திங்கள், 7 நவம்பர், 2011

தினமலர் கொஞ்சி மகிழ்கிறதா? கருணாநிதி ஆவேசம்

சென்னை: ""கண்ணனைக் கொல்ல வந்த பூதகி போல, தினமலர் பாசமொழி பேசுவதைக் கேட்டு உடன்பிறப்புகள் யாரும் ஏமாற மாட்டார்கள். எச்சரிக்கையாகவே இருப்பர்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆவேசப்பட்டிருக்கிறார்.

"உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்களுக்கு' என்ற தலைப்பில், தி.மு.க., நிர்வாகிகளிடையே எட்டு பக்கங்கள் கொண்ட கடிதம் வினியோகிக்கப்பட்டு வந்தது. இக்கடிதத்தின் சில பகுதிகள், கடந்த 6ம் தேதி(நேற்று) வெளியான, "தினமலர்' நாளிதழின் இரண்டாம் பக்கத்தில், "உடன்பிறப்புகள் கடிதம்' என்ற தலைப்பில் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது.

அந்த செய்தி தொடர்பாக, தி.மு.க., தொண்டர்களுக்கு கருணாநிதி நேற்று எழுதிய கடிதம்:"தினமலர்' நாளிதழ், தி.மு.க.,வை இடித்துச் சிதைத்து, குறுகலாக்குவதற்காக எடுக்கும் முயற்சிகளின் தொடர்ச்சியாக, உடன்பிறப்புகள் என்ற பெயரில் ஒரு கற்பனைக் கட்டுரையை வெளியிட்டுள்ளது.
அக்கட்டுரையின் உள்நோக்கத்தை உண்மையான உடன்பிறப்புகள் அனைவருமே உணர்ந்து இருப்பர்.ஏனென்றால், "தினமலர்' நம்மைக் கொஞ்சி மகிழ்வது; பூதகி; கண்ணனைக் கொஞ்சி மகிழ்வது போல் நடித்து, அவனைக் கொல்லவே துணிந்தாள் என்று மகாபாரதத்தில் உள்ள ஒரு கிளைக் கதை போன்றது தான். அந்த கிளைக் கதையின் தலையாய கதாபாத்திரமான பூதகியின் பாத்திரத்தைத்தான், "தினமலர்' நாளிதழ் தாங்கிக் கொண்டு, புறப்பட்டிருக்கிறது என்றால் அதில் துளியளவும் தவறில்லை.

அழகிய மங்கை உருவில் வந்து, தாய்ப்பாசம் காட்டுவது போல் நடித்து, கண்ணனை பால் அருந்தச் சொல்லி, அவனைக் கொன்றுவிட முற்பட்ட பாதகியான பூதகிக்கும், இன்று பசப்பு மொழி பேசி நம்மிடையே கசப்புணர்வை வளர்த்து, கட்சியை வீழ்த்த, பகல் கனவு காணும் படுபாவிகள் சிலருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.அந்தப் படுபாவிகள் பத்திரிகை வடிவத்தில் நம்மிடையே வருவர். அந்த விஷ நாகங்களில் ஒன்று, பச்சை பாம்பு வடிவெடுத்து, பச்சை வண்ண பசுங்கிளையில் தன்னை மறைத்துக் கொண்டு, பாசமொழி பேசுவதைக் கண்டு, கேட்டு, உடன் பிறப்புகள் யாரும் ஏமாற மாட்டார்கள்; எச்சரிக்கையாகவே இருப்பார்கள். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக