வெள்ளி, 11 நவம்பர், 2011

மக்கள் நலப்பணியாளர் நீக்கத்திற்கு கோர்ட் தடை - தமிழக அரசு நடவடிக்கைக்கு எதிரான உத்தரவு

சென்னை: அ.தி.மு.க., ஆட்சி அமைந்த பிறகு தி.மு.க., ஆட்சி காலத்தில் நியமனம் செய்யப்பட்ட மக்கள் நல பணியாளர்கள் 13 ஆயிரம் பேரை அதிரடியாக நீக்கியது. இதனால் ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த உத்தரவுக்கு எதிராக சங்க நிர்வாகி தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட் தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதித்தது. இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 1990ம் ஆண்டில் திமுக ஆட்சியில் 25 ஆயிரம் மக்கள் நல பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து 1991ம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் இவர்கள் நீக்கப்பட்டனர். பிறகு 1996ம் ஆண்டில் மீண்டும் திமுக ஆட்சியில் இவர்கள் மறு நியமனம் செய்யப்பட்டனர். பின்னர் 2001ம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் 2ம் முறையாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில கடந்த 2006ம் ஆண்டில் திமுக ஆட்சியில் 13 ஆயிரம் மக்கள் நல பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு சிறப்பு ஊதிய விகிதமாக 2,500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது.

கடந்த வாரம் 8ம் தேதி அனைவரையும் அரசு நீக்குவதாக அறிவித்தது. இதற்கு இந்த ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் சென்னை ஐகோர்ட்டில் சங்க நிர்வாகி பழநி மனுத்தாக்கல் செய்தார். மனுவை இன்று விசாரித்த நீதிபதி சுகுணா இடைக்கால தடை விதித்தார். அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி விளக்ககம் கேட்டும் அது வரை ( வரும் 21 ம் தேதி) இந்த தடை அமலில் இருக்கும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக