்துக்களின் திருநாள் என்பதால், அது உருவான இந்தியாவில் தமிழர்கள் மட்டுமின்றி, அனைத்து இனங்களையும் சேர்ந்த இந்துக்களும் அதைக் கொண்டாடுகின்றனர். இன்னும் சொல்லப்போனால் தமிழர்களைவிட, வட இந்திய இந்துக்களே தீபாவளியை அதிகம் கொண்டாடுகின்றனர். கனடாவிலும்கூட, இலங்கைத் தமிழர்களை விட, இந்திய இந்துக்களே தீபாவளியைச் சிறப்பாகவும் உரிய முறையிலும் கொண்டாடுகின்றனர். அவர்கள் கொண்டாடும் தீபாவளிக் கொண்டாட்டத்திலேயே வழமையாக கனடியப் பிரதமரும் அமைச்சர்களும் கலந்து கொள்வது வழமை.

இலங்கைத் தமிழர்கள் தீபாவளியைப் புரிந்து கொண்டது என்னவென்றால், அன்றைய தினத்தில் தலைமுழுகி புத்தாடை அணிவது, மது அருந்துவது, மாமிசம் சமைத்து உண்பது என்பவைதான். ஆனால் தீபாவளிக்கு உண்மையான உரித்தாளர்களான இந்திய இந்துக்களின் தீபாவளிக் கொண்டாட்ட முறைகள் வேறு விதமானவை. அதிகமான சமய புனிதத் தன்மை வாய்ந்தவை.

அதேநேரத்தில், தீபாவளி என்பது சமய நிகழ்வு என்பதற்கும் அப்பால், அது ஒரு அநீதியாளனை ஒழித்த நாளின் குறியீடு என்ற வகையில், அதை எந்த இனத்தவரும் மதத்தவரும் கொண்டாடுவதற்கு உரிமையுண்டு. அதிலும் இந்தியாவையே தமது தாய் மண்ணாகவும், இந்து மதத்துடன் நெருங்கிய தொடர்பையும் கொண்டுள்ள, இலங்கையின் பௌத்த சிங்கள மக்களுக்கு தீபாவளியை கொண்டாடுவதற்கு முற்றுமுழுதான உரிமையுண்டு. அதை எந்தவொரு புலிகளினாலோ அல்லது எலிகளினாலோ தடுத்து நிறுத்த முடியாது.

ஏற்கெனவே எமது தாய்த்திருநாடான இலங்கையில,; தமிழ் மக்கள் தமது இல்லங்கள் தோறும் கொண்டாடும் தீபாவளிக் கொண்டாட்டங்களில,; தமது அயலிலுள்ள சிங்கள – முஸ்லீம் மக்களையும் அழைத்து அதை ஒரு இன ஐக்கிய நிகழ்வாகக் கொண்டாடுவதும், அதேபோல சிங்கள – முஸ்லீம் மக்களும் தமது சமய கலாச்சார நிகழ்வுகளில் தமிழ் மக்களை அழைப்பதும், தொன்றுதொட்டு இருந்து வரும் ஒரு நடைமுறையாகும். இந்த உண்மை, தாயகப் பண்புகளையும் கலாச்சாரங்களையும் புரிந்து கொள்ளாத கனடிய சருகு புலிகளுக்கு எங்கே புரியப்போகின்றது.

புலம்பெயர் நாடுகளில் புலிகளின் செல்வாக்கு நாளுக்குநாள் அதள பாதாளத்தை நோக்கி சரிந்து வருகையில், தமது வசூல் நடவடிக்கைகளை மீண்டும் தட்டி நிமிர்த்துவதற்காகப் போடும் ஆர்ப்பாட்டங்களே இந்த வகையான தீபாவளி கொண்டாட்டத்தைக் குழப்புவது போன்ற நடவடிக்கைகளாகும். கனடியப்  புலிகளின் மக்கள் செல்வாக்கை, அவர்கள் அண்மையில் ரொறன்ரோவில் நடாத்திய ‘பொங்கு தமிழ்’ நிகழ்வு நன்கு எடுத்துக் காட்டியது. பெரிதாக விளம்பரம் செய்யப்பட்ட அந்த நிகழ்வில் சுமார் 2500 மக்களை மட்டுமே புலிகளால் வாகனங்களால் ஏற்றி இறக்க முடிந்தது. இத்தொகை, கனடாவில் வாழும் சுமார் 3 லட்சம் மக்களில் ஒரு வீதம் கூட இல்லை என்பது குறிப்பித்தக்கது. அந்த தோல்வியின், அவமானத்தின் கடுப்பில்தான், கனடியப் புலிகள் இலங்கை மக்களின் தீபாவளிக் கொண்டாட்டத்தைக் குழப்பும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதற்காக அங்கு வாழும் தமிழ் மக்களை மிரட்டும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

2009ல் வன்னியில் புலிகள் முற்றுமுழுதாக அழிக்கப்பட்ட பின்னர் சோர்ந்து துவண்டு போயிருந்த கனடியப் புலிகள், மீண்டும் தமது அராஜக நடவடிக்கைகளை கனடிய மண்ணில் ஆரம்பித்துள்ளனர். அதற்கக் காரணம், அண்மைக்காலமாக கனடிய அரசாங்கம் இலங்iயில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்ற தவறான கணிப்பில் எடுத்து வரும் நிலைப்பாடும், விடுத்து வரும் அறிக்கைகளுமே. கனடாவின் இந்த தவறான செயற்பாடுகளை, கனடிய புலிகள் கனடிய அரசின் தமக்கான அங்கீகாரமாக எடுத்துக் கொண்டு, பழையபடி தமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர். இதனால் புலிகளின் அழிவுக்குப் பின்னர் கடந்த இரு வருடங்களாக சற்று நிம்மதியாக இருந்த கனடியத் தமிழ் மக்கள் மீண்டும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.

எனவே கனடிய அரசுதான் தனது தவறான நிலைப்பாட்டை மீள் பரிசீலனை செய்து, கனடியப் புலிகளின் செயற்பாடுகளைக் கண்காணித்து, கனடிய தமிழ் மக்கின் அச்சத்தைப் போக்க வேண்டும்.

எது எப்படியிருந்த போதிலும், இம்முறை கனடாவில் நடைபெறும் தீபாவளி கொண்டாட்டத்தில், கனடாவில் வாழ்கின்ற அனைத்து இலங்கையர்களும் இன மத மொழி வேறுபாடின்றிக் கலந்து கொள்வதன் மூலம், ‘நாம் இலங்கையர்கள்’ என்ற எமது உணர்வையும், எமது தேசியப் பெருமிதத்தையும் நிலநாட்ட வேண்டும்
.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக