திங்கள், 28 நவம்பர், 2011

நிலநடுக்கத்தால் பெரியாறு அணைக்கு பாதிப்பில்லை' : மத்திய நிலநடுக்க ஆராய்ச்சியாளர்

அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், பெரியாறு அணைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அணைப் பகுதியின் அருகே வசிப்பவர்கள் அச்சப்படத் தேவையில்லை என, அணையை பார்வையிட்ட மத்திய நிலநடுக்க முதன்மை ஆராய்ச்சியாளர் ஜான் மத்தேயு தெரிவித்தார்.
கேரளாவில், அண்மையில் ஏற்பட்டு வரும் நிலநடுக்கத்தால் பெரியாறு அணை பாதிக்கப்பட்டுள்ளதாக, கேரள அதிகாரிகள் புகார் தெரிவித்தனர். இது, பெரியாறு அணையை ஒட்டியுள்ள வல்லக்கடவு, வண்டிப்பெரியாறு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், நிலநடுக்கத்தால் அணையின் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த, மத்திய நிலநடுக்க முதன்மை ஆராய்ச்சியாளர் ஜான் மத்தேயு நேற்று மாலை அணைப் பகுதிக்கு வந்தார். இவருடன், கேரள அரசு சார்பில் செயற்பொறியாளர் டோமி ஜார்ஜ், தமிழக அரசு சார்பில் செயற்பொறியாளர் ராஜேஷ் உடன் சென்றனர்.


மெயின் அணை, பேபி அணை முழுவதையும் ஆய்வு நடத்திய பின், ஜான் மத்தேயு கூறியதாவது: நிலநடுக்கத்தால் பெரியாறு அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அணைப் பகுதிக்கு அருகில் வசிப்பவர்கள் அச்சப்படத் தேவையில்லை. கேரளா முழுவதும் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாக உள்ளது. இனி வரும் காலங்களில் கூடுதலான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், பெரியாறு அணையைப் பாதுகாக்க வேண்டியது முக்கியமானது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக